போலீஸ் உடை இல்லை.. மேடையை சூழ்ந்த ஸ்கிரீன்.. 30 நொடிகளில் வாங்சுக்கை அப்புறப்படுத்திய காவலர்கள்!
டெல்லி: நீட் முறைகேடுகள் தொடர்பாக காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டிருந்த சோனம் வாங்சுக் திடீரென இன்று காலை போராட்ட களத்தில் இருந்து வெளியேற்றப்பட்டார். காவலர் உடையை தவிர்த்துவிட்டு கலர் டிரஸில் வந்த போலீசார் திரை அமைத்து சோனம் வாங்சுக்வை அழைத்து சென்றதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக நாம் விரிவாக பார்க்கலாம்.
டெல்லி ஜந்தர் மந்தரில் கடந்த 20 நாட்களாக உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வந்த சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக், சனிக்கிழமை அதிகாலை டெல்லி போலீசாரால் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். நீட் தேர்வு முறைகேடு விவகாரத்திற்கு பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி கரப்பான் பூச்சி கட்சியினர் உடன் இணைந்து இந்த உண்ணாவிரத போராட்டத்தை அவர் நடத்தி வந்தார்.

கலர் டிரஸ்
சனிக்கிழமை அதிகாலை ஜந்தர் மந்தரில் ஆதரவாளர்களுடன் வழக்கம் போல சோனம் வாங்சுக் தனது உண்ணாவிரத போராட்டத்தை தொடர்ந்து கொண்டு இருந்தார். அப்போது அங்கு திடீரென போலீசார் குவிந்தனர். இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால் அவர்கள் யாரும் போலீஸ் உடை அணியவில்லை. சிலர் நீல நிற சட்டையிலும், சிலர் வெள்ளை நிற சட்டையிலும் வந்ததாக கூறப்படுகிறது.
அதாவது போலீஸ் உடை அணிந்திருந்த காவலர்கள் போராட்ட களத்திற்கு வெளியே குவிக்கப்பட்டனர். சாதாரண உடை அணிந்திருந்த காவலர்களே மேடை ஏறினர். அவர்கள் முதலில் வெள்ளை பெட்ஷீட்டை கொண்டு திரைகளை அமைத்தனர். மேடையில் என்ன நடக்கிறது என்பதே தெரியாமல் போனது. இதனால் போராட்டக்காரர்கள் மற்றும் பொதுமக்கள் குழப்பமடைந்தனர். இந்த ஒட்டுமொத்த சம்பவமும் வெறும் 30 நொடிகளில் நடந்து முடிந்துள்ளது.
சோனம் வாங்சுக்
வாங்சுக் வர மறுத்த போதும் போலீசார் அவரை வலுக்கட்டாயமாக அழைத்து சென்றதாக கூறப்படுகிறது. இருப்பினும், இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த கரப்பான் பூச்சி கட்சியினர் எதிர்ப்பு முழக்கங்களை எழுப்பினர். சிலர் போலீசார் நடவடிக்கையை எதிர்த்து போராட்டத்தில் ஈடுபட்டதால் சற்று நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இருப்பினும், அவர்களையும் போலீசார் அப்புறப்படுத்தினர்.
அதைத் தொடர்ந்து டெல்லி போலீசார் தரப்பில் இருந்து முக்கிய விளக்கம் தரப்பட்டது. அதாவது 59 வயதான சோனம் வாங்சுக் டெல்லியின் சப்தர்ஜங் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் அவசர சிகிச்சைப் பிரிவில் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரம் அவர் சுயநினைவுடன் இருப்பதாகவும் அவரது உடல்நிலை சீராக இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
டெல்லி போலீஸ்
இந்த சம்பவம் குறித்து விளக்கம் அளித்துள்ள டெல்லி காவல்துறை, "டெல்லி உயர் நீதிமன்றத்தின் உத்தரவு மற்றும் மருத்துவர்கள் பரிந்துரையின் அடிப்படையிலேயே வாங்சுக் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார். அவருக்கு அவசர மருத்துவ சிகிச்சை தேவைப்பட்டதால் மருத்துவமனைக்கு மாற்றியுள்ளோம். சில போராட்டக்காரர்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இருப்பினும், மிகுந்த பொறுமையுடனும் கட்டுப்பாட்டுடனும் போலீசார் செயல்பட்டனர்" என்று விளக்கம் தரப்பட்டுள்ளது.
மருத்துவர்கள் எச்சரிக்கை
வாங்சுக்கின் உடல்நிலை குறித்து கடந்த சில நாட்களாக மருத்துவர்கள் தொடர்ந்து எச்சரிக்கை விடுத்து வந்தனர். அவர் 20 நாட்களில் 8 கிலோவுக்கும் அதிகமான உடல் எடையை இழந்திருந்தார். நீண்டகால உண்ணாவிரதத்தால் உடலுறுப்புகள் செயலிழக்கும் அபாயம் இருப்பதாகவும் மருத்துவர்கள் தெரிவித்திருந்தனர். இதையடுத்து அவரது உடல்நிலை குறித்து டெல்லி உயர்நீதிமன்றமும் கவலை தெரிவித்திருந்தது. அதை தொடர்ந்தே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications
