கோடக் மகிந்திரா வங்கியில் சொத்து அடமானம்.. மீண்டும் ரூ.6 கோடி கடன் பெற்ற சென்னை சினிமா பிரமுகர்
சென்னை: சென்னையில் ஒரே சொத்தை வைத்து 2 இடங்களில் கடன் வாங்க முடியுமா? இதோ அப்படி ஏற்கனவே வங்கியில் அடமானம் வைக்கப்பட்ட சொத்துகளை காட்டி, கோடக் மகிந்திரா வங்கியில் ரூ.6 கோடி கடன் பெற்றதாக ஒரு புகார் எழுந்துள்ளது. இந்த வழக்கில் 63 வயதான சினிமா பிரமுகர் மனோகர் பிரசாத்தை சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸார் கைது செய்துள்ளனர். மனோகர் பிரசாத் செய்த காரியத்தை சுருக்கமாக இங்கே பார்ப்போம்..!!
சென்னை புரசைவாக்கத்தில் "பேஸ்மேன் பைனான்ஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட்" என்ற தனியார் நிதி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தின் இயக்குநராக ராகுல்குமார் (32) பணியாற்றி வருகிறார்.

நீலாங்கரை சினிமா பிரமுகர்
கடந்த 2022-ம் ஆண்டு ராகுல்குமார் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸில் புகார் ஒன்றை அளித்தார். அதில் "நீலாங்கரையைச் சேர்ந்த சினிமா பிரமுகர் மனோகர் பிரசாத், அவரது மகன் ஆனந்த் பிரசாத் மற்றும் குடும்பத்தினர் தங்களது சொத்துகளை அடமானம் வைத்து நிறுவனத்திடம் ரூ.6 கோடி கடன் பெற்றிருந்தார். ஆனால் கடன் பெறுவதற்காக காட்டப்பட்ட சொத்துகள் ஏற்கனவே கோடக் மகேந்திரா வங்கியில் அடமானம் வைக்கப்பட்டிருந்தன.
ரூ.6 கோடி கடன்
அதுமட்டுமல்லாமல், அந்த சொத்துகளுக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்திலும் இணைப்பு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தன.. இந்த விவரங்களையெல்லாம் நிதி நிறுவனத்திடம் மறைத்துவிட்டு சொத்துகளை அடமானம் வைத்து கடன் பெற்றுள்ளார். ஒரே சொத்தை வைத்து ஏற்கனவே வங்கியில் கடன் பெற்றிருந்த நிலையில், அதே சொத்துகளை மீண்டும் காட்டி இன்னொரு நிறுவனத்திடமும் கடன் பெற்றிருக்கிறார்.
ஆனால், நிறுவனத்திடமிருந்து ரூ.6 கோடி கடன் தொகையை பெற்ற பிறகு மனோகர் பிரசாத் மற்றும் அவரது குடும்பத்தினர் அதனை திருப்பி செலுத்தவில்லை.. இதனால் நிறுவனத்துக்கு பண இழப்பு ஏற்பட்டுள்ளது.. தங்களிடம் முக்கியமான சொத்து விவரங்களை மறைத்து கடன் பெற்றவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று ராகுல்குமார் புகாரில் தெரிவித்திருந்தார்.
போலீஸ் விசாரணை
இந்தப் புகாரின் அடிப்படையில் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணையைத் தொடங்கினர். இந்த வழக்கில் மனோகர் பிரசாத், அவரது மகன் ஆனந்த் பிரசாத் மற்றும் குடும்பத்தினரின் பங்கு குறித்து விசாரணை நடத்தப்பட்டது.
மேலும், கடன் வாங்கும்போது சமர்ப்பிக்கப்பட்ட சொத்து ஆவணங்கள், ஏற்கனவே வங்கியில் வைக்கப்பட்ட அடமான விவரங்கள் உள்ளிட்டவற்றையும் போலீஸார் ஆய்வு செய்தனர். இந்த வழக்கில் தொடர்புடையவர்களைக் கைது செய்ய சென்னை காவல் ஆணையர் உத்தரவிட்டார்.
மனோகர் பிரசாத் கைது
இதையடுத்து மத்திய குற்றப்பிரிவு போலீஸார் நீலாங்கரையில் உள்ள மனோகர் பிரசாத்தின் வீட்டுக்குச் சென்று அவரைக் கைது செய்தனர். அவருக்கு 63 வயதாகிறது. இந்த வழக்கில் தொடர்புடைய அவரது மகன் ஆனந்த் பிரசாத் உள்ளிட்ட மற்றவர்களை போலீஸார் தொடர்ந்து தேடி வருகின்றனர். இந்த சினிமா பிரபலம் மனோகர் பிரசாத் மீது ஏற்கனவே 2022-ம் ஆண்டிலும் ஒரு புகார் தரப்பட்டு, அப்போது மனோகர் பிரசாத் கைதானாராம்.. இப்போது மீண்டும் அதே புகார் கிளம்பியுள்ளது..
ஒரு சொத்தை அடமானம் வைத்து கடன் பெறும்போது அதன் உண்மையான நிலவரத்தை மறைப்பது நிதி நிறுவனங்களுக்கு மிகப்பெரிய இழப்பை ஏற்படுத்தக்கூடும்... அதனால்தான் இந்த வழக்கிலும், சொத்து ஆவணங்கள் தொடர்பான விசாரணை முக்கியத்துவம் பெற்றுள்ளது. மற்றவர்கள் கைது செய்யப்பட்ட பிறகே இந்த விவகாரத்தில் மேலும் என்ன தகவல்கள் வெளியாகும் என்பது தெரியவரும்.


Click it and Unblock the Notifications
