வேலையே செய்யாமல் அரசு பணம் ரூ.3.23 கோடி கொள்ளை? எ.வ.வேலு மீதான ஊழல் வழக்கில் அதிர்ச்சி தகவல்!
சென்னை: திமுக முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு மீதான ஊழல் வழக்கில், வேலையே செய்யாமல் அரசு பணம் கொள்ளையடிக்கப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் மற்றும் ஒப்பந்ததாரர்கள் கூட்டுச் சேர்ந்து, பணிகள் ஏதும் மேற்கொள்ளாமலேயே சாலை பணிகளை மேற்கொண்டதாக அரசு பணத்தை சுருட்டியுள்ளதாக அறப்போர் இயக்கம் அளித்த புகாரில் குறிப்பிடப்பட்டிருந்தது.
திமுக முன்னாள் அமைச்சரும், திமுக சட்டமன்ற கொறாடாவுமான எ.வ.வேலு வீடு மற்றும் அலுவலகங்களில் இன்று காலை முதலே லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர். சென்னை ஆழ்வார்பேட்டை வீடு, திருவண்ணாமலை வீடு மற்றும் கரூரில் அரசு ஒப்பந்ததார்களின் வீடு, அலுவலகங்கள் மற்றும் திருப்பூர் அரசு அதிகாரிகளின் வீடு உள்ளிட்ட சுமார் 20 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர்.

இந்த சோதனைக்காண பின்னணி குறித்த தகவல்கள் வெளியாகி உள்ளது. அறப்போர் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் ஜெயராம் வெங்கடேசன் கடந்த 2022 ஆம் ஆண்டு ஏப்ரல் 20 ஆம் தேதி லஞ்ச ஒழிப்புத்துறையிடம் 4 பக்கங்கள் கொண்ட புகார் மனு ஒன்றை அளித்திருந்தார்.
அதில், மார்ச் 2022ல் கரூர் மற்றும் பிற பகுதிகளில் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் மற்றும் ஒப்பந்ததாரர்கள் கூட்டுச் சேர்ந்து, பணிகள் ஏதும் மேற்கொள்ளாமலேயே சாலை பணிகளை மேற்கொண்டதாக அரசு பணத்தை சுருட்டியுள்ளதாகக் குறிப்பிடப்பட்டிருந்தது.
திருப்பூர் கட்டுமான மற்றும் பராமரிப்பு வட்டத்தில், கரூர் உபகோட்ட சாலை மேம்பாட்டுப் பணிகளுக்காக (TPR-007) கரூரை சேர்ந்த 'சங்கரானந்த் இன்ஃப்ரா' (Sankaranand Infra) நிறுவனத்திற்கு சுமார் 7 கோடி ரூபாய் மதிப்பிலான ஒப்பந்தம் வழங்கப்பட்டது என்றும் இதில் எந்தவொரு சாலையும் அமைக்கப்படாத நிலையில், 2022 மார்ச் 25 மற்றும் 28 ஆகிய தேதிகளில் மட்டும் 3.23 கோடி ரூபாய் நிதி முறைகேடாக விடுவிக்கப்பட்டுள்ளது என்றும் குறிப்பிட்டிருந்தனர். இது குறித்து லஞ்ச ஒழிப்பு போலீசார் நடவடிக்கை மேற்கொள்ளவில்லை.
இந்த முறைகேடு தொடர்பாக துறை ரீதியாக விசாரணை நடத்துவதாக கூறி கரூரைச் சேர்ந்த கோட்டப் பொறியாளர் சத்தியபாமா, உதவி கோட்டப் பொறியாளர் கண்ணன் உட்பட 4 அதிகாரிகளும், ஈரோடு நபார்டு மற்றும் கிராமப்புற சாலைகள் பிரிவைச் சேர்ந்த கோட்டப் பொறியாளர் நிதிலன் உட்பட 5 அதிகாரிகளையும் பணியிடை நீக்கம் செய்தனர். சத்தியபாமா பணிபலன்களை பெற்று ஓய்வு பெற்று விட்டார்.
இந்த முறைகேடு வெளிச்சத்திற்கு வந்த நிலையிலும், போலீசார் நடவடிக்கை எடுக்காமல் குற்றத்திற்கான ஆதாரங்களை அழிக்கும் நோக்கில், காவல்துறையின் பாதுகாப்போடு அதிகாரிகள் மற்றும் ஒப்பந்ததாரருடன் கூட்டுச் சேர்ந்து இரவோடு இரவாக அவசர அவசரமாக சாலை அமைக்க முயன்றதாகவும் புகாரில் குற்றம் சாட்டப்பட்டது.
இந்த நிலையில் புதிதாக முதலமைச்சர் விஜய் தலைமையில் தவெக ஆட்சி அமைந்துள்ள நிலையில், கடந்த ஆட்சியில் நடந்த ஊழல் குறித்து சட்டசபையில் பேசிய முதல் அமைச்சர் விஜய்யிடம், தைரியமிருந்தால் தங்கள் மீது நடவடிக்கை எடுத்துப் பாருங்கள் என்று சட்ட சபையில் திமுகவினர் கும்பலாக சவால் விட்டனர்.
இதையடுத்து திமுக எம்.எல்.ஏக்களின் கோரிக்கையை ஏற்று அறப்போர் இயக்கத்தின் புகார் மீது சட்ட நடவடிக்கை எடுக்க அரசு கடந்த 23 ஆம் தேதி அனுமதி வழங்கியது. இதனைத் தொடர்ந்து, லஞ்ச ஒழிப்புத்துறை தலைமையகம் ஜூன் 24 ஆம் தேதி இந்த ஊழல் குறித்து அதிகாரப்பூர்வமாக வழக்குப் பதிவு செய்துள்ளது.
அதன்படி கடந்த திமுக ஆட்சியின் போது நெடுஞ்சாலைத்துறை அமைச்சராக இருந்த எ.வ. வேலு, நெடுஞ்சாலைத்துறை ஒப்பந்ததாரரும், செந்தில் பாலாஜியின் நண்பருமான சங்கர் ஆனந்த் மற்றும் அதிகாரிகள் சத்தியபாமா உள்ளிட்ட11 பேர் மீது 10 பிரிவுகளின் கீழ் லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப் பதிவு செய்தனர். அதன் தொடர்ச்சியாக சம்பந்தபட்டவர்களின் வீடு மற்றும் அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications