நீங்க நல்லவரா.. கெட்டவரா...?

Subscribe to Oneindia Tamil

Kabul
-ஏ.கே.கான்

(ஆப்கானில்தான் விவகாரத்தில் அமெரிக்காவும் இங்கிலாந்தும் எடுத்துள்ள ஒரு புதிய முடிவு குறித்து ஆராயும் தொடர் இது. சில பகுதிகளாக வெளியாகும்)

''There is nothing either good or bad but thinking makes it so''
-William Shakespeare

கடந்த வாரம் ஆப்கானிஸ்தான் விவகாரம் குறித்து லண்டனில் ஒரு மாநாடு நடந்தது. இதில் எடுக்கப்பட்ட முடிவு வெளியுலகுக்கு அவ்வளவாகத் தெரியாமல் போய்விட்டது. காரணம், அந்த முடிவை இங்கிலாந்தோ அல்லது மாநாட்டை நடத்தியதில் முக்கிய பங்கு வகித்த அமெரிக்காவோ அவ்வளவாக வெளியில் பரப்பாதது தான்.

லண்டனின் லான்கேஸ்டர் ஹவுசில் நடந்த இந்த மாநாட்டில் ஐ.நா மற்றும் 70 நாடுகளின் பிரதிநிதிகள் பங்கேற்றனர்.

இதில் பாகிஸ்தான் சொன்னதை லண்டனும் வாஷிங்டனும் அப்படியே தலையை ஆட்டி கேட்டுக் கொண்டன. இந்தியாவின் கருத்து முழுமையாக நிராகரிக்கப்பட்டதால் சோகத்துடன் ஊர் திரும்பினார் நமது வெளியுறவுத்துறை அதிகாரிகள்.

அந்த மாநாட்டில் அப்படி என்ன தான் விவாதி்க்கப்பட்டது?.

இதற்கு முன் ஆப்கானிஸ்தானின் வலி நிறைந்த வரலாற்றை நாம் திரும்பிப் பார்ப்பது முக்கியம் என்று நினைக்கிறேன்.

ஆப்கானிஸ்தானி்ல் ஆழம் தெரியாமல் அல்லது தெரிந்தே காலை விட்டுவிட்ட அமெரிக்காவுக்கு அதை விட்டு எப்படி வெளியேறுவது என்பது இன்னும் புரியவில்லை. ஆனால், கூடிய சீக்கிரம் வெளியேறிய ஆக வேண்டிய நிலைக்கு அந் நாட்டு அரசும் ராணுவமும் தள்ளப்பட்டுவிட்டன. காரணம், ஆப்கானிஸ்தானில் அமெரிக்கப் படைகளை வருடக்கணக்கில் நிறுத்தியும் அங்கு எதுவும் மாறவில்லை. வெட்டிச் செலவும் உயிரிழப்புகளும் (அமெரிக்க உயிரிழப்புகள், ஆப்கானியர்கள் சாவது குறித்து இவர்களுக்கு கவலையில்லை) மட்டுமே தொடர்ந்து கொண்டுள்ளன.

மேலும் பனிப் போர் நிலவியபோது ஆப்கானி்ஸ்தானை யார் கட்டுப்படுத்துவது என்பதில் சோவியத் யூனியனுக்கும் அமெரிக்காவுக்கும் போட்டி நிலவி வந்தது. காரணம், ஆப்கானிஸ்தான் அமைந்துள்ள இடம் அப்படி.

கிழக்கு ஆசியா-அரேபிய நாடுகளுக்கு மத்தியில் அமைந்துள்ள இந்த தேசம் ஆசியா கண்டத்தின் பிற நாடுகளின் பாதுகாப்பை உறுதி செய்வதில் முக்கிய பங்கு வகிக்கிறது.

இதனால் தான் இந்த நாடு பல்லாயிரம் ஆண்டுகளாகவே பிற நாடுகள், அரசர்களின் படையெடுப்புகளுக்கு ஆளாகி வந்திருக்கிறது.

