உயிருக்கே ஆபத்து.. 20 நாள் உண்ணாவிரதத்திற்கு பிறகும் சிகிச்சையை ஏற்க மறுக்கும் சோனம் வாங்சுக்!
டெல்லி: நீட் குளறுபடிகள் தொடர்பாக சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக் உண்ணாவிரத போராட்டத்தை நடத்தி வந்த நிலையில், நேற்றைய தினம் டெல்லி போலீசார் அவரை போராட்ட களத்தில் இருந்து அப்புறப்படுத்தினர். அவர் இப்போது டெல்லியில் உள்ள மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு நீர்ச்சத்து குறைபாடு உள்ளிட்ட சிக்கல் இருந்த போதிலும், அவர் சிகிச்சையை ஏற்க மறுப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
நீட் குளறுபடிகளுக்கு பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகக்கோரி கரப்பான் பூச்சி கட்சியினர் போராட்டம் நடத்தி வந்தனர். இதில் இணைந்த சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டார். அவரது உண்ணாவிரத போராட்டம் 21வது நாளாக தொடர்ந்த நிலையில், நேற்றைய தினம் டெல்லி போலீசார் அவரை போராட்ட களத்தில் இருந்து அப்புறப்படுத்தி, மருத்துவமனையில் அனுமதித்தனர்.

சிகிச்சையை ஏற்க மறுப்பு
இதற்கிடையே மருத்துவமனை வட்டாரங்கள் அவரது உடல்நிலை குறித்த தகவல்களை பகிர்ந்துள்ளது. அதாவது சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக் சிகிச்சையை ஏற்க மறுத்துள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. நீர்ச்சத்து குறைபாடு மற்றும் வளர்சிதை மாற்றம் உள்ளிட்ட அறிகுறிகள் இருந்தபோதிலும், அவர் சிகிச்சையை ஏற்க மறுத்துவிட்டாராம். மருத்துவர்கள் IV சிகிச்சை அளிக்க பரிந்துரைத்த போதும் அதை வாங்சுக் ஏற்கவில்லை என சொல்லப்படுகிறது.
59 வயதான வாங்சுக்கின் உடல்நிலை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாகவும், அவரது உடல்நலன் கருதி சிகிச்சையை ஏற்குமாறு மருத்துவர்கள் தொடர்ந்து ஆலோசனை வழங்கி வருவதாகவும் மருத்துவமனை நிர்வாகம் சனிக்கிழமை வெளியிட்ட மருத்துவ அறிக்கையில் தெரிவித்துள்ளது.
உடல்நிலை
ஜந்தர் மந்தரில் நடைபெற்றுவரும் போராட்டத்தில் கடந்த ஜூன் 28ஆம் தேதி முதல் காலவரையற்ற உண்ணாவிரதத்தில் ஈடுபட்டிருந்த வாங்சுக்கின் உடல்நிலை தொடர்ந்து மோசமடைந்தது. டெல்லி உயர்நீதிமன்றத்தின் உத்தரவு மற்றும் மருத்துவர்களின் பரிந்துரையின் அடிப்படையில் டெல்லி போலீசார் அவரை வலுக்கட்டாயமாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.
மருத்துவமனை வட்டாரங்கள்
இது தொடர்பாக மருத்துவமனை வட்டாரங்கள், "சனிக்கிழமை காலை 7.40 மணியளவில் டெல்லி போலீசார் வாங்சுக்கை மருத்துவமனைக்கு அழைத்து வந்தனர். கடந்த 20 நாட்களாக திட உணவு எதையும் உட்கொள்ளாமல் இருந்ததால் அவர் பலவீனமாகக் காணப்பட்டார். இருப்பினும், அவருக்கு மயக்கம் எதுவும் ஏற்படவில்லை. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோது சுயநினைவுடன் இருந்தார். இதயத் துடிப்பு, ரத்த அழுத்தம் மற்றும் ஆக்சிஜன் அளவு சீராக இருக்கிறது. அதேநேரம் உடலில் நீரிழப்பு ஏற்பட்டிருந்தது கண்டறியப்பட்டது.
கோரிக்கை
மேலும், ரத்தப் பரிசோதனையில் உடலின் சமநிலையில் மாற்றம், ரத்தத்தில் பொட்டாசியம் அளவு குறைவு மற்றும் ரத்த சர்க்கரை அளவு 78 mg/dl என பதிவாகியிருந்தது. சிறுநீரில் காணப்பட்ட கீட்டோன் அளவும் அதிகமாகவே இருக்கிறது. இதனால் உடனடியாக IV சிகிச்சை அளிக்க மருத்துவர்கள் பரிந்துரைத்துள்ளனர். இருப்பினும் எந்த மருந்தையும் வாங்சுக் ஏற்க மறுத்துள்ளார். இருப்பினும் அவரது உடல்நலன் கருதி தொடர்ந்து மருத்துவ கண்காணிப்பும் ஆலோசனையும் வழங்கப்பட்டு வருகிறது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
வாங்சுக் கடந்த ஜூன் 28ஆம் தேதி முதல் காலவரையற்ற உண்ணாவிரதத்தில் ஈடுபட்டார். கடந்த மூன்று வாரங்களாக அவரது உடல்நிலை தொடர்ந்து மோசமடைந்து வந்த நிலையில், இந்த காலகட்டத்தில் அவர் சுமார் சுமார் 9.5 கிலோ எடை இழந்திருந்தார்.
முற்றுகை போராட்டம்
முன்னதாக வெள்ளிக்கிழமை இரவு தனது ஆதரவாளர்களிடம் பேசிய வாங்சுக், "இந்த உண்ணாவிரதத்தில் எனது உடலின் 20 சதவீதத்தை இழந்துவிட்டேன். இருந்தாலும் போராட்டத்தை நிறுத்தப் போவதில்லை" என்று கூறியிருந்தார். மேலும், திங்கள்கிழமை நாடாளுமன்ற முற்றுகை போராட்டத்தை கரப்பான் பூச்சி கட்சி திட்டமிட்டுள்ள நிலையில், அதில் கலந்துகொள்ளுமாறும் அவர் கோரிக்கை விடுத்திருந்தார்.















Click it and Unblock the Notifications