இதயத்தில் அடிக்கும் டிரம்ப்.. அடுத்த வாரம் ஈரான் நிலைமை மோசமாகும்.. அமெரிக்கா கடும் வார்னிங்
வாஷிங்டன்: ''ஈரான் பேச்சுவார்த்தைக்கு வரவில்லை என்றால் அடுத்த வாரத்தில் அவர்களின் நிலைமை மிகவும் மோசமாகும்'' என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மிரட்டல் விடுத்துள்ளார். மேலும் அடுத்த வாரத்தில் ஈரான் மீது எந்தெந்த இடங்களில் தாக்குதல் நடத்தப்படும் என்பதை டிரம்ப் பட்டியலிட்டுள்ளார். இதனால் இருநாடுகள் இடையே உச்சக்கட்ட பதற்றம் ஏற்பட்டுள்ளது.

ஈரான் - அமெரிக்கா இடையே மீண்டும் மோதல் தொடங்கி உள்ளது. இருநாடுகள் இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்தான நிலையில் அதனை மீறி ஹார்முஸ் ஜலசந்தியில் பயணிக்கும் சரக்கு கப்பல்களை ஈரான் தாக்குவதாக கூறி அமெரிக்கா 'அட்டாக்' நடத்தி வருகிறது.
இதற்கு ஈரானும் பதிலடி கொடுத்து வருகிறது. கத்தார், ஐக்கிய அரபு அமீரகம், குவைத், பஹ்ரைன் உள்ளிட்ட நாடுகளில் உள்ள அமெரிக்காவின் பாதுகாப்பு படை தளங்களை குறிவைத்து ஈரான் தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால் மீண்டும் மத்திய கிழக்கு நாடுகளில் பெரும் பதற்றம் நிலவி வருகிறது.
இப்படியான சூழலில்தான் ஈரானுக்கு, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கடும் மிரட்டல் விடுத்துள்ளார். இதுதொடர்பாக ஃபாக்ஸ் நியூஸ் செய்தி சேனலுக்கு டொனால்ட் டிரம்ப் பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
''இன்றிரவு நாங்கள் அவர்கள் (ஈரான்) மீது மிக கடுமையாக தாக்குதலை நடத்தப்போகிறோம். நாளை இரவும் கடும் தாக்குதல்களை நடத்துவோம். அடுத்த வாரம் அவர்களின் நிலைமை மிக மோசமாக இருக்கும். ஏனென்றால் அடுத்த வாரம் மின் நிலையங்கள் மற்றும் பாலங்கள் குறிவைக்கப்படும். அவர்கள் பேச்சுவார்த்தைக்கு வராதபட்சத்தில் அனைத்து மின் நிலையங்களையும், பாலங்களையும் நாங்கள் தகர்ப்போம்'' என்று காட்டமாக கூறியுள்ளார்.
கடந்த ஒரு வாரத்தில் மட்டும் ஈரானின் 300க்கும் அதிகமான இடங்களை குறிவைத்து அமெரிக்கா தாக்குதல் நடத்தி உள்ளது. ஹார்முஸ் ஜலசந்தியில் பயணிக்கும் சரக்கு கப்பல்களை தாக்குவதை தடுக்கும் வகையில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. அதன்படி ஈரானின் கடற்படை தளம், ரேடார் தளம், ஏவுகணை - ட்ரோன் சேமிப்பு மையங்கள், கட்டுப்பாட்டு மையங்களை குறிவைத்து அமெரிக்கா தாக்கி உள்ளது.
தற்போது அமெரிக்காவுடன், ஈரான் பேச்சுவார்த்தை நடத்தி சுமூக முடிவுக்கு ஒப்புக்கொள்ள வேண்டும் என்று டொனால்ட் டிரம்ப் கூறி வருகிறார். ஆனால் ஈரான் அதற்கு சம்மதிக்கவில்லை. இதனால் கோபமான டொனால்ட் டிரம்ப் தற்போது புதிய எச்சரிக்கையை விடுத்துள்ளார். ஈரானின் மின் நிலையங்கள், மேம்பாலங்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் என்று கூறியுள்ளார்.
இது நடக்கும் பட்சத்தில் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கும். அவர்களால் ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்கு செல்ல முடியாது. இதன்மூலம் ஈரான் பெரும் பாதிப்பை எதிர்கொள்ளும். இதனால் தான் டிரம்ப் இப்படியான மிரட்டலை வெளிப்படுத்தி உள்ளார். ஆனால் தற்போது வரை ஈரான் சார்பில் அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தைக்கு 'ஓகே' சொல்லவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications
