மன்மோகன் சிங்கின் 'மைக்' வேலை செஞ்சுட்டாலும்!

உலகெங்கும் இது தேர்தல் காலம். ரஷ்யாவில் அதிபர் தேர்தல், ஈரானில் நாடாளுமன்றத் தேர்தல், அமெரிக்காவில் அதிபர் தேர்தலில் போட்டியிடும் ரிபப்ளிகன் கட்சி வேட்பாளரை தேர்வு செய்ய நடந்து வரும் மாகாண அளவிலான தேர்தல்கள், பிரான்சில் அடுத்த மாதம் நடக்கவுள்ள தேர்தல் என எங்கு நோக்கினும் ஒரே தேர்தல் செய்திகள்.
நம் ஊரில், சங்கரன்கோவிலில் இந்த மாதம் நடக்கவுள்ள 18ம் தேதி தேர்தல் பிரச்சாரம் உச்சத்தில் உள்ள நிலையில், சமீபத்தில் உத்தரப் பிரதேசம், உத்தர்கண்ட், பஞ்சாப், மணிப்பூர், கோவாவில் நடந்து முடிந்துள்ளது ஒரு 'மினி நாடாளுமன்றத் தேர்தல்' எனலாம்.
உத்தரப் பிரதேசத்தில் 80, உத்தர்கண்டில் 5, பஞ்சாபில் 13, மணிப்பூரில் 2, கோவாவில் 2 என நாடாளுமன்றத்தில் மொத்தமுள்ள 543 தொகுதிகளில் 102 எம்.பி தொகுதிகளைக் கொண்டுள்ள இந்த 5 மாநிலங்களில் தேர்தல் நடந்து முடிந்து நாளை ரிசல்ட் வெளியாகப் போகிறது.
தேர்தல் முடிவுகள் குறித்து கிட்டத்தட்ட 12 எக்ஸிட் போல் முடிவுகள் வெளியாகியுள்ளன.
இதில் உத்தர்கண்ட், மணிப்பூரில் காங்கிரசும், பஞ்சாபில் வெல்லப் போவது காங்கிரசா அல்லது அகாலிதளம்-பாஜக கூட்டணி என்பதை சொல்ல முடியாது என்றும், கோவாவில் மட்டும் பாஜகவும் வெல்லும் என்கின்றன எக்ஸிட் போல்கள்.
மிக முக்கிய மாநிலமாக எல்லோராலும் பார்க்கப்படும் உத்தரப் பிரதேசத்தில் பகுஜன் சமாஜ் கட்சியின் முதல்வர் மாயாவதி படுதோல்வி அடைவார் என்றும் சமாஜ்வாடி கட்சியின் தலைவர் முலாயம் சிங் யாதவுக்கு பெரும் வெற்றி கிடைக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.
இந்தத் தேர்தல் முலாயம் சிங்குக்கும் மாயாவதிக்கும் இடையிலான மோதலாகத் தான் ஆரம்பித்தது. ஆனால், பிரச்சாரத்தின்போது இது முலாயமின் மகன் அகிலேஷ் யாதவுக்கும் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் மகன் ராகுல் காந்திக்கும் நடந்த தனிப்பட்ட மோதல் போல மாறிவிட்டது.
இந்த இரு இளம் தலைவர்களும் ஒருவரை ஒருவர் வாரி விட்டுக் கொண்டு, தாக்கிக் கொண்டு கடும் பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.
பாஜகவைப் பொறுத்தவரை 4வது இடத்திலிருந்து 3 இடத்துக்கு வந்துவிட்டாலே பெரும் வெற்றி தான் என்ற நிலையில் தான் பிரச்சாரமே செய்தது.
மாயாவதியோ எப்படியாவது மீண்டும் ஆட்சியைப் பிடித்துவிட வேண்டும் என்ற நோக்கத்தில் அரசு எந்திரத்தை முழு அளவில் இறக்கிவிட்டார்.
காங்கிரசைப் பொறுத்தவரை அந்தக் கட்சி உத்தரப் பிரதேசத்தில் அடக்கம் செய்யப்பட்டு கிட்டத்தட்ட 20 ஆண்டுகள் ஆகிவிட்டன. ஆனால், கடந்த மக்களவைத் தேர்தலில் யாரும் எதிர்பாராத அளவுக்கு மீண்டும் எழுந்து காட்டியது காங்கிரஸ். 3,4 இடங்களில் மட்டுமே வென்று வந்த அந்தக் கட்சி கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் 18 இடங்களில் வென்று காட்டியது.
அதற்கு முக்கியக் காரணமாகக் கூறப்பட்டது ராகுல் காந்தியின் பிரச்சாரம். இதனால், இப்போதைய சட்டமன்றத் தேர்தலிலும் உத்தரப் பிரதேசம் முழுக்க முழுக்க ராகுல் காந்தி வசம் ஒப்படைக்கப்பட்டது.
சோனியா காந்தி கூட பஞ்சாப், உத்தர்கண்ட்டில் தீவிரம் காட்டியதோடு தனது பிரச்சாரத்தை சுருக்கிக் கொண்டார்.
