இந்த மாதம் மின் கட்டணம் அதிகமாக வந்திருக்கா? உண்மையான காரணம் என்ன? இபி வட்டாரம் ஷாக் தகவல்
சென்னை: தமிழகத்தில் புதிய தவெக அரசு அமைந்த சில மாதங்களிலேயே, தற்போது பொதுமக்கள் மத்தியில் மின் கட்டணம் தொடர்பான ஒரு மிகப்பெரிய சர்ச்சை வெடித்துள்ளது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நுகர்வோருக்கு வழக்கத்தை விட மிக அதிக அளவிலும், அநியாயமான முறையிலும் மின் கட்டணம் விதிக்கப்பட்டுள்ளதாகப் தவெக அரசு மீது மக்கள் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளைச் சுமத்தி வருகின்றனர்.
தொழில்நுட்பக் குளறுபடிகளும் மக்கள் அவதியும்
தமிழக மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் மின் கணக்கீடு மற்றும் கட்டணம் செலுத்தும் முறைகளில் பரவலாக ஏற்பட்டுள்ள தொழில்நுட்பக் கோளாறுகளே இந்த அளவுக்குக் கூடுதல் கட்டணம் வருவதற்கு முதன்மைக் காரணம் என்று கூறப்படுகிறது.
பல வீடுகளில் மின்சாரப் பயன்பாடு குறைவாக இருந்தபோதிலும், கணக்கீட்டு முறையில் ஏற்பட்ட தவறுகளால் ஆயிரக்கணக்கில் மின் கட்டணம் வந்துள்ளதாகப் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். இந்தத் தவறான மற்றும் அதீத மின் கட்டணங்களால் நடுத்தர மற்றும் ஏழை எளிய மக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அதிகாரிகளின் மெத்தனம்: மின் வாரிய வட்டாரங்கள் தகவல்
இந்த மின் கட்டணக் குளறுபடிகள் குறித்து மின்சார வாரியத்தின் வட்டாரங்கள் சில திடுக்கிடும் உண்மைகளைத் தெரிவித்துள்ளன.
கள அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் நேரடியாகச் சென்று செய்ய வேண்டிய அடிப்படை ரீடிங் முறையாகச் செய்யாமல் அலட்சியமாக இருந்ததே இதற்கு மிக முக்கியக் காரணம் என்று அந்த வட்டாரங்கள் சுட்டிக்காட்டுகின்றன.

மின்சார மீட்டர்களை நேரில் சென்று ஆய்வு செய்யாமல், அலுவலகத்தில் அமர்ந்து கொண்டே தோராயமாகக் கணக்கு எழுதியதும், பழுதடைந்த மீட்டர்களைக் கண்டறிந்து மாற்றாமல் விட்டதுமே இந்தத் தவறுக்குக் காரணமாக அமைந்துள்ளது. அதே சமயம் நேரில் சென்று ரீடிங் எடுத்தாலும் அதை தவறாக எடுத்துள்ளனர்.
அதிகாரிகளின் இந்த தொடர் மெத்தனப் போக்கால், நுகர்வோர் மட்டுமின்றி மின்சார வாரியமும் மிகப்பெரிய அளவிலான நிதி இழப்பைச் சந்தித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
லைமைப் பொறியாளரின் அதிரடி உத்தரவு
பொதுமக்கள் மத்தியில் இந்த விவகாரம் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியதை அடுத்து, மின்சார வாரியத்தின் தலைமைப் பொறியாளர் சார்பாக முக்கியமான சில உத்தரவுகள் அலுவல் ரீதியாக பிறப்பிக்கப்பட்டு உள்ளதாம்.
அந்த உத்தரவில், "அனைத்து பகுதிகளிலும் ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளின் தங்கள் அடிப்படை பணிகளை உறுதி செய்ய வேண்டும். இனிவரும் காலங்களில் ஊழியர்கள் நேரடியாகக் களத்திற்குச் சென்று வழக்கமான, நேர்மையான ரீடிங் மேற்கொள்ள வேண்டும். இதில் எந்தவிதமான சமரசமும் செய்துகொள்ளக் கூடாது" என்று திட்டவட்டமாகக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், எதிர்காலத்தில் இதுபோன்ற தொழில்நுட்ப மற்றும் கணக்கீட்டுத் தவறுகள் மீண்டும் நிகழாமல் இருக்க ஊழியர்களுக்கு உரிய அறிவுறுத்தல்களை வழங்குமாறும், தவறும் அதிகாரிகள் மீது கடுமையான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்துள்ளார்.
புதிய அரசு பொறுப்பேற்ற வேளையில் எழுந்துள்ள இந்த மின் கட்டணப் பிரச்சினைக்கு தவெக அரசு உடனடியாகத் தீர்வு கண்டு, பாதிக்கப்பட்ட மக்களுக்குக் கூடுதல் கட்டணத்திலிருந்து நிவாரணம் வழங்க வேண்டும் என்பதே ஒட்டுமொத்த தமிழக மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.


Click it and Unblock the Notifications
