“கோவில் அன்னதானத்தில் புழு.. ஜோசப் விஜய் அரசுக்கு பக்தர்கள் உயிர் முக்கியமில்லையா?” நயினார் கேள்வி
தூத்துக்குடி: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் மதியம் பரிமாறப்பட்ட அன்னதானத்தில் புழு இருந்ததாக வெளிவந்துள்ள காணொளி மிகுந்த அதிர்ச்சியளிப்பதாக பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார். ஜோசப் விஜய் அரசுக்கு திருக்கோவிலின் வருமானம் மட்டும் முக்கியம், பக்தர்கள் உயிர் முக்கியமில்லையா? என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் முருகன் கோயிலில் வழங்கப்பட்ட அன்னதானத்தில் புழுக்கள் இருந்ததாக பக்தர்கள் புகார் அளித்துள்ளனர். பக்தர்களுக்கு வழங்கப்பட்ட சாம்பாரில் புழுக்கள் இருந்த வீடியோ இணையதளத்தில் வெளியாகியுள்ளது.

இதுதொடர்பாக நயினார் நாகேந்திரன் தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "திருக்கோவில் அன்னதானத்தில் புழுவை நெளியவிட்ட ஜோசப் விஜய் அரசு! திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் இன்று மதியம் பரிமாறப்பட்ட அன்னதானத்தில் புழு இருந்ததாக வெளிவந்துள்ள காணொளி மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது. இரண்டு நாட்களுக்கு முன்பு திருச்செந்தூர் திருக்கோவிலின் சேவைக் கட்டணத்தை நான்கு மடங்கு உயர்த்தத் திட்டமிட்டதில் காட்டிய அக்கறையை அன்னதான உணவின் தரத்தில் காட்டாதது ஏன்? ஜோசப் விஜய் அரசுக்கு திருக்கோவிலின் வருமானம் மட்டும் முக்கியம், பக்தர்கள் உயிர் முக்கியமில்லையா?
அன்று முறுக்கு பாக்கெட்டு உற்பத்தித் தேதிக்கு ஆதாரம் கேட்ட இந்து அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் இன்று புழு நெளிந்ததாக எழுந்துள்ள புகாரை எளிதாகக் கடந்து செல்லக் கூடாது! உடனடியாக புகாரை தீர விசாரித்து, அன்னதான உணவின் தரத்தை உறுதி செய்ய வேண்டும் என முதல்வர் விஜய் தலைமையிலான அரசை வலியுறுத்துகிறேன்!" எனக் குறிப்பிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications