FACT CHECK: திமுக கவுன்சிலரால் கொல்லப்பட்ட ராணுவ வீரரின் திறமை.. நடிகர் பகிர்ந்த வீடியோ உண்மையா?
இதே வீடியோவை துப்பாக்கி படத்தில் வில்லனாகவும், அஞ்சான் படத்தில் சூர்யாவின் நண்பராகவும் நடித்த வித்யுத் ஜம்வாலும் ட்விட்டரில் பகிர்ந்து இருந்தார்.
சென்னை: திமுக கவுன்சிலரால் கொல்லப்பட்ட ராணுவ வீரர் பிரபுவின் திறமையை பாருங்கள் என்று குறிப்பிட்டு வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் அதிகளவில் பகிரப்பட்டு வரும் நிலையில் அந்த வீடியோவில் இருப்பது பிரபுதானா? அல்லது வேறொரு நபரா என்ற உண்மை தன்மையை அலசுவோம்.
கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளியை அடுத்துள்ளது வேலம்பட்டி கிராமம். அந்த ஊரை சேர்ந்த 28 வயது ராணுவ வீரர் பிரபுவும் அவரது 33 வயது அண்ணன் பிரபாகரன் ராணுவ வீரர்களாக உள்ளனர்.
இந்த நிலையில், கடந்த பிப்ரவரி 8 ஆம் தேதி குடிநீர் தொட்டி அருகே பிரபாகரன் துணி துவைத்துக் கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக நாஹோகனஹள்ளி பேரூராட்சி திமுக கவுன்சிலர் சின்னச்சாமி சென்றுள்ளார்.

துணி துவைத்ததில் பிரச்சனை
அப்போது பிரபாகரனை கண்ட சின்னசாமி, குடிநீர் எடுக்கும் இடத்தில் இப்படி துணி துவைப்பது சரியா? என்று கேட்டு உள்ளார். இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு இருக்கிறது. இதனால் கோபமடைந்த திமுக கவுன்சிலர் சின்னசாமி, அன்று மாலை 10க்கும் மேற்பட்ட ஆட்களை அழைத்து சென்று ராணுவ வீரர்களான சகோதரர்கள் பிரபாகரன் மற்றும் பிரபுவுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

திமுக கவுன்சிலர் தாக்குதல்
அந்த வாக்குவாதம் முற்றி கைகலப்பாக மாறி உள்ளதாம். அதில் பிரபாகரன் மற்றும் அவரது தம்பி பிரபு ஆகியோர் காயம் அடைந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டனர். இதில் மிகவும் படுகாயம் அடைந்த ராணுவ வீரர் பிரபு உயிருக்கு ஆபத்தான நிலையில் ஓசூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டார்.

உயிரிழந்த பிரபு
ஓசூர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனை அடுத்து நாகரசம்பட்டி போலீசார் கொலை வழக்கு பதிவு செய்தனர். திமுக கவுன்சிலர் சின்னசாமி மற்றும் அவரது ஆதரவாளர்கள் தனது கணவரை தாக்கியதாக ராணுவ வீரர் பிரபுவின் மனைவி பிரியா நாகரசம்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

பாஜக போராட்டம்
இந்த புகாரை தொடர்ந்து, கவுன்சிலர் சின்னசாமி, அவரது மகன்கள் ராஜபாண்டி, சென்னை காவல்துறையில் உள்ள குருசூரியமூர்த்தி, குணநிதி, புலிப்பாண்டி, கவுன்சிலர்களின் உறவினர்கள் மணிகண்டன், வேடியப்பன், சின்னசாமி, காளியப்பன் ஆகிய 9 பேரை கைது செய்தனர். ராணுவ வீரர் கொலைக்கு கடும் கண்டனம் தெரிவித்த தமிழ்நாடு பாஜக, உண்ணாவிரத போராட்டத்தையும் நடத்தியது.

டிரெண்டாகும் வீடியோ
இந்த நிலையில் தற்போது ஒரு வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பகிரப்பட்டு வருகிறது. பாஜகவுக்கு ஆதரவாக தொடர்ந்து பதிவுகளை வெளியிட்டு வரும் ரகுவீரன் என்ற பெயர் கொண்ட பேஸ்புக் கணக்கில் இந்த வீடியோ பகிரப்பட்டு அதை, பேஸ்புக், ட்விட்டர், இன்ஸ்டாகிராம், வாட்ஸ் அப் என அனைத்திலும் பகிர்ந்து வருகிறார்கள்.

திமுக மீது விமர்சனம்
"நான்கு பேருக்கு..... பிறந்தாலும் பிறப்பு தான், ஒழுக்கத்துக்கு, பிறந்தாலும் பிறப்பு தான். படுகொலை செய்யப்பட்ட ராணுவ வீரர் பிரபுவின் திறமையை பாருங்கள். இப்படிப்பட்ட ராணுவ வீரர்... தமிழகத்தில் முதல் பிரிவை சார்ந்த திமுக, கவுன்சிலரால் கொடூரமாக கொல்லப்பட்டார். வினாச காலே விபரீத புத்தி. அதுவே திமுக வின்... பாரம்பரிய யுக்தி." என்று திமுகவையும் விமர்சித்து அந்த வீடியோவுடன் பதிவிட்டு வருகிறார்கள்.

வீடியோவை பகிர்ந்த நடிகர்
பல்வேறு சாகசங்களை செய்யும் அந்த வீடியோவில் இடம்பெற்ற வீரர் பிரபுதானா என்பதை அறிய வீடியோவின் உண்மை தன்மையை ஆராய்ந்தோம். அப்போது இதே வீடியோவை துப்பாக்கி படத்தில் வில்லனாகவும், அஞ்சான் படத்தில் சூர்யாவின் நண்பராகவும் நடித்த வித்யுத் ஜம்வாலும் ட்விட்டரில் பகிர்ந்து இருந்தார்.

உண்மை தன்மை
அவர் யார் என்று வீடியோவை வைத்து தேடியபோது இந்த சாகசங்களை செய்தவரும் ஒரு ராணுவ வீரர்தான். ஆனால், அவர் பெயர் பிரபு இல்லை. அன்மோல் சவுதாரி. அன்மோல் சவுதாரி இதுமட்டுமின்றி மேலும் பல வீடியோக்களை எடுத்து இன்ஸ்டாகிராமில் தொடர்ந்து பதிவிட்டு வருகிறார். அவருக்கு சுமார் 1 லட்சம் ஃபாலோயர்கள் உள்ளனர்.

Fact Check
வெளியான செய்தி
திமுக கவுன்சிலரால் கொல்லப்பட்ட ராணுவ வீரர் பிரபுவின் திறமையை பாருங்கள் என்று குறிப்பிட்டு பகிரப்படும் சாகச வீடியோ
முடிவு
பகிரப்படும் வீடியோவில் இருப்பது பிரபு அல்ல. அன்மோல் சவுதாரி என்ற ராணுவ வீரர்.












Click it and Unblock the Notifications