நமது பிரதமர் மன்மோகன் சிங் இந்தத் தேர்தல்கள் ஏதோ, ரஷ்யாவில் நடப்பது மாதிரி தான் நடந்து கொண்டார். அங்கொன்றும் இங்கொன்றுமாக நடந்த சில பிரச்சாரப் பொதுக் கூட்டங்களுக்கு அவரை சிறப்பு விமானத்திலும் சிறப்பு ஹெலிகாப்டரிலும் அழைத்துச் சென்றனர். அதிலும் ஒரு இடத்தில் மைக் செயல்படவில்லை. இதனால் பொதுக் கூட்டத்தில் பேசாமலேயே திரும்பி வந்துவிட்டார். மைக் ஒர்க் பண்ணியிருந்தாலும் அவர் அப்படித்தான் செய்திருப்பார்!. அவர் என்ன பேசியிருந்தாலும் அதை வாக்காளர்கள் யாரும் சீரியசாகவும் எடுத்துக் கொண்டிருக்க மாட்டார்கள். அவரது பேச்சைக் கேட்டு காங்கிரசுக்கு ஓட்டு போட்டேன் என்று யாரும் சொல்லப் போவது இல்லை.
பேச்சு விஷயத்தில் கிட்டத்தட்ட நரசிம்ம ராவுடன் போட்டி போட்டுக் கொண்டு வெற்றியும் கண்டு வருகிறார் மன்மோகன். வாழ்க வளமுடன்.
சரி.. உத்தரப் பிரதேசத்தில் எக்ஸிட் போல் முடிவுகள் சொல்வது என்னவென்றால், அங்கு ஜெயிக்கப் போவது சமாஜ்வாடி கட்சி தான். இந்தக் கட்சிக்கு சுமார் 180 இடங்கள் வரை கிடைக்கும். அதாவது ஆட்சியமைக்கத் தேவையான இடங்களை விட 202 இடங்களை விட கொஞ்சம் கம்மி.
இரண்டாவது இடத்தை மாயாவதி பிடிப்பார். ஆனால், அவருக்கு 100 இடம் கூட தேறாது. அதைவிடக் குறைவான இடங்களே கிடைக்கும்.
மூன்றாவது இடத்தை பாஜக பிடிக்கும், 4வது இடம் ராகுல் காந்திக்கும் காங்கிரசுக்கும் கிடைக்கும்.
இதில் பாஜகவுக்கும் காங்கிரசுக்கும் இடையிலான இடைவெளி அதிகபட்சம் 10 சீட் அவ்வளவு தான். பாஜக 60 இடங்களைப் பிடித்தால் காங்கிரஸ் 50 இடங்களைப் பிடிக்கும். மற்றபடி இரு கட்சிகளுக்குமே படுதோல்வி உறுதி. இதைத் தான் எல்லா எக்சிட் போல் முடிவுகளும் சொல்கின்றன.
இந்தத் தோல்வியால் ஏதாவது ஒரு கட்சி சந்தோஷப்பட போகிறது என்றால் அது பாஜக தான். முதல் சந்தோஷம்.. அடுத்த முதல்வர் யார் என்று கர்நாடக பாணியில் சண்டை நடந்து, நாறி, பெயர் டேமேஜ் ஆகாமல் தப்பித்தது.
இரண்டாவது, இப்போது ஆட்சிக்கு வந்துவிட்டால் வரும் 2014ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் அது பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால். ஆட்சிக்கு வந்து 2 வருடம் ஆன எந்தக் கட்சி மீதும் மக்களுக்கு வெறுப்பு ஏற்பட்டுவிடுவது சகஜம். இதனால், இப்போது வென்று நாடாளுமன்றத் தேர்தலில் மக்களின் எதிர்ப்பு ஓட்டை சந்திப்பதை விட, இப்போது தோற்று, வரும் நாடாளுமன்றத் தேர்தலில் மத்தியில் காங்கிரசையும் மாநில அரசையும் எதிர்த்து பிரச்சாரம் செய்து அதிக சீட்களில் வெல்லலாம்.
அதாவது மத்தியில் ஆட்சிக்கு வருவதற்காக உத்தரப் பிரதேசத்தில் தோல்வி கிடைத்தால் நல்லது. இது தான் பாஜகவின் மன நிலை. இதில் இரண்டாவது விஷயமான உத்தரப் பிரதேசத்தில் தோல்வி கிடைத்துவிடும் போலிருக்கிறது. ஆனால், மத்தியில் ஆட்சிக்கு வரும் விஷயம் நடக்குமா?. இப்போதைய நிலையில் சாத்தியமில்லை. இரு ஆண்டுகளில் அரசியல் சூழ்நிலைகள் மாறலாம். அப்போது எதுவும் நடக்கலாம். ஆல் த பெஸ்ட் பிஜேபி.
