வணிக சிலிண்டர்களுக்கான கட்டுப்பாடுகளை நீக்கியது மத்திய அரசு.. ஹோட்டல் உரிமையாளர்கள் நிம்மதி
சென்னை: வணிக சிலிண்டர்களுக்கான அனைத்து கட்டுப்பாடுகளையும் மத்திய அரசு நீக்கியுள்ளது. மேற்கு ஆசியாவில் போர் நிறுத்த ஒப்பந்தம் சீரான நிலையில் கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டுள்ளது. வணிக சிலிண்டர்களுக்கான கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டு இருப்பதால் வணிகர்கள் நிம்மதி அடைந்துள்ளனர். தற்போது கச்சா எண்ணெய் விலை குறைந்து இருப்பதால் எரிபொருள் விலை குறையுமா? என்ற எதிர்பார்ப்பும் வணிகர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.
ஈரான் - அமெரிக்கா போரால் வணிக சிலிண்டர்கள் விநியோகத்திற்கு மத்திய அரசு கட்டுப்பாடு விதித்தது. இதனால், 19 கிலோ எடை கொண்ட வர்த்தக சிலிண்டர்கள் கிடைக்காமல் வணிகர்கள் திண்டாடினர். பல இடங்களில் ஹோட்டல்கள் அடைக்கப்பட்டன. ஹோட்டல் உணவுகளை நம்பியிருந்த பேச்சுலர்கள், வெளியூர்களுக்கு அடிக்கடி பயணம் மேற்கொள்பவர்கள் என பலரும் இதனால் கடும் சிரமத்தை சந்தித்தனர்.

கட்டுப்பாடுகள் நீக்கம்
ஆனால், தற்போது அமெரிக்கா - ஈரான் இடையே முதல் கட்ட ஒப்பந்தம் ஏற்பட்டு ஹார்முஸ் ஜலசந்தி திறக்கப்பட்டு இருப்பதால், எண்னெய் விநியோகம் சீராக தொடங்கியுள்ளது. இதையடுத்து, வணிக எல்பிஜி சிலிண்டர்களுக்கான அனைத்து கட்டுப்பாடுகளும் உடனடியாக திரும்பப் பெறப்பட்டுள்ளதாக அசாம் தலைமைச் செயலாளர் ரவி கோட்டா வியாழக்கிழமை தெரிவித்தார்.
இது குறித்து அவர் கூறுகையில், "மேற்கு ஆசிய நிலவரத்தை ஆய்வு செய்த மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகம், வணிக பயன்பாட்டு எல்பிஜி சிலிண்டர்கள் விற்பனை மீதான கட்டுப்பாடுகளை தளர்த்த முடிவு செய்துள்ளதாக மாநில அரசுகளுக்கு அறிவித்திருப்பதாக" அவர் கூறினார்.
எரிபொருள் விலை குறையுமா?
இதுதொடர்பாக எக்ஸ் சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ள ரவி கோட்டா, வணிக பயன்பாட்டுக்கான எல்பிஜி சிலிண்டர் விநியோகத்தை போர் பதற்றத்திற்கு முந்தைய நிலைக்கு மீண்டும் கொண்டு வர மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும், இந்த முடிவு குறித்து அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு மத்திய பெட்ரோலியத் துறைச் செயலாளர் நீரஜ் மிட்டல் எழுதிய கடிதத்தையும் அவர் தனது பதிவில் பகிர்ந்துள்ளார்.
வணிக சிலிண்டர்களுக்கான கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டு இருப்பதால் வணிகர்கள் நிம்மதி அடைந்துள்ளனர். தற்போது கச்சா எண்ணெய் விலை குறைந்து இருப்பதால் எரிபொருள் விலை குறையுமா? என்ற எதிர்பார்ப்பும் வணிகர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.
மத்திய பெட்ரோலியத் துறைச் செயலாளர் நீரஜ் மிட்டல், மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:- வணிக மற்றும் தொழில்துறை பயன்பாட்டுக்கான அனைத்து எல்பிஜி நுகர்வோரின் விவரங்களையும் எண்ணெய் சந்தைப்படுத்தும் நிறுவனங்கள் (OMCs) தங்களது டேட்டா செண்டரில் தொடர்ந்து பதிவு செய்ய வேண்டும். இந்தியன் ஆயில், பாரத் பெட்ரோலியம், இந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகிய மூன்று எண்ணெய் நிறுவனங்களும் இணைந்து, துறைவாரியாக ஒருங்கிணைந்த தரவுத்தளத்தை பராமரிக்க வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.
ஏற்கனவே குழாய் வழி இயற்கை எரிவாயு (PNG) வசதிக்கு மாறியுள்ள வணிக மற்றும் மொத்த நுகர்வோர் தொடர்ந்து அதையே பயன்படுத்த வேண்டும் என்றும், பி.என்.ஜி வசதியை பெறும் தகுதி உள்ள அல்லது அதற்கு மாறும் பணியில் இருக்கும் மற்ற எல்பிஜி வாடிக்கையாளர்களும் நிரந்தரமாக பி.என்.ஜி பயன்பாட்டுக்கு மாற்றப்பட வேண்டும். இதற்காக, நகர எரிவாயு விநியோக நிறுவனங்களுடன் இணைந்து, எண்ணெய் சந்தைப்படுத்தும் நிறுவனங்கள் இந்த மாற்றத்தை தொடர்ந்து உறுதி செய்ய வேண்டும்" என்று தெரிவித்துள்ளது.19 கிலோ எடை கொண்ட வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை தற்போது ரூ.3,113.50 ஆக உள்ளது.














Click it and Unblock the Notifications