"செயல்படும் முதல்வரை பார்க்கிறேன்".. விஜய்க்கு துரை வைகோ பாராட்டு!
சென்னை: "ஒரு செயல்படும் அரசை பார்க்கிறேன்.. ஒரு செயல்படும் அமைச்சரவையை பார்க்கிறேன்.. ஒரு செயல்படும் முதல்வரை பார்க்கிறேன்.. செயல்படும் முதல்வராக இருக்கும் விஜய்க்கு நன்றி" என மதிமுக எம்.பி துரை வைகோ தெரிவித்துள்ளார்.
மதிமுக முதன்மைச் செயலாளரும், எம்.பி-யுமான துரை வைகோ அண்மையில் முதலமைச்சர் விஜய்யை சந்தித்தார். அப்போது தன் தொகுதிக்கு உட்பட்ட சில கோரிக்கைகளையும் முதலமைச்சர் விஜய்யிடம் முன்வைத்தார். தான் என்னென்ன கோரிக்கைகளை முதலமைச்சர் விஜய் முன் வைத்தேன் என்பதையும் செய்தியாளர்களிடம் கூறினார் துரை வைகோ. இதனைத்தொடர்ந்து தான் வைத்த கோரிக்கைகளை அடுத்த நாளே முதலமைச்சர் விஜய் செயல்படுத்த துவங்கிவிட்டார் என துரை வைகோ கூறியுள்ளார்.

திருச்சி மக்களவைத் தொகுதி தொடர்பாக மெட்ரோ ரயில், மருத்துவமனை போன்ற பல கோரிக்கைகளை தான் வைத்ததாகவும், கோரிக்கை வைத்த அடுத்த நாளில் இருந்து அதிகாரிகள் தன்னை தொடர்பு கொண்டு வேலைகளை துவங்கிவிட்டனர் என்றும் துரை வைகோ தெரிவித்துள்ளார்.
மேலும் பேசிய அவர், "எந்த ஒரு துறையிலும் தற்போது லஞ்சம் இல்லை. இது மிகப்பெரிய ஒரு புரட்சியாகவும் மிகப்பெரிய மாற்றமாகவும் நான் பார்க்கிறேன். பணி ஆணையாக இருக்கட்டும், அல்லது எந்தவொரு அனுமதி ஆகட்டும் இப்போது லஞ்சம் இல்லாமல் மெரிட் அடிப்படையில் செய்கிறார்கள்.
ஏற்கனவே மக்கள் தவெக மீதும் முதலமைச்சர் விஜய் மீதும் நம்பிக்கை வைத்து தான் வாக்களித்து இருக்கின்றனர். எனவே இதே நிலை தொடர்ந்தால் அடுத்த தேர்தலில் கண்டிப்பாக தவெக 35% அல்லாமல் 65 % வாக்குகளை பெறுவார்கள்" எனப் பாராட்டியுள்ளார்.
"முதலமைச்சர் விஜய் அவ்வளவாக பேசவில்லை என்றாலும் செயல்படும் முதலமைச்சராக இருக்கிறார். அது தான் மிக முக்கியமான விஷயம். வெற்று அறிக்கைகள் மட்டும் இல்லாமல், செயல்படும் அரசையும் செயல்படும் அமைச்சர்களையும் செயல்படும் முதலமைச்சரையும் நான் பார்க்கிறேன்." என துரை வைகோ தெரிவித்துள்ளார்.
சமீபகாலமாக மதிமுக, தவெகவுடன் நெருக்கம் காட்டி வருவதாகவும் எப்போது வேண்டுமானாலும் மதிமுக திமுக உடனான தங்களது கூட்டணியை முறித்துக்கொண்டு தவெக பக்கம் செல்லலாம் என்றும் பேச்சுகள் நிலவி வருகின்றன. அதற்கேற்ற வகையிலேயே மதிமுக தலைவர் வைகோ மற்றும் துரை வைகோவின் பேச்சுகளும் இருந்து வருகின்றன.












Click it and Unblock the Notifications