அதை அமெரிக்கா கவனமாகக் கேட்டிருந்தால்...

(நேற்றைய 'நீங்க நல்லவரா.. கெட்டவரா...?' கட்டுரையின் தொடர்ச்சி)
பாகிஸ்தான் உளவுப் பிரிவின் உதவியோடு ஆப்கானிஸ்தானில் ஆட்சியை அமைத்த தலிபான்களுக்கு பெரும் சவாலாக மாறினார் 'Lion of Panjshir' என்று அழைக்கப்பட்ட அஹமத் ஷா மசூத்.
முந்தைய அரசில் பாதுகாப்பு அமைச்சராக இருந்த மசூத், ஆட்சியைப் பிடிக்க முயல, அவரை தலிபான்கள் போட்டுத் தள்ள முடிவு செய்ய, தனது ஆதரவுப் படைகளை காபூலில் இருந்து விலக்கிக் கொண்டு நாட்டின் வட பகுதியில் உள்ள தனது பஞ்ச்ஷேர் பள்ளத்தாக்கில் தஞ்சமடைந்தார் மசூத்.
நாட்டின் 90 சதவீத பகுதிகளை தலிபான்கள் பிடித்துவிட மிச்சமிருந்த 10 சதவீத பகுதியை பஞ்ச்ஷேர் பள்ளத்தாக்கில் இருந்தபடி நிர்வகித்தார் மசூத். இந்தப் பகுதிகளைப் பிடிக்க பாகிஸ்தான் உதவியோடு தலிபான்கள் முயல, அவர்களை கடைசிவரை தனது பகுதிக்குள் நுழைய விடாமல் தடுத்துக் காட்டினார் மசூத்.
சோவியத் படைகள் விட்டுச் சென்ற பழைய டாங்கிகள், துப்பாக்கிகள், சில ஹெலிகாப்டர்களை வைத்துக் கொண்டு தலிபான்களின் கண்களில் விரலை விட்டு ஆட்டினார் மசூத்.
ஆப்கானிஸ்தான் முழுவதும் தலிபான்களின் காட்டுமிராண்டித்தனமான ஆட்சி கட்டவிழ்த்து விடப்பட்டு பெண்களுக்கு எதிரான அடக்குமுறைகளும் அநியாயங்களும் அரங்கேறிய நிலையில், மசூதின் கட்டுப்பாட்டில் இருந்த பகுதிகளில் நாகரீகமான ஆட்சி நடந்தது. பெண்களுக்கு சம உரிமையும், அனைத்து தரப்பினருக்கும் சம நீதி என நேர்மையான ஆட்சியை நடத்தினார் மசூத்.
மசூதின் படைகளையும் தலிபான்களையும் பிரித்து வைத்தது ஒரு மலைத் தொடர் தான். அந்த மலைத் தொடரை தாண்டி வந்தால் தான் பஞ்ச்ஷேர் பள்ளத்தாக்கை அடைய முடியும் என்ற நிலையில் மலைகளில் தனது படைகளை நிறுத்தி இரவு பகலாக தலிபான்களுடன் மோதி, அவர்கள் பள்ளத்தாக்கை நெருங்கிவிடாதபடி தடுத்தார் மசூத்.
அவருக்காக உயிரைத் தந்து போராடினார் அவரது ஆதரவு படையினர். ஏராளமான இழப்புகள்.. ஆனாலும் தனது போர்க் குணத்தை இழக்காத மசூத், மக்களின் பேராதரவுடன் தலிபான்களுக்கு எதிராக ஒரு தனி மனித போராட்டம் நடத்திக் கொண்டிருந்தார் மசூத்.
ஆப்கானிஸ்தானி்ல் பாகிஸ்தான்-தலிபான் கூட்டணியால் அண்டை நாடுகளான இந்தியா, ஈரான், ரஷ்யா ஆகியவை மிரண்டு போயின. தலிபான்களை ஒடுக்காவிட்டால் தெற்காசியாவே அமைதியிழக்கும் என்பதை அமெரிக்காவிடம் இந்தியா எடுத்துச் சொன்னது.
ஆனால், அமெரிக்காவுக்கு அப்போதெல்லாம் தலிபான் குறித்து எந்தக் கவலையும் இல்லை, ஆப்கானி்தானில் நடந்த மனித உரிமை மீறல்களைக் கூட அமெரிக்கா கண்டுகொள்ளவில்லை.
இதனால் இந்த விவகாரத்தை வேறு மாதிரியாகக் கையாள முடிவு செய்த இந்தியா-ரஷ்யா-ஈரான் ஆகியவை ரகசிய கூட்டணி அமைத்தன. தலிபான்களை எதிர்க்க சரியான ஒரே ஆள் அஹமத் ஷா மசூத் மட்டுமே என்பதை நன்றாகவே உணர்ந்திருந்த இந்த நாடுகள் அவருக்கு ஆயுத, நிதி உதவிகளை செய்ய ஆரம்பித்தன.
இந்தியா மட்டும் 40 மில்லியன் டாலர் அளவுக்கு அவருக்கு நிதி உதவி செய்ததாகக் கருதப்படுகிறது. இதில் பெரும்பாலான நிதி ஆயுதங்கள் வாங்க பயன்படுத்தப்பட்டது. மேலும் தலிபான்களுடன் போரிட்டு காயமடையும் மசூதின் வீரர்களுக்கு சிகி்ச்சையளிக்க ஒரு மருத்துவமனையை ஆப்கானிஸ்தானின் வட பகுதியில் இந்தியா கட்டியது. அங்கு இந்திய உளவுப் பிரிவினரும், ராணுவ டாக்டர்களும் தங்கியிருந்து மசூதின் வீரர்களுக்கு சிகிச்சை அளித்தனர்.
