அடங்காத டிரம்ப்.. இந்தியாவுக்கு மீண்டும் வரி.. சீனா உள்பட 16 நாடுகளை குறிவைக்கும் அமெரிக்கா!
வாஷிங்டன்: இந்தியா, சீனா உள்பட 16 நாடுகளுக்கு மீண்டும் புதிய வரியை விதிக்க அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் நிர்வாகம் முடிவெடுத்துள்ளதாவும், இதுதொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. அதுமட்டுமின்றி இந்த முறை டிரம்ப் எந்த காரணத்தை சொல்லி வரி விதிக்கப்போகிறார் என்பது பற்றியும் இங்கு பார்க்கலாம்.
இதுதொடர்பாக 'வால் ஸ்ட்ரீட் ஜர்னல்' செய்தி வெளியிட்டுள்ளது. அதில், ''அமெரிக்கா விரைவில் பல நாடுகள் மீது புதிதாக வரி விதிக்க உள்ளது. அதன்படி சீனா, இந்தியா, ஜப்பான், தென் கொரியா, ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் என மொத்தம் 16 நாடுகளை இலக்காக கொண்டு இந்த வரி விதிக்கப்பட உள்ளது.

இந்த விவகாரம் பற்றி அதிபர் டொனால்ட் டிரம்பின் குழு பலமாதம் விசாரணை நடத்தியது. இந்த விசாரணை தொடர்பான அம்சங்களை அமெரிக்க வர்த்தக பிரதிநிதி ஜேமிசர் கிரீர் இந்த வாரத்தில் வெளியிட வாய்ப்புள்ளது. இந்த விசாரணையை தொடர்ந்தே வரி விதிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த வரி விதிப்புக்கு முக்கிய காரணம் என்னவென்றால் அமெரிக்காவின் தொழில் நிறுவனங்களுக்கு சவால் விடுக்கும் வகையில் இந்த நாடுகள் தங்களின் உள்நாட்டு தொழில்துறையில் உற்பத்தியை ஊக்குவிக்கின்றன. இந்த நாடுகள் தங்களின் நாட்டில் உள்ள தொழில் நிறுவனங்களுக்கு கூடுதலாக மானியங்கள், சலுகைகள் வழங்குகின்றன.
இதனால் உற்பத்தி அதிகரிக்கிறது. இந்த அதிகப்படியான உற்பத்தியை அந்த நிறுவனங்கள் அமெரிக்கா உள்ளிட்ட பிற உலக நாடுகளுக்கு குறைந்த விலையில் விற்கிறது. ஆனால் இந்த விலையை போல் விற்பனை செய்ய அமெரிக்காவில் உள்ள நிறுவனங்களால் முடியவில்லை. இது அமெரிக்க நிறுவனங்களை பாதிக்கிறது. இதனால் தான் வரி விதிக்கப்பட உள்ளது'' என கூறப்பட்டுள்ளது.
மேலும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இந்தியா உள்பட பல்வேறு நாடுகள் மீது விதித்த வரியை கடந்த பிப்ரவரி மாதம் அமெரிக்க உச்சநீதிமன்றம் ரத்து செய்தது. அமெரிக்க அதிபர் தன்னிச்சையாக வரி விதிப்பு நடவடிக்கையை மேற்கொண்டதாக கூறி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இதனால் தற்போது அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மாற்று யோசனையை கையில் எடுத்துள்ளார். 1974ம் ஆண்டில் அமலுக்கு வந்த அமெரிக்காவின் வர்த்தக சட்டத்தின் பிரிவு 301-ன் கீழ் முறையான விசாரணை நடத்தி, அதன் அடிப்படையில் புதிய வரிகளை விதிக்க அமெரிக்கா தயாராகி உள்ளது. இதனால் இந்தியா, சீனா உள்பட 16 நாடுகtளுக்கு அமெரிக்கா மீண்டும் வரி விதிக்கும் அச்சம் ஏற்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications
