தமிழ்நாடே இங்கே பரபரப்பாக இருந்த நேரம்.. வடக்கில் பாஜக சத்தமின்றி சம்பவம்! அகாலி தளத்துடன் கூட்டணி
டெல்லி: பஞ்சாப் மாநில சட்டமன்றத் தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள நிலையில், அம்மாநில அரசியலில் ஒரு மிகப் பெரிய திருப்பம் ஏற்பட்டுள்ளது. சுமார் ஆறு ஆண்டுகளுக்கு முன்பு பிரிந்து சென்ற பாஜகவும், அதன் பழைய கூட்டணி கட்சியான சிரோமணி அகாலி தளமும் மீண்டும் ஒன்றிணைந்துள்ளன. குருநானக் ஜெயந்தி நாளில் இந்த முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.

டெல்லியில் முக்கிய அறிவிப்பு
டெல்லியில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாஜக தேசியத் தலைவர் நிதின் நபின் மற்றும் சிரோமணி அகாலி தளம் கட்சியின் தலைவர் சுக்பீர் சிங் பாதல் ஆகியோர் கூட்டாகப் பங்கேற்று இந்தக் கூட்டணியை அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர்.
இந்தக் கூட்டணி குறித்துப் பிரதமர் நரேந்திர மோடி தனது சமூக வலைதளப் பக்கத்தில் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். பஞ்சாப் மாநிலத்தின் நலனுக்கும், பஞ்சாப் மக்களின் முன்னேற்றத்திற்கும் முன்னுரிமை அளிக்கும் வகையில் இந்த இயற்கையான கூட்டணி அமைந்துள்ளது என்று அவர் பாராட்டியுள்ளார்.
முதல்வர் பதவி யாருக்கு?
இந்தச் செய்தியாளர் சந்திப்பில் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, கூட்டணியின் தலைமை குறித்துத் தெளிவுபடுத்தினார். பஞ்சாப் மாநிலத்தில் உள்ள 117 சட்டமன்றத் தொகுதிகளிலும் பாஜக - அகாலி தளம் கூட்டணி இணைந்து போட்டியிடும் என்று அவர் கூறினார்.
மேலும், "பஞ்சாபில் அகாலி தளம் எப்போதும் மூத்த அண்ணன் என்ற அந்தஸ்திலேயே தொடரும். தேர்தலில் எங்கள் கூட்டணி வெற்றி பெற்று ஆட்சி அமைத்தால், மூத்த அண்ணன் என்ற முறையில் அகாலி தளம் கட்சிக்கே முதலமைச்சர் பதவி வழங்கப்படும்" என்று அமித் ஷா திட்டவட்டமாக அறிவித்தார்.
தொகுதிப் பங்கீடு குறித்த பேச்சுவார்த்தைகள் தற்போது நடைபெற்று வருவதாக பாஜக தலைவர் நிதின் நபின் தெரிவித்தார். கடந்த காலங்களில் 117 தொகுதிகளில் பாஜக 23 இடங்களில் போட்டியிட்ட நிலையில், இந்த முறை பாஜகவுக்குக் கூடுதல் இடங்கள் ஒதுக்கப்பட வாய்ப்புள்ளது. இருப்பினும், அகாலி தளமே அதிக இடங்களில் போட்டியிடும்.
2029-க்குள் போதைப்பொருள் இல்லாத பஞ்சாப்
பஞ்சாபில் நிலவும் முக்கியப் பிரச்சனைகள் குறித்துப் பேசிய அமித் ஷா, "தற்போதைய ஆம் ஆத்மி அரசும், இதற்கு முன்பு இருந்த காங்கிரஸ் அரசும் பஞ்சாபில் போதைப்பொருள் நடமாட்டத்தை ஒழிப்பதாக வாக்குறுதி அளித்து மக்களை ஏமாற்றிவிட்டன. ஆனால், நாங்கள் ஆட்சிக்கு வந்தால், வரும் 2029-ஆம் ஆண்டு டிசம்பர் 31-ஆம் தேதிக்குள் பஞ்சாபை முற்றிலும் போதைப்பொருள் இல்லாத மாநிலமாக மாற்றுவோம். ஊழல் மற்றும் ரவுடியிசத்தை ஒழித்து, விவசாயிகளின் பிரச்சனைகளுக்குத் தீர்வு காண்பதே எங்கள் முதல் இலக்கு" என்று உறுதியளித்தார்.
ஏன் பிரிந்தார்கள்? இப்போது ஏன் இணைந்தார்கள்?
1997, 2007 மற்றும் 2012 ஆகிய சட்டமன்றத் தேர்தல்களில் வெற்றி பெற்று பஞ்சாபை 15 ஆண்டுகள் இணைந்து ஆண்ட இந்தக் கூட்டணி, 2020-ஆம் ஆண்டு மத்திய அரசு கொண்டு வந்த மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து முறிந்தது. அப்போது மத்திய அமைச்சராக இருந்த ஹர்சிம்ரத் கவுர் பாதலும் தனது பதவியை ராஜினாமா செய்தார்.
தற்போது அந்த வேளாண் சட்டங்கள் திரும்பப் பெறப்பட்டுவிட்டதால், பழைய கசப்புகளை மறந்து இரு கட்சிகளும் மீண்டும் கைகோர்த்துள்ளன. பஞ்சாபில் சில சீக்கிய பிரிவினைவாத சக்திகளைத் தடுக்கவும், ஆளும் ஆம் ஆத்மி மற்றும் காங்கிரஸ் கட்சிகளை வீழ்த்தவும் இந்தக் கூட்டணி அவசியம் என பாஜக மேலிடம் கருதுகிறது. இந்தக் கூட்டணியால் 2027 பஞ்சாப் சட்டமன்றத் தேர்தலில் ஆம் ஆத்மி, காங்கிரஸ் மற்றும் பாஜக-அகாலி தளம் இடையே மும்முனைப் போட்டி உருவாகியுள்ளது.


Click it and Unblock the Notifications