ரஷ்யா தன் பங்குக்கு ஆயுதங்ளையும் டாங்கிகளையும் ஹெலிகாப்டர்களையும் வழங்கியது. இந்த ஆயுதங்களுக்கான விலையில் ஒரு பகுதியை ரஷ்யாவுக்கு ஈரான் தந்தது.
மசூத் ஒரு 'முஜாகிதீனாக' எந்த நாட்டை (சோவியத் யூனியனை) எதிர்த்துப் போரிட்டாரே அந்த நாடே (இப்போது ரஷ்யா) அவருக்கு ஆயுத உதவி செய்ய வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டது தான் 'வரலாற்று வேடிக்கை'. ரஷ்யாவின் செசன்யா பகுதியில் மதரீதியிலான தீவிரவாதம் தலையெடு்க்க தலிபான்கள் ஒரு காரணமாக அமைந்ததால், தலிபான்களை ஒடுக்க ஓடி வந்து உதவியது ரஷ்யா.
மேலும் இந்தியா இன்னொரு முக்கிய உதவியையும் செய்தது. மசூதின் முக்கிய தளபதிகளில் ஒருவரான அப்துல்லா அப்துல்லா போன்றவர்களின் குடும்பத்தினருக்கு இந்தியா அடைக்கலம் தந்தது. அடிப்படையில் ஒரு கண் டாக்டரான அப்துல்லா அப்துல்லா, மசூதின் நிர்வாகத்தில் வெளியுறவு அமைச்சராக விளங்கியவர்.
தலிபான்களால் எந்த நேரமும் தனது உயிர் போகலாம் என்பதால், தனது குடும்பத்தினரை பாதுகாக்குமாறு இவர் வைத்த கோரிக்கையை இந்தியா ஏற்றது. இவரது குடும்பம் இந்தியாவில் ஏதோ ஓரிடத்தில் ரகசியமாக குடியேற்றப்பட்டு ரா மற்றும் ஐ.பி. உளவுப் பிரிவுகளின் 24 மணி நேர கண்காணிப்பில் பாதுகாக்கப்பட்டது. குடும்பத்தை பாதுகாப்பான இடத்தில் வைத்துவிட்டு மசூதுடன் சேர்ந்து தலிபான்களுக்கு எதிரான தனது போரில் ஈடுபட்டிருந்தார் அப்துல்லா அப்துல்லா. (கடந்த ஆப்கானி்ஸ்தான் தேர்தலில் அதிபர் ஹமீத் கர்சாயை எதிர்த்துப் போட்யிட்டு தோற்றவர் தான் இந்த அப்துல்லா).
வெளியுறவு அமைச்சர் என்றால் ஏதோ 'நார்த் பிளாக்' மாதிரி ஒரு கட்டிடத்தில் அதிகாரிகள் புடை சூழ ஏசி அறையில் அமர்ந்து கொண்டு, முடிவுகள் எடுப்பது அல்ல, அப்துல்லா செய்து வந்த பணி. தனது தலைவனான மசூத்துடன் இணைந்து எந்த நேரமும் மலைகளிலும் பள்ளத்தாக்குகளிலும் ஹெலிகாப்டர்களிலும் போர் முனையிலேயே இரவு-பகலை கழித்தார் அப்துல்லா. அத்தோடு இந்தியா-ஈரான்-ரஷ்யாவுடன் அவ்வபபோது ரகசிய பேச்சு நடத்தி நிதி, ஆயுத, தூதரக உதவிகளைப் பெறுவதும் இவரது முக்கிய வேலையாக இருந்தது.
மேலும் இந்தியா-ஈரான்-ரஷ்யாவோடு நின்றுவிடாமல் தலிபான்களால் வரப் போகும் ஆபத்து குறித்து அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளின் கவனத்தையும் ஈர்க்கவும் மசூதும் அப்துல்லாவும் தீவிரமாக முயன்றனர்.
ஆனால், அதையெல்லாம் கேட்கும் மன நிலையி்ல் அப்போது அமெரிக்கா இல்லை. சோவியத் யூனியன் என்ற ஒரு நாடு இல்லாமல் போய்விட்டது, இனி நமக்கென்ன கவலை என்ற மிதப்போடு வாழ ஆரம்பித்திருந்தது.
இந் நிலையில் தான் கடும் முயற்சி்க்குப் பின் 2001ம் ஆண்டு ஏப்ரலில் பெல்ஜியம் தலைநகர் பிரஸ்ஸல்சில் உள்ள ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் பேச மசூதுக்கு வாய்ப்புக் கிடைத்தது. அந்த வாய்ப்பைப் பெற்றுத் தந்த பிரான்ஸ் நாட்டு பெண் அரசியல் தலைவரான நிக்கோல் போன்டேன்.
அவரது உதவியோடு ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் பேசிய மசூத், முதன்முதலாக ஒரு அதிர்ச்சிகரமான தகவலை வெளியிட்டார். அதை அமெரிக்கா கவனமாகக் கேட்டிருந்தால் நியூயார்க்கில் நடந்த செப்டம்பர் 11 தாக்குதலையே தவிர்த்திருக்கலாம்!
(தொடரும்)
(கட்டுரையாளர் தட்ஸ்தமிழ் ஆசிரியர்)












Click it and Unblock the Notifications