சைரஸ், டேரியஸ், அலெக்ஸாண்டரில் ஆரம்பித்து கனிஷ்கர், அசோகர், திமூர்கள், செங்கிஸ் கான் உள்பட பல பேரரசர்களும் இந்த நாட்டின் மீது படை எடுத்துள்ளனர் (பாமியான் பகுதியில் இருந்த மாபெரும் புத்தர் சிலைகளை தலிபான்கள் பீரங்கிகளால் தாக்கி உடைத்தார்களே நினைவிருக்கிறதா.. ஆப்கானிஸ்தானில் எப்படி புத்தர் சிலை வந்தது?. அங்கு புத்த மதத்தை பரப்பியது அசோகர் தான்!).

இப்படியாக எந்த ஒரு காலத்திலும் ஏதாவது ஒரு நாட்டால் ஆக்கிரமி்க்கப்பட்டு அல்லது கட்டுப்படுத்தப்பட்டே வந்திருக்கிறது ஆப்கானி்ஸ்தான். அங்கு ஒழுங்கான உள்நாட்டு ஆட்சி நடந்தது என்றால் அது முகம்மத் ஷகீர் ஷாவின் காலத்தில் தான்.

அதுவும் 1933ம் ஆண்டு முதல் 1973ம் ஆண்டு வரை தான். முன்னாள் அரசர் குடும்பத்தைச் சேர்ந்த இவர் ஜனநாயகத்தைக் கொண்டு வந்தார். நாட்டின் அனைத்து பழங்குடியின பிரிவுகளின் ஆதரவோடு அவரது ஆட்சி நடந்தபோது நாட்டில் அமைதி நிலவியது. நாட்டில் கல்வியைப் பரப்பவும், நவீன பொருளாதார கொள்கைகளை அமலாக்கவும் பெண்களுக்கு சம உரிமை வழங்கவும் முயன்றார்.

ஆனால், 1973ம் ஆண்டு சிகிச்சைக்காக இவர் இத்தாலி சென்ற நிலையில் ஆட்சியைக் கவிழ்த்து அரசைக் கைப்பற்றினார் இவரது உறவினரும் முன்னாள் பிரதமருமான முகம்மத் தெளத் கான். ஆப்கானிஸ்தான் இன்று சந்திக்கும் பிரச்சனைகளுக்கு இவரையும் ஒரு முக்கிய காரணமாகச் சொல்லலாம்.

தெளத் கான் கிட்டத்தட்ட கொடுங்கோல் ஆட்சியைத் தான் நடத்தினார். சோவியத் யூனியன் (ஆப்கானி்ஸ்தான்-சோவியத் இரண்டும் அண்டை நாடுகளாக இருந்தன, சோவியத் யூனியனின் துர்க்மேனிஸ்தான், உஸ்பெகிஸ்தான், தஜிகிஸ்தான் ஆகிய பகுதிகள் ஆப்கானிஸ்தான் எல்லையோடு ஒட்டியவை. இதனால், இந்தப் பகுதிகளுக்கும் ஆப்கானிஸ்தானுக்கும் இடையே கலாச்சாரரீதியில் பல்லாயிரம் ஆண்டுகளாக உறவு உண்டு) ஆதரவு பெற்ற முக்கிய கட்சியான பிடிபிஏ இவரை எதிர்க்க, அதை அடக்க அந்தக் கட்சியின் முக்கியத் தலைவர்களைக் கொலை செய்தார் தெளத்.

இதையடுத்து 1978ம் ஆண்டு ஆப்கான் ராணுவம் புரட்சி நடத்தி (சோவியத் யூனியனின் உளவுப் பிரிவு தூண்டுதலுடன்) தெளத்தை கொலை செய்தது. கம்யூனிஸ்ட் கட்சியான பிடிபிஏ ஆட்சியில் அமர்ந்தது.

ஆப்கானிஸ்தானி்ல் சோவியத் யூனியனின் மறைமுக ஆட்சி நடக்க ஆரம்பித்தது. இதற்கு எதிராக ஜமாயத் இஸ்லாமி என்ற கட்சி போராட்டத்தைத் துவக்கியது.

சோவியத்தை ஒட்டிய பஞ்ச்ஷிர் பள்ளத்தாக்குப் பகுதியில் தான் முதன்முதலாக இந்தப் போராட்டம் வெடித்தது. ஆனால், போராட்டக்காரர்களை சோவியத் உதவியோடு ஆப்கான் அரசு ஒடுக்கியது. மிச்சமிருந்த போராட்டக்காரர்கள் பாகிஸ்தானில் தஞ்சமடையவே அவர்களை அப்படியே அரவணைத்துக் கொண்டார் அப்போதைய அந் நாட்டுப் பிரதமர் சுல்பிகர் அலி புட்டோ.

