கண்கள் சிவந்த டிரம்ப்! அதிகாலையில் ஆரம்பித்த தாக்குதல்.. ஈரான் மீது குண்டு மழை பொழிந்த அமெரிக்கா
வாஷிங்டன்: அமெரிக்கா ஈரான் இடையேயான தாக்குதல்கள் மீண்டும் தீவிரமடைந்துள்ளது. ஈரான் தாக்குதலில் இரு அமெரிக்க வீரர்கள் உயிரிழந்ததால் கடும் கோபமடைந்துள்ள அமெரிக்கா, ஞாயிற்றுக்கிழமை அதிகாலை ஈரான் மீது மீண்டும் வான்வழித் தாக்குதலை நடத்தியுள்ளது. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் உத்தரவின் பேரில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
அமெரிக்கா ஈரான் இடையே இப்போது மத்திய கிழக்கில் மீண்டும் மோதல் வெடித்துள்ளது. இரு நாடுகளும் மாறி மாறி தாக்குதல் நடத்தி வருகிறார்கள். இது வளைகுடா பகுதியில் பதற்றத்தை அதிகரித்து, சர்வதேச பொருளாதாரத்தைக் கடுமையாகப் பாதிக்கிறது.

அமெரிக்கா பதிலடி
இதற்கிடையே ஜோர்டானில் ஈரான் நடத்திய ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதலில் அமெரிக்க ராணுவத்தை சேர்ந்த இரண்டு வீரர்கள் உயிரிழந்தனர். மேலும், ஒரு ராணுவ வீரர் மாயமான நிலையில், அவரை தேடும் பணிகளும் நடந்து வருகிறது. இது தவிர காயமடைந்த நான்கு பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுள்ளனர். உயிரிழந்த வீரர்களின் பெயர்களை அமெரிக்கா இதுவரை பொதுவெளியில் வெளியிடவில்லை.
இதற்குப் பதிலடியாக சில மணி நேரங்களிலேயே ஈரான் மீது அமெரிக்கா மிக பெரிய ஒரு ஏவுகணை தாக்குதலை நடத்தியுள்ளது. ஹார்முஸ் ஜலசந்தி வழியாக செல்லும் சர்வதேச வணிகக் கப்பல்களுக்கு அச்சுறுத்தலாக இருக்கும் ஈரானை பலவீனப்படுத்தவே இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக அமெரிக்கா கூறியுள்ளது. ஈரான் ராணுவத்தின் முக்கிய இலக்குகளை குறிவைத்து தாக்குதல் நடத்தியதாக அமெரிக்கா கூறியுள்ளது.
எங்கெல்லாம் தாக்குதல்
அமெரிக்கா நடத்திய இந்த தாக்குதலில் தெற்கு ஈரானின் சிரிக் துறைமுக நகரம் அருகே உள்ள பகுதிகள் தாக்கப்பட்டதாக ஈரானின் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. ஹாஜியாபாத் பகுதியிலும் தாக்குதல் நடந்ததாகக் கூறப்பட்டுள்ள நிலையில், உயிரிழப்புகள் எதுவும் இல்லை என ஈரான் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எச்சரிக்கை
அதேநேரம் இந்த மோதல் மேலும் தீவிரமடையக்கூடும் என ஈரான் எச்சரித்துள்ளது. அமெரிக்காவும் அதன் கூட்டாளிகளும் வாழ்க்கையிலேயே மறக்க முடியாத பாடத்தை கற்றுக்கொள்வார்கள் என ஈரானின் உச்ச தலைவர் மொஜ்தபா கமேனி வெளிப்படையாகவே வார்னிங் கொடுத்துள்ளார். அமைதி ஒப்பந்தத்தை அமெரிக்கா மீறியுள்ளதாக குற்றஞ்சாட்டிய அவர், டிரம்ப் மீது தங்களுக்கு எந்தவொரு நம்பகத்தன்மையும் இல்லை என்றும் விமர்சித்தார்.
கடந்த வாரம் போர் நிறுத்தம் முறிந்த பிறகு இரு நாடுகளும் தொடர்ந்து தாக்குதல்களை நடத்தி வருவதால், மத்திய கிழக்கில் பதற்றம் மேலும் அதிகரித்துள்ளது. குறிப்பாக, உலகின் மொத்த கச்சா எண்ணெய் போக்குவரத்தில் சுமார் ஐந்தில் ஒரு பங்கு நடைபெறும் ஹார்முஸ் ஜலசந்தி மீதான கட்டுப்பாடு தொடர்பாக இரு நாடுகளுக்கும் இடையே பதற்றம் அதிகரித்துள்ளது.
மாறி மாறி குற்றச்சாட்டு
ஹார்முஸ் ஜலசந்தியை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர அமெரிக்கா முயல்வதாக ஈரான் வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் எஸ்மாயில் பகாயி குற்றம்சாட்டினார். மறுபுறம், ஈரான் தான் வணிகக் கப்பல்களை அச்சுறுத்தி, தான் சொல்லும் ரூட்டை தவிர்த்து செல்லும் கப்பல்களை குறிவைத்து தாக்குவதாக அமெரிக்கா குற்றம் சாட்டியுள்ளது. இப்படி மாறி மாறி குற்றஞ்சாட்டி தாக்குவதால் அங்கு பதற்றம் அதிகரித்துள்ளது.
இதற்கிடையில் மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள புதிய பதற்றத்தை உடனடியாக முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்றும், அனைத்து தரப்பினரும் பேச்சுவார்த்தை பாதைக்கு திரும்ப என்றும் அமீரகம் வலியுறுத்தியுள்ளது.















Click it and Unblock the Notifications