ஷாக்! குஜராத் பிரசாரத்தில் பாஜக வேட்பாளருக்கு செருப்பு மாலை? தீயாக பரவும் வீடியோ.. உண்மை என்ன
டெல்லி: குஜராத் தேர்தல் நெருங்கும் நிலையில், அங்கு பாஜக வேட்பாளருக்குப் பொதுமக்கள் செருப்பு மாலை அணிவித்ததாக இணையத்தில் வீடியோ ஒன்று பரவி வருகிறது.
குஜராத் மாநிலத்தில் இப்போது பூபேந்திர படேல் தலைமையிலான பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. கடந்தாண்டு இறுதியில் தான் விஜய் ரூபானி நீக்கப்பட்டு பூபேந்திர படேல் முதல்வராக நியமிக்கப்பட்டார்.
இதற்கிடையே அடுத்த மாதம் குஜராத்தில் இரண்டு கட்டங்களாக டிசம்பர் 1 மற்றும் 5ஆம் தேதிகளில் தேர்தல் நடைபெறுகிறது. அதைத் தொடர்ந்து டிச. 8இல் வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.

குஜராத்
கடந்த 20 ஆண்டுகளில் குஜராத்தில் பாஜக ஆட்சியை இழந்தது இல்லை. இதனால் எப்படியாவது மீண்டும் ஆட்சியைத் தக்க வைக்க பாஜக முயல்கிறது. மேலும், பிரதமர் மோடியின் சொந்த மாநிலம் குஜராத் என்பதால், இதைக் கவுரப் பிரச்சினையாகவும் பார்க்கிறது. இதன் காரணமாகப் பிரதமர் நரேந்திர மோடி தொடங்கிப் பல பாஜக தலைவர்கள் நேரடியாக களத்தில் இறங்கி பிரசாரம் செய்து வருகின்றனர். மாநில அரசின் மீது இருக்கும் அதிருப்தியை மோடியின் பிம்பம் மூலம் தகர்க்க முடியும் என்று பாஜக தலைமை உறுதியாக நம்புகிறது.

பிரசாரம்
இருப்பினும், கடந்த 2017 தேர்தலிலேயே பாஜக வென்ற இடங்களின் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்து இருந்தது. கடந்த சட்டசபைத் தேர்தலில் காங்கிரஸ் இறங்கி வேலை செய்ததில் பாஜகவால் 99 இடங்களை மட்டுமே கைப்பற்ற முடிந்தது. இந்த முறை மீண்டும் அப்படியொரு சூழல் ஏற்படக் கூடாது என்பதால் பாஜக தீவிரமாகப் பிரசாரம் செய்து வருகிறது. அதேபோல ஆம் ஆத்மி இம்முறை குஜராத்தில் போட்டியிடும் நிலையில், அது காங்கிரஸ் வாக்கைப் பிரிக்கும் என்று பாஜக நம்புகிறது.

வீடியோ
இதனால் உற்சாகத்துடன் பாஜக தலைவர்கள் பிரசாரம் செய்து வருகின்றனர். ஆளும் கட்சி மீதான அதிருப்தியைச் சமாளிக்க சுமார் 38 பாஜக எம்எல்ஏக்களுக்கு மீண்டும் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படவில்லை. இந்தச் சூழலில் குஜராத் பாஜக வேட்பாளருக்கு நிகழ்ந்த சோகம் என்று இணையத்தில் வீடியோ ஒன்று பரவி வருகிறது. அதாவது பிரசாரத்திற்குச் சென்ற பாஜக வேட்பாளரை அங்கிருந்த பொதுமக்கள் விரட்டி அடித்ததாகக் கூறி இந்த வீடியோவை நெட்டிசன்கள் சிலர் பரப்பி வருகின்றனர்.

செருப்பு மாலை
மொத்தம் 24 நொடிகள் ஓடும் அந்த வீடியோவை காங்கிரஸ் ஆதரவாளர்கள் பலரும் தங்கள் ட்விட்டரில் பகிர்ந்து வருகின்றனர். அந்த வீடியோவில் பாஜக வேட்பாளர் மக்களிடம் வாக்கு கேட்டுச் செல்கிறார். அப்போது அங்கிருந்த சிலரிடம் வாக்கு கேட்டுச் செல்லும் போது, திடீரென அவர்கள் பாஜக வேட்பாளருக்குச் செருப்பு மாலை அணிவிக்கின்றனர். மேலும், ஆவேசமாக எதோ செல்கிறார்கள். அதற்குள்ள வேட்பாளர் அருகே வந்த பாஜகவினர், செருப்பு மாலையை அகற்றி அவரை பத்திரமாக அழைத்துச் செல்கின்றனர்.

உண்மை என்ன
இந்த வீடியோ இணையத்தில் மிக வேகமாக பரவி வருகிறது. இதுதான் குஜராத்தில் பாஜகவுக்குக் கிடைக்கும் என்று சாடி பலரும் ட்வீட் செய்து வருகின்றனர். இருப்பினும், சிலர் இந்த வீடியோ குறித்து சந்தேகமும் எழுப்பி உள்ளனர். இதையடுத்து இந்த வீடியோவை நாம் ஆய்வு செய்து பார்த்ததில் செருப்பு மாலை அணிவிக்கப்படும் நபர் பாஜக வேட்பாளர் தான் என்றாலும் கூட இது பழைய வீடியோ என்பதும் இதற்கும் குஜராத் தேர்தலுக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என்பதும் தெளிவாகத் தெரிகிறது. இது கடந்த 2018இல் மத்தியப் பிரதேசத்தில் நடந்த நிகழ்வாகும்.

பழைய வீடியோ
அங்குள்ள தார் மாவட்டத்தில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்ற நிலையில், பிரசாரத்தில் ஈடுபட்டிருந்த பாஜக வேட்பாளர் தினேஷ் ஷர்மாவுக்கு பொதுமக்கள் சிலர் செருப்பு மாலை அணிவித்து உள்ளனர். இது தொடர்பான செய்திகளை அப்போதே பல்வேறு ஆங்கில ஊடகங்கள் பகிர்ந்து உள்ளன. அந்த இரண்டையும் ஒப்பிட்டுப் பார்த்தால், இது பொய்யான வீடியோ என்பது நமக்கு தெளிவாகத் தெரியும். அதேபோல ஏஎன்ஐ செய்தி நிறுவனமும் இந்த வீடியோவை 2018 ஜன. மாதம் பகிர்ந்து உள்ளது.

பொய்யான வீடியோ
அப்பகுதியில் கடும் தண்ணீர் பஞ்சம் நிலவிய நிலையில், அதற்கு எதிர்ப்பு தெரிவித்துச் செருப்பு மாலை அணிவித்து உள்ளனர். இந்த வீடியோவை தான் இப்போது குஜராத் பிரசாரத்தில் எடுக்கப்பட்ட வீடியோ போல தவறாகப் பரப்பி வருகின்றனர். இதன் மூலம் இணையத்தில் குஜராத் பிரசாரத்தில் எடுக்கப்பட்ட வீடியோ என்று பரவும் இந்த தகவல் முற்றிலும் பொய்யானது என்பது தெளிவாகத் தெரிகிறது.

Fact Check
வெளியான செய்தி
குஜராத்தில் தேர்தல் பிரசாரத்திற்குச் சென்ற பாஜக வேட்பாளருக்குச் செருப்பு மாலை அணிவித்த பொதுமக்கள்
முடிவு
இது மத்திய பிரதேசத்தில் கடந்த 2018இல் எடுக்கப்பட்ட பழைய வீடியோ.












Click it and Unblock the Notifications