இவருக்கு ஏன் இந்த வெட்டி வேலை என்கிறீர்களா?.. காரணம் இருக்கிறது.

இந்தியா-பாகிஸ்தான் பிரிக்கப்பட்டபோது பாகிஸ்தான் வசம் ஒப்படைக்கப்பட்டது பஸ்தூனிஸ்தான் பகுதி. ஆப்கானிஸ்தான் எல்லையில் உள்ள இந்தப் பகுதியில் பெரும்பாலானவர்கள் பஸ்தூன் இன பழங்குடியினர். ஆப்கானிஸ்தான் மக்களில் பெரும்பாலானவர்களும் இந்த இனத்தினர் தான்.

ஆக, இந்தப் பகுதியை தனது நாட்டுடன் இணைக்க முயன்றார் ஆப்கானிஸ்தானை ஆண்ட தெளத் கான். இதற்காக இந்தப் பகுதி பஸ்தூன்களை தூண்டிவிட்டு ஆயுதங்களும் கொடுத்து வந்தார். (இப்போது இந்தியாவுக்கு எதிராக காஷ்மீரில் பாகிஸ்தான் என்ன செய்து கொண்டுள்ளதோ அதே வேலையை பஸ்தூனிஸ்தான் பகுதியில் பாகிஸ்தானுக்கு எதிராகச் செய்தார் தெளத்).

அதே போல இந்தப் பகுதியையும் தனது கட்டுப்பாட்டில் கொண்டு வர சோவியத் யூனியனும் முயன்றது.

நாடு துண்டாவதைத் தவிர்க்க பஸ்தூன் பழங்குடியினருடன் பாகிஸ்தான் ஒரு ஒப்பந்தம் செய்து கொண்டது. இதன்படி இந்தப் பகுதிக்கு North-West Frontier Province (NWFP) என பெயர் சூட்டப்பட்டது. இந்தப் பகுதியை பஸ்தூன் பழங்குடியினரே சுதந்திரமாய் நிர்வகித்துக் கொள்ள அதிகாரம் தரப்பட்டது.

இங்கு பாகிஸ்தான் ராணுவமோ, போலீசோ, நீதிமன்றமோ, அரசியலோ தலையிட முடியாது. அதாவது பாகிஸ்தானுக்குள்ளேயே ஒரு தனி நாடு மாதிரி. (இங்கு தான் ஒசாமா பின் லேடன் அண்ட் கோ இப்போது பதுங்கியிருப்பதாகக் கருதப்படுகிறது. இதனால் இப்போது அமெரிக்க ராணுவ ஹெலிகாப்டர்கள், போர் விமானங்கள் உதவியோடு அவ்வப்போது இந்தப் பகுதியில், தீவிரவாதிகள் மீது தாக்குதல் நடத்தி வருகிறது பாகிஸ்தான். தனது நாட்டுக்குள்ளேயே இன்னொரு நாட்டின் உதவியோடு தாக்குதல் நடத்தும் உலகின் ஒரே நாடு பாகிஸ்தானாகத் தான் இருக்கும்)

இவ்வாறு தனது நாட்டின் ஒரு பகுதியையே தன் வசமிருந்து பிரிக்க முயன்ற ஆப்கானிஸ்தான்-சோவியத் மீது கடுப்பில் இருந்த பாகி்ஸ்தானுக்கு, அந் நாட்டு கம்யூனிஸ்ட் அரசுக்கு எதிராக போராளிகள் கிளம்பியபோது மகிழ்ச்சி தாங்கவில்லை.

இதனால் அந்த போராளிகளுக்கு அடைக்கலம் தந்ததோடு ஆயுதங்களும் தந்து சண்டையை தீவிரமாக்கியது. பாகிஸ்தான். அதன் உளவுப் பிரிவான ஐஎஸ்ஐ உதவியுடன் முஜாகிதீன்கள் என்ற போராளிகள் உருவாகியினர்.