மாயாவதியைப் பொறுத்தவரை, அவர் இந்த சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றால், அவரது அடுத்த குறி, மத்தியில் பிரதமர் பதவியைப் பிடிப்பது தான். ஆனால், அவருக்கு அந்தக் கஷ்டத்தை மக்கள் தர மாட்டார்கள் போலிருக்கிறது. இனி உத்தரப் பிரதேசத்திலேயே மீண்டும் கட்சியை வலுப்படுத்தும் வேலையைப் பார்க்கவே அவருக்கு நேரம் போதாது. மாயாவதிக்கு இனி பிரதமர் பதவி எல்லாம் ரொம்ப தூரம். அதுக்குத் தான் தமிழக முதல்வர் ஜெயலலிதா இருக்காரே. சோ- நரேந்திர மோடியுடன் சேர்ந்து அதை ஜெயலலிதா பார்த்துப்பார்.
முலாயம் சிங்கைப் பொறுத்தவரை இது ஜாக்பாட். ரொம்ப நாட்களாக மத்தியிலும் மாநிலத்திலும் பதவியில் இல்லாமல் தவித்துப் போய்விட்டார் மனிதர். 23 எம்பி சீட்களில் வென்று தானாகவே முன் வந்து மத்தியில் காங்கிரஸை ஆதரித்த போதும், அவரை ஆட்சியில் சேர்த்துக் கொள்ளவில்லை சோனியா காந்தி.
அதாவது அவருடன் கூட்டணி போட்டால், உத்தரப் பிரதேச சட்டமன்றத் தேர்தலில் வெல்ல முடியாது என ராகுல் காந்தி சொன்னதைக் கேட்டு முலாயம் சிங்கை மதிக்காமலேயே இருந்து வந்ததார் சோனியா.
ஆனாலும் 23 எம்பிக்களை வைத்துக் கொண்டு என்ன தான் செய்வது. பாஜகவுடன் கூட்டணி அமைக்க முலாயம் தயாரில்லை. முஸ்லீம் ஓட்டு போய்விடும். மேலும் மாநிலத்தில் மாயாவதி அரசு போட்டு வந்த வழக்குகள் வேறு. அதிலிருந்து தப்பிக்க மத்திய அரசுடன் நெருக்கமாக இருப்பதே நல்லது. இதனால், மதியாதார் வாசல் என்றாலும் தானாகவே காங்கிரஸ் மீது ஒட்டுண்ணி மாதிரி ஒட்டுக் கொண்டிருந்தார் முலாயம்.
இப்போது அவர் ஆட்சியைப் பிடித்துக் காட்டினால், முதல் அதிர்ச்சி மாயாவதிக்கு அல்ல, நிச்சயம் ராகுல் காந்திக்குத் தான். காரணம், உத்தரப் பிரதேசத்தில் ராகுல் காந்தி மாயஜாலம் செய்யப் போகிறார், ராகுல் அலை வீசுகிறது. முதலிடத்தைப் பிடித்துத் தருவார் அல்லது நிச்சயம் 2வது இடத்தைப் பிடித்துத் தருவார் என காங்கிரஸ்காரர்கள் புல்லரித்துக் கொண்டிருந்தனர்.
ஆனால், அரிப்பு தான் மிஞ்சும் போலிருக்கிறது. 2வது இடம் கிடைக்காவிட்டாலும் பரவாயில்லை, கிடைக்கப் போவது கடைசி இடம் என்கின்றன எக்ஸிட் போல் முடிவுகள்.
முலாயம் சிங்கிடம் ராகுல் தோற்றிருந்தாலும் பரவாயில்லை. இது அகிலேஷ் யாதவிடம் ராகுலுக்குக் கிடைத்த தோல்வி என்பதே உண்மை. காரணம், இந்தத் தேர்தலில் சமாஜ்வாடியின் பிரச்சாரத்தை முழுக்க முழுக்க தனது தோளில் தூக்கிக் கொண்டு கடுமையாகப் போராடியது முலாயமின் மகன் அகிலேஷ் தான்.
இந்தத் தேர்தலே ராகுல் Vs அகிலேஷ் என்று தான் பார்க்கப்பட்டது. ராகுலை விட இளையவரான இந்த இளம்புயல், ஒரு பக்கம் மாயாவதி, இன்னொரு பக்கம் பாஜகவை சமாளித்துக் கொண்டு ராகுல் காந்தியையும் சமாளித்தார்.
வேட்பாளர் தேர்வு, பிரச்சார யுக்தி, சூறாவளிப் பிரச்சாரம் என இந்த முறை முலாயமுக்கு எல்லாவிதத்திலும் பக்க பலமாக நின்றது அகிலேஷ். இந்த முறை சமாஜ்வாடி வென்றால் அதற்குக் காரணம் முலாயம் என்பதை விட அகிலேஷ் என்றே சொல்லலாம்.
ஆனால், காங்கிரஸ் தோற்றால் அதற்குக் காரணம் சோனியா அல்ல, ராகுல் காந்தி மட்டும் தான்.












Click it and Unblock the Notifications