FACT CHECK: வதந்தி பரப்புவதிலும் குஜராத் மாடல்.. மத்திய பிரதேசத்தின் பேருந்து நிலையமா இது?
சென்னை: மத்திய பிரதேச மாநிலம் இந்தூர் பேருந்து நிலையம் என்று குறிப்பிட்டு நவீன வசதிகள், அழகிய உள்கட்டமைப்புடன் இருக்கும் ஒரு படம் பகிரப்பட்டு வரும் நிலையில் அதன் உண்மைத் தன்மை என்னவென்று பார்ப்போம்.
மத்திய பிரதேச மாநிலம் இந்தூர் இந்தியாவிலேயே தூய்மையான நகரம் என்று அழைக்கப்படுகிறது. ஆண்டுதோறும் இந்தியாவின் தூய்மையான நகரங்களின் வரிசையில் முதன்மை இடத்தை இந்தூர் பிடித்து வருகிறது. ஆனால், இதை வைத்து கண்ணில் பட்ட படங்களை எல்லாம் இந்தூர் என்று குறிப்பிட்டு வதந்தி பரப்புவதும் அதிகரித்து வருகிறது. மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் உலகத்தரத்தில் பேருந்து நிலையம் அமைக்கப்பட்டு உள்ளது என்று குறிப்பிட்டு ஒரு வீடியோ பாஜக ஐடி விங் செயற்பாட்டாளர்களால் அதிகளவில் பகிரப்பட்டு வருகிறது.

அந்த வீடியோவை பார்க்கையில் நமது இந்தியாவில் இப்படி ஒரு பேருந்து நிலையமா என்ற வியப்பு நிச்சயம் ஏற்படும். அந்த அளவுக்கு பயணிகள் அமரும் இடங்கள், பயணச்சீட்டு கிடைக்கும் இடம், பேருந்து ஏறும் இடம் என அனைத்தும் சர்வதேச தரத்தில் விமான நிலையத்திற்கு இணையாக அமைக்கப்பட்டு இருந்தது. 45 நிமிடங்கள் ஓடும் இந்த வீடியோவை பார்க்கும்போது இதற்காகவே இந்தூருக்கு சென்று பார்வையிட்டு வரலாம் என்ற அளவுக்கு ஆர்வம் ஏற்படும்.
மத்திய பிரதேஷ் இந்தூர் பஸ் நிலையம். pic.twitter.com/6UaQ4qFDGA
— Praveen Kumar G.L (@praveen_kgl) February 11, 2024
இது குறித்த உண்மைத் தன்மையை ஆய்வு செய்ய முயன்றோம். ஊடகங்களில் இந்தூர் பேருந்து நிலையம் தொடர்பான செய்திகள், புகைப்படங்களை ஆய்வுக்கு உட்படுத்தினோம். அதில் வீடியோவில் இருப்பது போன்ற புகைப்படங்கள் நமக்கு எங்கும் கிடைக்கவில்லை. இப்படி ஒரு பேருந்து நிலையம் திறக்கப்பட்டதாகவும் எந்த செய்திகளும் கிடைக்கவில்லை. மேலும் அந்த பேருந்து நிலையத்தில் எந்த இடத்திலும் இந்தியை காணவில்லை. அனைத்து பெயர் பலகைகளும் ஆங்கிலத்தில் இருந்தன.
அப்படியென்றால் அந்த வீடியோ எங்கு எடுக்கப்பட்டது என்ற கேள்வி எழும் அல்லவா? நமக்கும் எழுந்தது. எனவே அந்த வீடியோ கீ பிரேம் படங்களை ரிவர்ஸ் இமேஜ் தேடல் மூலம் ஆய்வுக்கு உட்படுத்தினோம். அப்போதுதான் தெரிந்தது, பாஜகவினர் பகிர்ந்த அந்த வீடியோவில் இருப்பது கனடாவின் டொராண்டோ நகரில் உள்ள யூனியன் ஸ்டேசன் பேருந்து நிலையம் என்று தெரிந்தது. இது தொடர்பாக பல்வேறு இணையதளங்களில் செய்திகளும் வீடியோக்களும் புகைப்படங்களும் 2020 ஆம் ஆண்டிலேயே வெளியாகி உள்ளன.
கடந்த 2014 மக்களவைத் தேர்தலுக்கு முன்பாக குஜராத் மாடல் என்று கூறி சீனா, வளைகுடா, ஐரோப்பிய நாடுகளில் உள்ள பேருந்து நிலையங்கள், கட்டிடங்கள், சாலைகளை குஜராத்தில் உள்ளவை என்று கூறி அதிகளவில் பகிர்ந்தார்கள். இந்த நிலையில் 2024 மக்களவைத் தேர்தல் விரைவில் நடைபெற உள்ள சூழலில் 10 ஆண்டுகள் கழித்து அதே குஜராத் மாடலில் மத்திய பிரதேசத்தை குறிப்பிட்டு வதந்தி பரப்பி இருக்கிறார்கள்.

Fact Check
வெளியான செய்தி
மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் உலக தரத்தில் அமைக்கப்பட்டு உள்ள பேருந்து நிலையம்.
முடிவு
பரவும் வீடியோவில் இருக்கும் பேருந்து நிலையம் இந்தியாவே இல்லை. கனடாவில் உள்ளது.












Click it and Unblock the Notifications