திருப்பரங்குன்றம்..திமுக ரூட் வேறு, தவெக ரூட் வேறு! கோர்ட்டை ஏமாற்றியதால் விஜய் அரசுக்கு பேராபத்து?
மதுரை: திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் என்ற உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை மீறி, நேற்றைய தினம் வழக்கம்போல உச்சிப் பிள்ளையார் கோவில் மண்டபத்திலேயே தீபம் ஏற்றப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு திமுக அரசும் இதேபோலத் தீபத்தூணில் தீபம் ஏற்றாமல் வழக்கமான இடத்திலேயே தீபம் ஏற்றியது. ஆனால், கடந்த ஆண்டு திமுக எடுத்த நிலைப்பாட்டிற்கும், தற்போது ஆட்சியில் உள்ள தமிழக வெற்றிக் கழக அரசு நடந்து கொண்ட விதத்திற்கும் இடையே பெரிய வேறுபாடு உள்ளது. நீதிமன்றத்தில் தீபம் ஏற்றுவதாக வாக்குறுதி அளித்துவிட்டு, இறுதியில் அதனைச் செய்யாமல் ஏமாற்றியதால், தவெக அரசு மிகக் கடுமையான நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கைகளைச் சந்திக்க நேரிடும் எனச் சட்ட வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர்.

நேற்று நடந்தது என்ன?
மதுரை திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள கல் தூணில் இந்த ஆண்டு ஒருமுறை மட்டும் கார்த்திகை தீபம் ஏற்ற அனுமதி அளித்து உச்ச நீதிமன்றம் கடந்த நவம்பர் 20-ம் தேதி உத்தரவிட்டிருந்தது. இதற்கிடையே, சட்டம் - ஒழுங்கு காரணங்களைக் காட்டி மதுரை மாவட்ட ஆட்சியர் 144 தடை உத்தரவு பிறப்பித்திருந்தார். இதனை எதிர்த்துத் தொடரப்பட்ட வழக்கு நேற்று சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் நீதிபதிகள் ஜி.ஆர். சுவாமிநாதன் மற்றும் எம்.டி. சுமதி ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது.
இந்த விசாரணையின்போது, உச்ச நீதிமன்ற உத்தரவைச் செயல்படுத்த அதிகாரிகள் கடமைப்பட்டுள்ளதாக நீதிபதிகள் திட்டவட்டமாகக் கூறினர். அதற்குப் பதிலளித்த அரசுத் தரப்பு மூத்த வழக்கறிஞர் கோபால் சங்கரநாராயணன், உச்ச நீதிமன்றத்தின் உத்தரவைச் செயல்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள், நீதிமன்ற உத்தரவைச் செயல்படுத்த அவர்கள் கடமைப்பட்டுள்ளார்கள் என நீதிபதிகள் முன்பு உறுதி அளித்தார். ஆனால், நேற்றைய தினம் மாலை 6 மணியளவில் உச்ச நீதிமன்றம் குறிப்பிட்ட தீபத்தூணில் தீபம் ஏற்றப்படவில்லை; மாறாக, வழக்கம்போல உச்சிப் பிள்ளையார் கோவில் தீப மண்டபத்திலேயே கார்த்திகை மகா தீபம் ஏற்றப்பட்டது.
திமுக - தவெக: இரண்டு அரசுகளின் செயல்பாடுகளில் உள்ள முக்கிய வேறுபாடு
கடந்த ஆண்டு திமுக ஆட்சியின்போதும் தீபத்தூணில் தீபம் ஏற்றப்படவில்லை. ஆனால், அப்போது திமுக அரசு தனது நிலைப்பாட்டில் மிகவும் தெளிவாக இருந்தது. தீபத்தூணில் தீபம் ஏற்ற முடியாது, வழக்கமான இடத்தில்தான் ஏற்றுவோம். என்பதை நீதிமன்றத்திற்கு உள்ளேயும், மனுதாரர்களிடம் வெளியேயும் திமுக அரசு வெளிப்படையாகவே கூறியது. விளக்கு ஏற்ற முடியாது.. we will face the consequences என்று வெளிப்படையாக கூறியது. அதற்காகத் திமுக அரசும் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கைகளை எதிர்கொண்டது.
ஆனால், தற்போது ஆட்சியில் உள்ள தவெக அரசின் செயல்பாடு முற்றிலும் மாறுபட்டதாக உள்ளது:
தவெக அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர்கள், உயர் நீதிமன்ற நீதிபதிகள் முன்பு உச்ச நீதிமன்ற உத்தரவைச் செயல்படுத்துவோம், தீபம் ஏற்றுவோம் என நம்பிக்கை அளிக்கும் வகையில் பேசினர்.
நீதிமன்றத்தில் உத்தரவை மதிப்பது போலக் காட்டிக்கொண்டு, மறுபுறம் வழக்கமான இடத்திலேயே தீபத்தை ஏற்றிவிட்டு, பாரம்பரிய வழக்கப்படியே தீபம் ஏற்றப்பட்டது எனத் தமிழக சட்ட அமைச்சர் ஆர். நிர்மல் குமார் விளக்கம் அளித்துள்ளார்.
தவெக அரசுக்குக் காத்திருக்கும் கடுமையான சிக்கல்கள்
சட்ட ரீதியாகப் பார்க்கும்போது, ஒரு நீதிமன்ற உத்தரவை வெளிப்படையாக எதிர்ப்பதை விட, நீதிமன்றத்தில் செயல்படுத்துகிறோம் என வாக்குறுதி அளித்துவிட்டு அதனைச் செய்யாமல் ஏமாற்றுவது மிகவும் கடுமையான குற்றமாகக் கருதப்படுகிறது. திருப்பரங்குன்றம் கோவிலில் நேற்று மாலை கோவில் போர்ட் தீபத்தை எங்கு ஏற்றுவது என்று நிறைவேற்றிய தீர்மானத்தை காரணம் காட்டி தவெக அரசு தப்ப முடியாது.
உயர் நீதிமன்ற நீதிபதிகளிடம் பொய்யான வாக்குறுதி அளித்து நீதிமன்றத்தைத் தவறாக வழிநடத்தியது மற்றும் உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை நேரடியாக மீறியது ஆகிய இரட்டைக் குற்றச்சாட்டுகள் இப்போது தவெக அரசுக்கு எதிராகத் திரும்பியுள்ளன. உச்ச நீதிமன்ற உத்தரவைச் செயல்படுத்தியது குறித்து 3 நாட்களுக்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என மதுரை மாவட்ட ஆட்சியருக்கு ஏற்கனவே உத்தரவிடப்பட்டுள்ளது. எனவே, தவெக அரசும், சம்பந்தப்பட்ட உயர் அதிகாரிகளும் மிகக் கடுமையான நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கைகளை எதிர்கொள்ள வேண்டிய சூழல் உருவாகியுள்ளது.


Click it and Unblock the Notifications
