மகளிருக்கு மாதம் ரூ.2500..ஓகே சொன்ன சிஎம் விஜய்! பட்ஜெட்டில் காத்திருக்கும் சர்ப்ரைஸ்
சென்னை: தமிழகத்தில் பெண்கள் மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்த ஒரு செய்தி குறித்த அப்டேட் வெளியாகி இருக்கிறது. தமிழக முதலமைச்சர் விஜய் தலைமையில் இன்று தலைமைச் செயலகத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. விஜய் அரசின் முதல் பட்ஜெட் தாக்கலாக இருக்கும் நிலையில் பட்ஜெட்டில் இடம் பெற உள்ள புதிய நலத்திட்டங்கள், முக்கிய அறிவிப்புகள் மற்றும் தொழில்துறை சார்ந்த அறிவிப்புகள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியிருக்கிறது. குறிப்பாக குடும்பத் தலைவிகளுக்கு மாதம் 2500 ரூபாய் வழங்கும் திட்டம் தொடர்பான அறிவிப்பு பட்ஜெட்டில் இடம்பெற இருக்கிறது என்கின்றனர் தலைமைச் செயலக வட்டாரங்கள்.
2021 தமிழக சட்டசபை தேர்தலில் திமுக வெற்றி பெற முக்கிய காரணங்களில் ஒன்று மகளிர் உரிமைத்தொகை. மாதம் ஆயிரம் ரூபாய் மகளிர் உரிமைத்தொகை வழங்கப்படும் என்ற அறிவிப்பு மகளிர் பெறும் வரவேற்பு பெற்றது.

சொன்னது போலவே ஆட்சிக்கு வந்து சில ஆண்டுகளில் அந்த திட்டத்தை திமுக அமல்படுத்தியது. தொடர்ந்து இந்தியா முழுவதும் இந்த திட்டம் தற்போது அந்தந்த மாநில அரசுகளால் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. பல மாநிலங்கள் 1000 ரூபாய் முதல் 2500 ரூபாய் வரை வழங்கி வருகின்றனர்.
முதல்வர் விஜய்
இந்த நிலையில் 2026 சட்டசபை தேர்தலை முன்னிட்டு பிரச்சாரம் மேற்கொண்ட தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், மகளிர்க்கு மாதம் 2500 ரூபாய் நிதி உதவி வழங்கப்படும் என அறிவித்தார். இந்த நிலையில் சட்டப்பேரவை தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்திருக்கும் விஜய் அது தொடர்பாக ஆலோசனையில் ஈடுபட்டிருக்கிறார். 2026 2027 ஆம் ஆண்டுக்கான பொது பட்ஜெட் மற்றும் வேளாண் பட்ஜெட்டை தமிழக சட்டசபையில் அடுத்த மாதம் தாக்கல் செய்ய இருக்கிறது அரசு.
தமிழக பட்ஜெட்
விஜய் ஆட்சியின் முதல் பட்ஜெட் என்பதால் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றும் வகையில் பல புதிய நலத்திட்டங்கள் முக்கிய அறிவிப்புகள் இடம் பெறலாம் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்து இருக்கிறது. இந்த நிலையில் கடந்த சில நாட்களாகவே சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் விஜய் பல்வேறு அரசுத்துறை அதிகாரிகள், அமைச்சர்கள் உடன் ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார். ஒவ்வொரு துறையிலும் அறிவிக்கப்பட வேண்டிய திட்டங்கள், அதற்கான நிதி ஒதுக்கீடு உள்ளிட்டவை குறித்து விரிவாக ஆலோசனை செய்யப்பட்டு வருகிறது.
அமைச்சரவைக் கூட்டம்
அந்த வகையில் இன்று காலை 10:30 மணி அளவில் சென்னை தலைமைச் செயலகத்தில் அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இதில் பட்ஜெட் மற்றும் வேளாண் பட்ஜெட்டில் இடம்பெற வேண்டிய முக்கிய திட்டங்கள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது. தொழில் வளர்ச்சியை ஊக்குவிப்பது, புதிய முதலீட்டு திட்டங்களுக்கு ஒப்புதல் அளிப்பது உள்ளிட்ட விவகாரங்களோடு பல முக்கிய திட்டங்களை அறிவிப்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டு இருக்கிறது.
தேர்தல் வாக்குறுதிகள்
தமிழக பட்ஜெட்டை எந்த தேதியில் தாக்கல் செய்வது என்பது குறித்தும் இறுதி முடிவு எடுக்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த பட்ஜெட்டில் தமிழக வெற்றிக் கழக தேர்தல் அறிக்கையில் இடம் பெற்ற முக்கிய வாக்குறுதிகள் சிலவற்றை நடைமுறைப்படுத்துவதற்கான அறிவிப்புகள் இடம் பெறலாம் என எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
2500 ரூபாய் திட்டம்
குறிப்பாக குடும்பத் தலைவிகளுக்கு மாதம் 2500 ரூபாய் வழங்கும் திட்டம், ஆண்டுக்கு 6 இலவச சமையல் சிலிண்டர்கள், திருமண உதவித் தொகையாக ஒரு சவரன் தங்கம் மற்றும் பட்டுச்சேலை, மாணவர்களுக்கு 20 லட்சம் வரை கல்விக்கடன், குடும்பத் தலைவிகளுக்கு 25 லட்சம் வரை மருத்துவ காப்பீடு, ஆண்டுதோறும் இலவச உடல் பரிசோதனை, வேலையில்லா பட்டதாரிகளுக்கு 4000 ரூபாய் உதவித்தொகை உள்ளிட்ட தேர்தல் வாக்குறுதிகள் பட்ஜெட்டில் இடம் பெறலாம் என தலைமைச் செயலக வட்டாரங்கள் சொல்கின்றன.
அதிகாரபூர்வ அறிவிப்பு
அதுமட்டுமில்லாமல் இந்த திட்டங்களால் ஏற்படும் செலவுகள், அதனை செயல்படுத்த தேவையான கால அளவு, யார் யாருக்கு முன்னுரிமை உள்ளிட்டவை குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டிருக்கின்றன. இன்னும் சில நாட்களில் இது தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகலாம் என்கின்றனர் தலைமைச் செயலக வட்டாரத்தினர்.


Click it and Unblock the Notifications
