பெங்களூர், ஹைதராபாத்தை முந்திய கோயம்புத்தூர்! 2027ல் கொட்டப்போகும் 1.38 கோடி வேலைவாய்ப்புகள்!
கோயம்புத்தூர்: வேலை தேடும் இளைஞர்களுக்கும், ஐடி மற்றும் கார்ப்பரேட் நிறுவனங்களில் பணியாற்றி வருபவர்களுக்கும் ஒரு மகிழ்ச்சியான செய்தி வெளியாகியுள்ளது. 2026-ம் ஆண்டில் சற்று மந்தமாக இருந்த இந்தியாவின் வொயிட் காலர் வேலைவாய்ப்பு சந்தை, வரும் 2027-ம் ஆண்டில் மிகப்பெரிய அளவில் வேகமெடுக்க உள்ளது.
குறிப்பாக, வேலைவாய்ப்பு வளர்ச்சியில் பெங்களூர், ஹைதராபாத் போன்ற பெருநகரங்களைப் பின்னுக்குத் தள்ளி, நம்ம ஊர் கோயம்புத்தூர் இந்தியாவிலேயே முதலிடத்தைப் பிடிக்கும் என பிரபல வேலைவாய்ப்பு நிறுவனமான பவுண்டிட் வெளியிட்டுள்ள புதிய ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோயம்புத்தூருக்கு முதலிடம் ஏன்?
பவுண்டிட் இன்சைட்ஸ் டிராக்கர் வெளியிட்டுள்ள சமீபத்திய அறிக்கையின்படி, 2026-ம் ஆண்டில் கோயம்புத்தூரில் வேலைவாய்ப்பு 1.86 சதவீதம் சரிவைச் சந்தித்திருந்தது. ஆனால், 2027-ம் ஆண்டில் நிலைமை தலைகீழாக மாறி, கோவையில் வேலைவாய்ப்பு வளர்ச்சி 12.52 சதவீதமாக உயர்ந்து நாட்டிலேயே முதலிடத்தைப் பிடிக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. கோவைக்கு அடுத்தபடியாக பெங்களூர் 11.29 சதவீத வளர்ச்சியுடனும், ஹைதராபாத் 10.33 சதவீத வளர்ச்சியுடனும் முறையே இரண்டு மற்றும் மூன்றாவது இடங்களைப் பிடித்துள்ளன.
2027-ல் 1.38 கோடி புதிய வேலைகள்
இந்தியா முழுவதும் 2026-ம் ஆண்டில் அலுவலக வேலைவாய்ப்பு வளர்ச்சி வெறும் 3.30 சதவீதமாக மட்டுமே இருந்தது. ஆனால், 2027-ம் ஆண்டில் ஒட்டுமொத்த வேலைவாய்ப்பு வளர்ச்சி 8.16 சதவீதமாக அதிகரித்து, நாடு முழுவதும் சுமார் 1.38 கோடி வேலைவாய்ப்புகள் உருவாகும் என இந்த அறிக்கை நம்பிக்கை தெரிவித்துள்ளது. 2026-ம் ஆண்டில் ஹைதராபாத் (8.51%), பெங்களூர் (6.71%), மும்பை (6.15%), கொச்சி (5.57%) ஆகிய நகரங்கள் ஓரளவு வளர்ச்சியைக் கண்டன. அதே சமயம் சண்டிகர் (-11.19%), கொல்கத்தா (-10.03%) மற்றும் டெல்லி-என்சிஆர் (-3.40%) ஆகிய பகுதிகளில் வேலைவாய்ப்பு சரிந்திருந்தது குறிப்பிடத்தக்கது.
எந்தத் துறைகளில் வேலை கொட்டப்போகிறது?
2026-ம் ஆண்டில் தொண்டு நிறுவனங்கள் (19.44%), ரியல் எஸ்டேட் (16.09%), சுற்றுலா (13.76%) மற்றும் மருத்துவம்-மருந்து துறைகளில் (12.34%) அதிக வேலைவாய்ப்புகள் கிடைத்தன. ஆனால் வங்கி மற்றும் நிதித் துறை (BFSI) 5 சதவீதமும், சரக்கு போக்குவரத்துத் துறை 2.52 சதவீதமும் சரிவைச் சந்தித்தன.
வரும் 2027-ம் ஆண்டில் இந்த நிலை மாறி, எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் உற்பத்தித் துறையில் அதிகபட்சமாக 14.25 சதவீதம் வேலைவாய்ப்பு உயரும் என கணிக்கப்பட்டுள்ளது. அதற்கடுத்தபடியாக சில்லறை வணிகம் (Retail) 13.99 சதவீதமும், உற்பத்தித் துறை 12.02 சதவீதமும் வளர்ச்சியடையும். கடந்த ஆண்டு சரிவைச் சந்தித்த சரக்கு போக்குவரத்துத் துறை (10.15%) மற்றும் வங்கி-நிதித் துறை (10.03%) ஆகியவையும் 2027-ல் மீண்டும் ஏறுமுகத்தைக் காணும். அதேநேரம், 2026-ல் உச்சத்தில் இருந்த சுற்றுலாத் துறை 2027-ல் 3.67 சதவீதம் குறைய வாய்ப்புள்ளது.
ஐடி ஊழியர்களுக்கும், பிரஷர்களுக்கும் வாய்ப்பு எப்படி?
பாரம்பரிய ஐடி சேவை நிறுவனங்களில் வேலைவாய்ப்பு 1.66 சதவீதம் குறைந்திருந்தாலும், மற்ற துறைகளில் தொழில்நுட்ப வல்லுநர்களுக்கான தேவை 20.28 சதவீதம் அதிகரித்துள்ளது. 2027-லும் ஐடி சார்ந்த பணிகள் 10.30 சதவீதம் வளர்ச்சியடையும்.
அனுபவம் வாய்ந்தவர்களைப் பொறுத்தவரை, 7 முதல் 10 ஆண்டுகள் அனுபவம் கொண்டவர்களுக்கு 2026-ல் 8.63 சதவீதம் வளர்ச்சி இருந்த நிலையில், 2027-லும் 7.51 சதவீத வளர்ச்சியுடன் இவர்களுக்கே முன்னுரிமை தொடரும். ஆனால், கல்லூரி முடித்து புதிதாக வேலைக்குச் சேரும் 'பிரஷர்களுக்கு' (0-3 ஆண்டுகள் அனுபவம்) ஒரு நல்ல செய்தி உள்ளது. 2026-ல் வெறும் 0.69 சதவீதமாக இருந்த இவர்களுக்கான வேலைவாய்ப்பு, 2027-ல் 4.64 சதவீதமாக உயரும் என கணிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து பவுண்டிட் நிறுவனம் கூறுகையில், நிறுவனங்கள் 2026-ல் மிகவும் கவனமாக ஆட்களைத் தேர்வு செய்தன. ஆனால் 2027-ல் தொழில்நுட்பத் திறன், சைபர் செக்யூரிட்டி மற்றும் உற்பத்தித் திறனை அதிகரிக்கும் பணிகளுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்படும். ஏற்கனவே பணியில் உள்ளவர்களுக்கு புதிய பயிற்சிகள் அளித்து அடுத்த கட்டத்திற்கு உயர்த்துவதிலும் நிறுவனங்கள் கவனம் செலுத்தும்" என்றது. . மொத்தத்தில், 2027-ம் ஆண்டு வேலை தேடுவோருக்கு ஒரு பொன்னான ஆண்டாக அமையும் என்பதில் சந்தேகமில்லை.


Click it and Unblock the Notifications
