தோஹா மாநாடும்.. நீங்கள் (லோன் போட்டு) வாங்கப் போகும் ரெப்ரிஜிரேட்டர் விலையும்!
-ஏ.கே.கான்

தோஹா மாநாடும்.. நீங்கள் (லோன் போட்டு) வாங்கப் போகும் ரெப்ரிஜிரேட்டர் விலையும்!
இந்த மாத கடைசியில் கத்தார் நாட்டின் தலைநகர் தோஹாவில் ஐக்கிய நாடுகள் சபையின் சர்வதேச சுற்றுச்சூழல், காலநிலை தொடர்பான ஒரு மாநாடு நடக்கப் போகிறது. டிசம்பர் முதல் வாரத்தில் முடிவடையும் இந்த மாநாட்டின் முடிவைப் பொறுத்து நீங்கள் வாங்கப் போகும் பிரிட்ஜ், ஏசியின் விலை பல மடங்கு உயரலாம்!
தோஹாவில் நடக்கும் ஐ.நா. மாநாட்டுக்கும் நான் அடுத்த மாதம் லோன் போட்டு, லோல் பட்டு வாங்கப் போற பிரிட்ஜுக்கும் என்னையா சம்பந்தம் என்று நீங்கள் கேட்கலாம்...

ஆரம்பித்து வைத்தது ஆல்கஹாலும், ஈதரும்...
1760களில் ஆல்கஹாலும், ஈதரும் தான் குளிர்விக்கப் பயன்படுத்தப்பட்ட ரசாயனப் பொருட்கள். பின்னர் அமோனியா, மெத்தில் குளோரைடு, புரேப்பேன் ஆகிய வாயுக்கள் பயன்படுத்தப்பட்டன. ஆனால், இவையெல்லாம் சட்டென தீப் பிடித்துக் கொண்டு ஏராளமான விபத்துகளை உருவாக்கின. மேலும் இவற்றில் விஷத்தன்மையும் ஜாஸ்தி.

வந்தது குளேரோபுளூரோ கார்பன்...
இதையடுத்து உருவானது தான் விஷத்தன்மையற்ற, எளிதில் தீப்பிடிக்காத வாயுக்களான குளேரோபுளூரோ கார்பன் (CFC), ஹைட்ரோகுளோரோபுளூரோ கார்பன் (HCFC), ஹைட்ரோபுளுரோ கார்பன் (HFC) ஆகியவை. இதன் வர்த்தகப் பெயர் பிரீயான். இது உருவாக்கப்பட்டது 1928ம் ஆண்டு. அன்று தான் ஏசி. ரெப்ரிஜிரேட்டர் புரட்சியும் உருவானது எனலாம். (இப்போது இந்த பிரீயானுக்கான டிரேட்மார்க்கை தன்வசம் வைத்திருப்பது அமெரிக்காவின் டூபாண்ட் (DuPont) நிறுவனம்)

அத்தியாவசியமான ஏசியும் பிரிட்ஜும்...
இதைத் தொடர்ந்து வீடு இல்லாவிட்டாலும் பரவாயில்லை, ரெப்ரிஜிரேட்டர் இல்லாமல் இருக்க முடியுமா என்ற நிலைமை அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் மிக விரைவிலேயே உண்டானது. அதே போல ஏசி இல்லாத வீடுகளும் அலுவலங்களும் அங்கு குறைந்து போயின.
அடுத்தபடியாக வளைகுடா நாடுகளில் எண்ணெய் மூலம் பணம் கொட்ட ரோடுகளில் கூட ஏசி வந்தது. ஏழை நாடுகளாகக் கருதப்பட்ட நாடுகளிலும் ஏசியும் பிரிட்ஜும் இன்று அத்தியாவசியமான பொருட்களாகிவிட்டன.

எல்லாமே உல்டா....
இப்படி எங்கெங்கும் பிரிட்ஜ், ஏசி என்று ஆகிப் போன நிலையில் அதில் பயன்படுத்தப்படும் குளேரோபுளூரோ கார்பன் வாயுக்களின் ஆபத்து குறித்து உடனடியாக யாரும் அறியவில்லை. கொஞ்சம் லேட்டாக 1980களில் தான் ஆபத்து உலகுக்கு தெரியவந்தது. இந்த வாயுக்கள் பூமியை சூரியன் மற்றும் அண்டத்தின் பயங்கர கதிர்வீச்சுகளில் இருந்து காப்பாற்றி வரும் ஓசோன் லேயரை சுரண்டி எடுத்துவிட்டன. இதனால் பூமியில் வெப்பமயமாதல், வானிலையில் மாற்றம், வெயில் காலத்தில் மழை, மழை காலத்தில் நீருக்கு பஞ்சம், துருவப் பகுதிகளில் பனி உருகல், பாலைவனத்தில் வெள்ளம் என்று எல்லாமே உல்டா ஆனது.