1978ம் ஆண்டில் சோவியத் ஆதரவு ஆப்கானிஸ்தான் அரசுக்கு எதிராக முஜாகிதீன்களின் போராட்டங்கள் தீவிரமாகி நாடு முழுவதும் வெடித்த கலவரத்தில் அரசே கவிழும் நிலை உருவாகவே அந்த ஆண்டு ஏப்ரல் 14ம் தேதி டாங்கிகளையும் ராணுவ ஹெலிகாப்டர்களையும் அனுப்பியது சோவியத் யூனியன். முதலில் ஆப்கான் அரசை காக்க என்று உள்ளே நுழைந்த சோவியத் யூனியன் படிப்படியாக தனது ராணுவ பலத்தை விரிவாக்கியது. அந்த நாட்டையே தனது கட்டுப்பாட்டில் கொண்டு வர ஆரம்பித்தது.

இதை எதிர்த்து ஆப்கானி்ஸ்தான் ராணுவத்தில் இருந்த 80,000 வீரர்களில் பாதிப் பேர் அதிலிருந்து விலகி முஜாகிதீன்களுடன் கைகோர்த்தனர்.

இந் நிலையில் தான் ஆப்கானிஸ்தான் விவகாரத்தில் முதன்முறையாக தலையிட்டது அமெரிக்கா. தெற்காசியாவில் சோவியத் யூனியனின் அதிகாரம் பரவுவதைத் தடுக்க களத்தில் குதித்தது சிஐஏ.

ஒரு பக்கம் சோவியத் ஆதரவு நாடான இந்தியா, இன்னொரு பக்கம் சோவியத் கட்டுப்பாட்டில் உள்ள ஆப்கானி்ஸ்தான் என இரு 'சோவியத் பஜ்ஜிகளுக்கு' மத்தியில் 'சட்னியாகி' வந்த பாகிஸ்தானை தனது கையில் போட்டுக் கொண்டது அமெரிக்கா.

பஸ்தூன்-ஆப்கானிஸ்தான்-சோவியத் யூனியன் என புதிய கூட்டணியால் மிரண்டு போய் இருந்த பாகிஸ்தானுக்கு அமெரிக்கா பெரிய ஆபத்பாந்தவனாகத் தெரிந்தது.

ஆப்கானிஸ்தானில் இருந்து சோவியத் யூனியனை விரட்டும் தனது மறைமுகப் போருக்கு பாகிஸ்தானுக்கு முழு அளவில் உதவியது அமெரிக்கா. அப்படி ஆரம்பித்தது தான் அமெரிக்க-பாகிஸ்தான் 'நல்லுறவு'.

சோவியத் யூனியன் படைகளுக்கு எதிராகப் போராட ஐஎஸ்ஐ மூலமாக சிஐஏ ஏராளமான ஆயுதங்களை வழங்கியது. தரையில் முஜாகிதீன்களின் கொரி்ல்லா தாக்குதலை சமாளிக்க முடியாத சோவியத் யூனியன் ஹெலிகாப்டர்களையே அதிகமாக பயன்படுத்தி எதிர் தாக்குதலை நடத்தியது.

இதனால் முஜாகிதீன்களுக்கு ஏராளமான உயிர்ப் பலி. இதையடுத்து சோவியத் ஹெலிகாப்டர்களை தாக்க முஜாதீன்களுக்கு அமெரிக்கா தந்த பயங்கர ஆயுதம் தான்
Shoulder-aided-Misslles (SAM) எனப்படும் ஏவுகணைகள்.

ஆப்கானிஸ்தானில் சோவியத் யூனியனின் தோல்விக்கு மிக முக்கியக் காரணமாக விளங்கியது இந்த ஏவுகணை தான். தோளில் வைத்துக் கொண்டு இயக்கப்படும் இந்த ஏவுகணையைக் கொண்டு எதிரியின் விமானத்தையோ-ஹெலிகாப்டரையோ கச்சிதமாக சுட்டுத் தள்ள முடியும்.

எதிரி விமானத்தின் எரிபொருள் எரியும்போது வெளியேறும் புகையின் கார்பனை 'ட்ரேஸ்' செய்து, விடாமல் விரட்டிச் சென்று அதை தாக்கி அழிக்கும் ஆயுதம் 'சாம்'.

இப்படியாக, சோவியத் யூனியனின் ஆக்கிரமிப்புக்கு எதிராக ஆப்கான் முஜாகிதீன்களுடன் சேர்ந்து போராட பல்வேறு நாடுகளில் இருந்து வந்த போராளிகளில் ஒருவர் தான் ஒசாமா பின் லேடன்.

