ஆளே இல்லாத கட்சிக்கு 8 சீட்டா? விசிக, தேமுதிகவுக்கு திமுக அதிக சீட் கொடுத்ததை விமர்சித்த வைகோ
மதுரை: திமுக கூட்டணியில் தேமுதிக, விசிக ஆகிய கட்சிகளுக்கு அதிக சீட் கொடுத்ததை மதிமுக பொதுச் செயலாளர் வைகோ விமர்சித்துள்ளார். காணாமல் போகக்கூடிய நிலையில் இருந்த கட்சிக்கு 10 சீட், ஒரு ராஜ்யசபா சீட், பல ஊர்களில் ஆளே இல்லாத ஒரு கட்சிக்கு 8 இடங்கள் கொடுத்தது திமுக என தேமுதிக, விசிகவை பெயர் குறிப்பிடாம் விமர்சித்துள்ளார் வைகோ.
திமுக கூட்டணியில் இருந்து மதிமுக வெளியேறுவதற்கு தயாராகி வருவது அக்கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ பேச்சின் மூலம் தெரியவருகிறது. தேர்தல் முடிவுகளுக்கு பிறகு வைகோ அவரது மகன் துரை வைகோ இருவரும் தவெகவுக்கு ஆதரவான நிலைப்பாட்டினை எடுத்துள்ளனர். இதன் மூலம் திமுகவில் இருந்து மதிமுக விலகுவதை அவர்கள் சூசகமாக வெளிப்படுத்தியுள்ளனர்.

சட்டமன்ற தேர்தல் முடிகளுக்கு பின்பாக, திமுக கூட்டணியில் நீண்ட காலமாக பயணித்து வந்த கட்சிகள், திமுக கூட்டணியில் இருந்து வெளியேறி தவெக அரசுக்கு ஆதரவு தெரிவித்துள்ளன. உதயசூரியன் சின்னத்தில் 4 இடங்களில் போட்டியிட்டு இரண்டு இடங்களை கைப்பற்றிய மதிமுக, தவெக பக்கம் செல்ல முடியாமல் இருந்தது. உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டது துரதிஷ்டவசமானது என்று துரை வைகோ பேசினார்.
இந்நிலையில், அருப்புக்கோட்டையில் நடைபெற்ற திருமண விழாவில் உரையாற்றிய மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, "காணாமல் போகக்கூடிய நிலையில் இருந்த கட்சிக்கு 10 சீட், ஒரு ராஜ்யசபா சீட். கிளைகள் கூட இல்லாத ஒரு கட்சிக்கு 8 இடங்கள் கொடுத்தது திமுக. கிளைகளே இல்லாத கட்சி விசிக. மேற்கு மற்றும் தெற்கு மாவட்டங்களில் ஆளே இருக்க மாட்டான்.
வட மாவட்டங்களில் சில பகுதிகளில் ஊருக்கு 10 பேர் கூட இருக்க மாட்டான். அந்த கட்சிக்கு 8 சீட் ஒதுக்கி நம்மை அவமானப் படுத்தினார்கள். சுய மரியாதையையும் தன்மானத்தையும் கொஞ்சம் இழந்துவிட்டு தான் திமுக கூட்டணியில் பயணித்தோம். என்னை போல் திமுகவை உயர்த்திப் பிடித்து பேசிய தலைவர் யாராவது உண்டா?
விஜய் இன்னும் ஒரு 6 மாத காலத்திற்குள் தன்னை முழுமையாக ஆயத்தப்படுத்திக் கொள்வார். விஜய்யிடம் கருத்தும் இருக்கிறது. காரமும் இருக்கிறது. தவெகவுடன் சேர்வதற்கு ரூ.50 கோடி பேரம் பேசினோமா? நானும் என் மகனும் அண்ணா சாலையில் அடுக்குமாடி குடியிருப்பு கட்டி விட்டோமா?
நரம்பில்லாத நாக்கு எது வேண்டுமானாலும் பேசும் என்பது போல் ஒருவர் பேசுகிறார். எனக்கு பணத்தாசை கொஞ்சம் கூட கிடையாது. நமது கட்சிக்கான சோதனை காலம் முடிந்துவிட்டது. பனிகாலம் முடிந்து வசந்த காலம் வரப்போகிறது. 9 ஆண்டு கூட்டணியில் அங்கீகாரம் இல்லை. தொண்டர்களின் காயங்களுக்கு மருந்திடுவோம். தன்மானத்தையும், சுயமரியாதையும் காப்பாற்ற பொதுக்குழுவில் நல்ல முடிவு உள்ளோம்" எனப் பேசியுள்ளார்.












Click it and Unblock the Notifications