கள்ளக்குறிச்சி.. FIR பதியப்பட்டு கோர்டே கண்டித்தும்.. கட்சி பதவியில் நீடிக்கும் தவெக அருள் விக்னேஷ்
சென்னை: பெண் ஐ.ஏ.எஸ். அதிகாரிக்கு ஆபாச குறுஞ்செய்திகளை அனுப்பித் தொல்லை கொடுத்ததாக எழுந்த புகாரில், ஆளும் தமிழக வெற்றிக் கழகத்தின் கள்ளக்குறிச்சி தொகுதி எம்.எல்.ஏ சி. அருள் விக்னேஷ் மீது எப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டு, சென்னை உயர்நீதிமன்றமே கடுமையான கண்டனங்களைத் தெரிவித்துள்ளது. ஆனால், இவ்வளவு பெரிய சர்ச்சை வெடித்த பிறகும், அருள் விக்னேஷ் இதுவரை தவெக-வின் கட்சிப் பதவியிலிருந்து நீக்கப்படாமல் தொடர்வது தமிழக அரசியலில் பெரும் கேள்வியை எழுப்பியுள்ளது.

எப்.ஐ.ஆர் பதிவான பிறகும் தொடரும் மௌனம்
கடந்த 4 மாதங்களுக்கு முன்பே பாதிக்கப்பட்ட பெண் ஐ.ஏ.எஸ். அதிகாரி தரப்பில் இந்தத் தொல்லை குறித்து உயரதிகாரிகளிடம் முறையிடப்பட்டிருந்தும், எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனக் குற்றச்சாட்டு எழுந்தது. தேசிய மகளிர் ஆணையத்தின் தலையீடு மற்றும் சென்னை உயர்நீதிமன்றத்தின் அழுத்தத்திற்குப் பிறகே, கடந்த நவம்பர் 23-ஆம் தேதி மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் எழுத்துப்பூர்வமாகப் புகார் அளிக்கப்பட்டு, 5 பிரிவுகளின் கீழ் எம்.எல்.ஏ அருள் விக்னேஷ் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
மேலும், நேற்று இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி வி. லட்சுமிநாராயணன், 4 மாதங்களாக ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை? யாரையும் காப்பாற்ற முயற்சி செய்யாதீர்கள் என அரசைக் கடுமையாக எச்சரித்ததோடு, விசாரணையைத் திருப்பூர் எஸ்.பி சிருஷ்டி சிங் மற்றும் ஐஜி என். காமினி ஆகியோர் அடங்கிய குழுவிடம் ஒப்படைத்து உத்தரவிட்டார்.
கட்சிப் பதவியிலிருந்து நீக்கப்படாத அருள் விக்னேஷ்
சட்ட ரீதியாக எப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டு, உயர்நீதிமன்றமே தலையிட்டுள்ள நிலையிலும், ஆளும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைமை இதுவரை எம்.எல்.ஏ அருள் விக்னேஷ் மீது எந்தவொரு ஒழுங்கு நடவடிக்கையும் எடுக்கவில்லை.
சாதாரணமாக, இது போன்ற பாலியல் துன்புறுத்தல் புகார்கள் எழும்போது, சம்பந்தப்பட்ட நபரை முதற்கட்டமாகக் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்தோ அல்லது மாவட்டப் பொறுப்பிலிருந்தோ தற்காலிகமாக நீக்கி வைப்பதே அரசியல் கட்சிகளின் வழக்கமாகும். ஆனால், கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ அருள் விக்னேஷ் இன்று வரை தவெக-வின் கட்சிப் பதவியில் நீடித்து வருகிறார். அவரைக் கட்சியை விட்டு நீக்கவோ அல்லது இடைநீக்கம் செய்யவோ கட்சித் தலைவரும் முதலமைச்சருமான விஜய் இதுவரை எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை. இப்போது மாணவரணி பதவியில் அவர் இருக்கிறார்.
எதிர்க்கட்சிகள் மற்றும் கூட்டணி கட்சிகளின் கடும் அழுத்தம்
மறுபுறம், அருள் விக்னேஷை உடனடியாகக் கைது செய்ய வேண்டும் என்றும், அவரைக் கட்சியிலிருந்து நீக்க வேண்டும் என்றும் எதிர்க்கட்சிகள் மட்டுமின்றி கூட்டணி கட்சிகளும் போர்க்கொடி தூக்கியுள்ளன.
4 மாதங்களாகத் தெரிந்தே முதல்வர் விஜய் இந்த விவகாரத்தில் மௌனம் காத்து, எம்.எல்.ஏ-வைப் பாதுகாத்து வருகிறார். இந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்ற வேண்டும்" என திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். அதேபோல, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் ஆகியோரும் எம்.எல்.ஏ-வை உடனடியாகக் கைது செய்யக் கோரியுள்ளனர்.
ஆளும் தவெக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி ஆகியவையும், எவ்வித பாரபட்சமும் இன்றி எம்.எல்.ஏ அருள் விக்னேஷை உடனடியாகக் கைது செய்ய வேண்டும் எனக் குரல் கொடுத்துள்ளன.
சட்டசபையிலும் பொதுமேடைகளிலும் "பெண்களுக்கு எதிரான குற்றங்களைச் சகித்துக் கொள்ள மாட்டேன்" எனப் பேசி வந்த முதல்வர் விஜய், எப்.ஐ.ஆர் பதியப்பட்ட பிறகும் தன் கட்சி எம்எல்ஏவைக் கட்சிப் பதவியிலிருந்து நீக்காமல் வைத்திருப்பது ஏன் என்ற கேள்வி தற்போது பொதுமக்கள் மத்தியிலும் அரசியல் வட்டாரத்திலும் தீவிரமாக எழுந்துள்ளது.


Click it and Unblock the Notifications