HCFC22க்கு எதிராக போர்க் குரல்...
இதைத் தொடர்ந்து இந்த வாயுக்களுக்கு எதிரான போர்க் குரல்கள் எழுந்தன. உடனடியாக HCFC போன்ற வாயுக்களைத் தயாரிப்பதையும் பயன்படுத்துவதையும் நிறுத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. இது குறித்து ஐ.நா. பலமுறை விவாதம் நடத்தி 2113ம் ஆண்டு முதல் HCFC22 எனப்படும் குளிர்விக்கும் வாயுவுக்கு தடை விதித்தது. இந்த வாயு தான் இந்தியாவில் பிரிட்ஜுகளிலும் ஏசிக்களிலும் மிக அதிகமாக பயன்படுத்தப்படுவதாகும்.

இந்திய நிறுவனங்களின் திட்டத்துக்கு ஆப்பு...
இதையடுத்து இந்திய ரெப்ரிஜிரேட்டர், ஏசி தயாரிப்பு நிறுவனங்கள் HFC410A என்ற வாயுவுக்கு மாறத் திட்டமிட்டுள்ளன. ஆனால், இங்கு தான் புதிய பிரச்சனையை அமெரிக்கா கிளப்பியுள்ளது. HFC410A வாயு கூட ஓசோன் லேயருக்கு உகந்தது அல்ல என்று கூறி, இதைவிடச் சிறந்த, சுற்றுச்சூழலுக்கு மிக மிக பொருத்தமான வாயுக்களைத் தான் பயன்படுத்த வேண்டும் என்று கூறி வருகிறது.

அது என்னப்பா ரொம்ப நல்ல வாயு...
அது என்னப்பா ரொம்ப நல்ல வாயு என்ற கேள்விக்கு அவர்களே பதிலும் தருகின்றனர். அமெரிக்காவின் டூபாண்ட், ஹனிவெல் ஆகியவையும் ஜப்பானின் டெய்ச்சி சான்க்யோ நிறுவனம் ஆகியவையும் கண்டுபிடித்துள்ள Genetron போன்ற வாயுக்கள் தான் இனிமேல் சர்வதேச அளவில் பயன்படுத்தப்பட வேண்டும். அப்போது தான் ஓசோன் படலத்தை காப்பாற்ற முடியும் என்கின்றனர்.

தோஹா மாநாடு...
இதைத் தான் அடுத்த சில நாட்களில் தோஹாவில் நடக்கவுள்ள ஐ.நாவின் மாநாட்டில் அமெரிக்காவும் அதன் ஆதரவு ஐரோப்பிய நாடுகளும் முன் வைக்கவுள்ளன. ஐ.நா. என்றாலே அமெரிக்கா தான் என்ற நிலையில், இந்த மாநாட்டில் எடுக்கப்படும் முடிவுகள் நிச்சயம் அமெரிக்கா சொல்வதாகவே இருக்கும்.
சரி, நீங்கள் சொல்லும் வாயுவையே பயன்படுத்துகிறோம் என்று நாம் ஒப்புக் கொண்டால் என்ன ஆகும். இதற்கு நீங்கள் மீண்டும் முதல் பாராவை படிக்க வேண்டும். இந்த Genetron வாயுவின் விலை இப்போது இந்திய ஏசி தயாரிப்பு நிறுவனங்கள் பயன்படுத்தும் வாயுவின் விலையோடு ஒப்பிட்டால் பல மடங்காகும்.

ஓசோனை காக்கப் போகிறார்களோ இல்லையோ...
இதனால், இந்த வாயுக்களுக்கு இந்தியா மாறினால் ஏசியின் விலையும் ரெப்ரிஜிரேட்டர்களின் விலையும் கடுமையான உயரப் போவது நிச்சயம். இதன் ஒட்டுமொத்த பலனும் இந்த வாயுவுக்கு காப்புரிமை வைத்துள்ள அமெரிக்கா, ஜப்பான் நிறுவனங்களே போகும். காரணம், இதைத் தயாரிக்கும் தொழில்நுட்பத்தை இவர்கள் வேறு யாருக்கும் தரப் போவதில்லை.
உலகமே சேர்ந்து ஓசோனை காக்கப் போகிறார்களோ இல்லையோ, அமெரிக்க நிறுவனங்களை காக்கப் போவது மட்டும் நிஜம்!
(கட்டுரையாளர் ஒன் இந்தியா தமிழ் ஆசிரியர்)












Click it and Unblock the Notifications