எவ வேலுவுக்கு சொந்தமான இடங்களில் நடந்த ரெய்டு.. கட்டுக்கட்டாக சிக்கிய பணம்! ரூ.40 லட்சம் பறிமுதல்
சென்னை: எவ வேலுவுக்கு சொந்தமான மற்றும் தொடர்புடைய 20 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில் ரூ.40 லட்சம் கணக்கில் காட்டப்படாத ரொக்கம் மற்றும் முக்கிய ஆவணங்கள் மற்றும் மின்னணு ஆதாரங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக லஞ்ச ஒழிப்புத்துறை தெரிவித்துள்ளது.
திமுக முன்னாள் அமைச்சரும், திமுக சட்டமன்ற கொறாடாவுமான எ.வ. வேலு வீடு மற்றும் அலுவலகங்களில் இன்று காலை முதலே லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர். சென்னை ஆழ்வார்பேட்டை வீடு, திருவண்ணாமலை வீடு மற்றும் கரூரில் அரசு ஒப்பந்ததார்களின் வீடு, அலுவலகங்கள் மற்றும் திருப்பூர் அரசு அதிகாரிகளின் வீடு உள்ளிட்ட சுமார் 20 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர். இந்த சோதனை குறித்து லஞ்ச ஒழிப்புத்துறை வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு இயக்குநரகம் திரு.ஜெயராம் வெங்கடேசன், அறப்போர் இயக்கம், சென்னை அவர்கள் அளித்த புகாரின் அடிப்படையில் எ.வ.வேலு, நெடுஞ்சாலைத்துறை மற்றும் சிறுதுறைமுகங்கள் மீதும் மற்றும் 9 மாநில அரசு ஊழியர்கள், நெடுஞ்சாலைத்துறை, தமிழ்நாடு மற்றும் ஒரு ஒப்பந்தகாரர் (தனி நபர்) மீதும் வழக்கு பதியப்பட்டது.
அவ்வழக்கானது 2022 ஆம் ஆண்டு அரசு சாலைகளை அகலப்படுத்துதல் மற்றும் மேம்படுத்துதல், பயண தரத்தை மேம்படுத்துதல் மற்றும் குறுக்கு வடிகால் அமைப்புகளை மறுசீரமைத்தல் ஆகிய பணிகளுக்கான ஒப்பந்தங்களை வழங்குவதில் 2022ம் ஆண்டில் குற்றவியல் சதியில் ஈடுபட்டதாக கூறுப்பட்ட குற்றச்சாட்டாகும். கடந்த 2022ம் ஆண்டு மார்ச் மாதத்தில் பராமரிப்பு(TPR-007) உட்பிரிவு மற்றும் பிற இடங்களுக்கான பணிகள் சுமார் 7 கோடி மதிப்பீட்டில் சங்கரானந்த் இன்பரா நிறுவனத்திற்கு வழங்கப்பட்டன.
இதில் எந்தவொரு பணியும் மேற்கொள்ளப்படாத நிலையில், மார்ச் 25 மற்றும் மார்ச் 28 ஆகிய தேதிகளில் ரூ.3.23 கோடி மேற்படி சங்கரானந்த் இன்பரா நிறுவனத்திற்கு விடுவிக்கப்பட்டது. இதன் மூலம் அரசு பணம் ரூ.3.23 கோடி மோசடி மற்றும் குற்றவியல் சதியில் ஈடுபட்டுள்ளனர். இன்று மொத்தம் 20 இடங்களில் சோதனைகள் நடத்தப்பட்டன, அவைகள் சென்னையில் 4 இடங்களிலும், திருவண்ணாமலையில் 4 இடங்களிலும், கரூரில் 7 இடங்களிலும், திண்டுக்கல்லில் 2 இடங்களிலும், கோயமுத்தூரில் 2 இடங்களிலும், திருப்பூரில் 1 இடத்திலும் நடத்தப்பட்டன.
இந்த சோதனையில் முன்னாள் அமைச்சர் எ.வ. வேலு, நெடுஞ்சாலைத்துறை மற்றும் சிறுதுறைமுகங்கள் அவர்களின் வீடுகள் மற்றும் அலுவலகங்கள், நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளின் வீடுகள் மற்றும் அலுவலகங்கள் மற்றும் ஒப்பந்தகாரரின் அலுவலகம் ஆகிய இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. இச்சோதனையில் முக்கியமான ஆவணங்கள், மின்னணு ஆதாரங்கள் மற்றும் வழக்கிற்கு தொடர்புள்ள நெடுஞ்சாலைதுறை ஆவணங்கள் மற்றும் கணக்கில் காட்டப்படாத ரொக்கம் ரூ.40 லட்சம் கைப்பற்றப்பட்டன. வழக்கு விசாரணையில் உள்ளது.












Click it and Unblock the Notifications