அமெரிக்கா தந்த ஆயுதங்களைக் கொண்டு சோவியத் யூனியனை முஜாகிதீன்கள் தடுமாற வைத்தனர். ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டாலும் சோவியத் யூனியன் தனது படைகளை தொடர்ந்து ஆப்கானி்ஸ்தானில் வைத்திருந்தது. காரணம், அந்த நாட்டை விட்டு வெளியேறினால் அது அமெரிக்காவிடம் தோற்றுப் போனதாக அர்த்தமாகிவிடும் என்பதால்.

ஆனால், 1989ல் ரஷ்யாவில் கொஞ்சம் ஜனநாயகத்தைக் கொண்டு வரலாம் என நினைத்து கோர்பசேவ் கொண்டு வந்த சீர்திருத்தங்கள் கம்யூனிஸத்தை ஆட்டம் காண வைக்க, இனியும் ஆப்கானி்ஸ்தானில் படைகளை வைத்திருப்பது சாத்தியமில்லை என்பதை உணர்ந்தது சோவியத் யூனியன்.
இதையடுத்து தனது படைகளை வாபஸ் பெற்றது. (இதைத் தொடர்ந்து கொஞ்ச நாளி்ல் சோவியத் யூனியன் துண்டு துண்டானது வேறு கதை!).

சோவியத் யூனியன் படைகள சென்ற அடுத்த சில நாட்களில் அவர்களது ஆதரவோடு அதிபராக இருந்த நஜிபுல்லாவையும் அவரது குடும்பத்தினரையும் மின் கம்பத்தில் தூக்கில் போட்டுக் கொன்றனர் முஜாகிதீன்கள்.

இதையடுத்து ஆப்கானி்ஸ்தானில் மாபெரும் அரசியல் குழப்பம் ஏற்பட்டது. நாட்டின் ஒவ்வொரு பகுதியையும் ஒவ்வொரு முஜாகிதீன் தலைவரும் குறு நில மன்னர் போல பிடித்து வைத்துக் கொண்டு ஆள ஆரம்பித்தனர்.

இவர்களில் முக்கியமானவர் அஹமத் ஷா மசூத். சோவியத் யூனியனின் தஜிகிஸ்தான் பகுதியை ஒட்டிய பஞ்ச்ஷேர் பள்ளத்தாக்குப் பகுதி இவரது கட்டுப்பாட்டில் இருந்தது. Lion of Panjshir என்று அழைக்கப்பட்ட மாவீரன்.

1992ம் ஆண்டு இந்த 'குறு நில மன்னர்கள்' அனைவரும் சேர்ந்து ஒரு தேசிய அரசை அமைத்தனர். அந்த அரசின் அதிபரானார் புர்ஹானுதீன் ரப்பானி. அவரிடம் பாதுகாப்பு அமைச்சரானார் அஹமத் ஷா மசூத்.

ஆனால், இந்த அரசு நீண்ட காலம் நீடிக்கவில்லை. காரணம், அவர்களுக்குள் ஏற்பட்ட கோஷ்டிப் பூசல்.

இதனால் நாடு திக்குத் தெரியாமல் தடுமாற முல்லா ஒமர் தலைமையில் ஆப்கானி்ஸ்தான் மாணவர்கள் ஒன்றிணைந்து உருவாக்கியது தான் தலிபான்.

சோவியத் என்ற ஒரு நாடே இல்லை.. இதனால் சண்டை போடவும் ஆள் இல்லை என்ற நிலையில் கையில் அமெரிக்கா தந்த ஏராளமான ஆயுதங்களை வைத்துக் கொண்டு திரிந்த முஜாகிதீன்களும் இவர்களுடன் கைகோர்த்தனர். அவர்களுக்கு பாகிஸ்தானின் உளவுப் பிரிவும் உதவ, உருவானது தலிபான் அரசு.

தலிபான் என்றால் பஸ்தூன் மொழியில் மாணவர்கள் என்று அர்த்தம். இவர்கள் மூலமாக ஆப்கானிஸ்தானை இனி தனது முழுக் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ளலாம் என கணக்குப் போட்டது பாகிஸ்தானின் உளவுப் பிரிவு.

ஆனால், நடந்தது..!

(தொடரும்..)

(கட்டுரையாளர் தட்ஸ்தமிழ் ஆசிரியர்)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+