Fact check -மறைந்த சமூக செயற்பாட்டாளர் ஸ்டேன் சுவாமிக்கு.. சங்கிலியால் கட்டி சிகிச்சை அளிக்கப்பட்டதா
டெல்லி: எல்கர் பரிஷத் வழக்கில் கைது செய்யப்பட்ட சமூக செயற்பாட்டாளர் ஸ்டேன் சுவாமி திங்கள்கிழமை உயிரிழந்த நிலையில், அவருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த போது எடுக்கப்பட்டதாகக் கூறி ஒரு போட்டோ பரவி வருகிறது.
திருச்சியைச் சேர்ந்த சமூக செயற்பாட்டாளர் 84 வயதான ஸ்டேன் சுவாமி. மகாராஷ்டிரா எல்கர் பரிஷத் வழக்கில் கடந்த 2020 அக்டோபர் மாதம் இவர் கைது செய்யப்பட்டார்.
கைது செய்யப்பட்டத்தில் இருந்தே இவரது உடல்நிலை மோசமடைந்தது. இருப்பினும், இவர் உபா சட்டத்தில் கைது செய்யப்பட்டவர் என்பதால் நீதிமன்றம் இவருக்கு ஜாமீன் வழங்கவில்லை.

ஸ்டேன் சுவாமி
மும்பை உயர் நீதிமன்றத்தின் தலையிட்டதைத் தொடர்ந்து பர்கின்ஸன் நோய் உட்பட பல்வேறு நோய்கள் அவதிப்பட்டு வந்த ஸ்டேன் சுவாமி, ஹோலி ஃபேமிலி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கொரோனாவால் பாதிப்பிலிருந்து அவர் மீண்டிருந்தாலும் நுரையீரல் மோசமாகப் பாதிக்கப்பட்டது. இந்நிலையில், கடந்த சனிக்கிழமை அதிகாலை அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது.

உயிரிழந்தார்
இதையடுத்து அவருக்கு வென்டிலேட்டர் சிகிச்சை அளிக்கப்பட்டது. மருத்துவர்கள் தீவிரமாக முயன்றும்கூட அதன் பின்னர் அவருக்கு நினைவு திரும்பவில்லை. திங்கள்கிழமை மதியம் 1.30 மணியளவில் அவர் உயிரிழந்தார். சுமார் 8 மாதங்கள் சிறையிலிருந்த போதும் அவரை ஒரு நாள் கூட போலீசார் விசாரிக்கவில்லை. 83 வயதான ஒரு நபரை இப்படித்தான் நடத்துவார்களா என்று பலரும் மிகக் கடுமையாக விமர்சித்தனர்.

வைரலாகும் படம்
இந்நிலையில், ஸ்டேன் சுவாமி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்ட போது எடுத்த படம் என்று ஒரு படம் இணையத்தில் உலா வருகிறது. அதில் ஒரு காலில் இரும்பு சங்கிலியால் கட்டப்பட்டிருக்கும் முதியவரின் படம் இடம் பெற்றுள்ளது. ஸ்டேன் சுவாமியை இப்படி மோசமான நிலையில் தான் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது என்றும் பலரும் அந்த படத்தைப் பதிவிட்டனர். இந்நிலையில் இப்போது, இந்த படத்தில் இருப்பவர் ஸ்டேன் சுவாமி இல்லை என்பது தற்போது தெரிய வந்துள்ளது.

போலி படம்
இந்த படத்தை reverse image search செய்யும்போது, இந்தப் படத்தில் இருப்பவர் 92 வயதான பாபுராம் சிங் என்பது தெரிய வருகிறது. கொலை வழக்கு ஒன்றில் தண்டனை பெற்ற அவருக்கு திடீரென மூச்சுத் திணறல் பிரச்சினை ஏற்பட்டுள்ளது. இதையடுத்து சிகிச்சைக்காக அவர் அங்குள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அப்போது எடுக்கப்பட்ட படம் தான் இப்போது பரவி வருகிறது. அதாவது இணையத்தில் ஸ்டேன் சுவாமி என்று பரவும் படம் உண்மையானது இல்லை, போலியானது.

Fact Check
வெளியான செய்தி
மறைந்த 84 வயதான ஸ்டேன் சுவாமிக்கு இரும்பு சங்கிலியில் கட்டி வைத்து சிகிச்சை அளிக்கப்பட்டது.
முடிவு
அந்தப் படத்தில் இருப்பவர் ஸ்டேன் சுவாமி இல்லை. அதில் இருப்பவர் கொலை வழக்கில் கைதான 92 வயதான பாபுராம் சிங்.












Click it and Unblock the Notifications