கள்ளக்குறிச்சி.. குற்றம் நிரூபிக்கப்பட்டால் தவெக MLA அருள் பதவி பறிபோகுமா? சட்டம் சொல்வது என்ன?
சென்னை: பெண் ஐ.ஏ.எஸ். அதிகாரிக்கு ஆபாச குறுஞ்செய்திகளை அனுப்பித் தொல்லை கொடுத்ததாக எழுந்த புகாரில், ஆளும் தமிழக வெற்றிக் கழகத்தின் கள்ளக்குறிச்சி தொகுதி எம்.எல்.ஏ சி. அருள் விக்னேஷ் மீது காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வழக்கை ஐஜி என். காமினி மேற்பார்வையில் திருப்பூர் எஸ்.பி சிருஷ்டி சிங் விசாரித்து, டிசம்பர் 22-ஆம் தேதிக்குள் இறுதி அறிக்கையைத் தாக்கல் செய்ய வேண்டும் எனச் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்த நிலையில், "இந்த வழக்கில் எம்.எல்.ஏ அருள் விக்னேஷ் மீதான குற்றம் நீதிமன்றத்தில் நிரூபிக்கப்பட்டு அவர் குற்றவாளி என அறிவிக்கப்பட்டால், அவரது சட்டமன்ற உறுப்பினர் (MLA) பதவி பறிபோகுமா?" என்ற கேள்வி பொதுமக்கள் மத்தியில் எழுந்துள்ளது. இது குறித்து இந்தியத் தேர்தல் சட்டமும் உச்சநீதிமன்றத் தீர்ப்புகளும் என்ன சொல்கின்றன என்பதை எளிமையாகப் பார்க்கலாம்.

2 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதி
இந்திய மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம், 1951-இன் (Representation of the People Act) பிரிவு 8(3)-இன் படி, பதவியில் இருக்கும் ஒரு எம்.எல்.ஏ அல்லது எம்.பி எந்தவொரு குற்ற வழக்கிலும் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டு, அவருக்கு 2 ஆண்டுகள் அல்லது அதற்கு மேற்பட்ட சிறைத் தண்டனை விதிக்கப்பட்டால், அவரது பதவி உடனடியாகப் பறிபோகும்.
அதுமட்டுமின்றி, சிறைத் தண்டனை காலம் முடிந்து விடுதலையான பிறகும், அடுத்த 6 ஆண்டுகளுக்கு அவர் எந்தத் தேர்தலிலும் போட்டியிடத் தகுதி நீக்கம் செய்யப்படுவார். ஒருவேளை, நீதிமன்றம் அவருக்கு 2 ஆண்டுகளுக்கும் குறைவான சிறைத் தண்டனையோ (உதாரணமாக 1 ஆண்டு) அல்லது அபராதம் மட்டுமோ விதித்தால், இந்தப் பிரிவின் கீழ் அவரது எம்.எல்.ஏ பதவி பறிபோகாது.
எம்.எல்.ஏ அருள் விக்னேஷ் மீது போடப்பட்டுள்ள சட்டப் பிரிவுகளும் தண்டனை விவரமும்
கள்ளக்குறிச்சி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் எம்.எல்.ஏ அருள் விக்னேஷ் மீது தமிழ்நாடு பெண் வன்கொடுமை தடுப்புச் சட்டம் மற்றும் புதிய குற்றவியல் சட்டமான பாரதிய நியாய சன்ஹிதாவின் (BNS) கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்தப் பிரிவுகளுக்குக் கிடைக்கக்கூடிய அதிகபட்ச தண்டனை விவரம்:
இதற்கு அதிகபட்சமாக 3 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனையும் அபராதமும் விதிக்கப்படலாம். இதில் நீதிபதி 2 முதல் 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்தால் பதவி பறிபோகும்.. 2 ஆண்டுகளுக்குக் குறைவாகத் தண்டனை வழங்கினால் பதவி தப்பும்.
ஆபாசமாகப் பேசுவது அல்லது குறுஞ்செய்தி அனுப்புவதற்கு 1 ஆண்டு வரையும், தகாத முறையில் அணுகுவதற்கு 3 ஆண்டுகள் வரையும் சிறைத் தண்டனை உண்டு. இதில் 2 ஆண்டுகளுக்கு மேல் தண்டனை கிடைத்தால் மட்டுமே பதவி பறிபோகும்.
பிஎன்எஸ் பிரிவு 78 (பின்தொடர்ந்து தொல்லை கொடுத்தல்): முதல்முறை குற்றத்திற்கு 3 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை உண்டு.
பிஎன்எஸ் பிரிவு 132 (அரசு ஊழியரைப் பணி செய்ய விடாமல் தடுத்தல்): இதற்கு அதிகபட்சமாக 2 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை விதிக்க சட்டத்தில் இடமுள்ளது.
தீர்ப்பு வந்த அடுத்த நொடியே பதவி பறிபோகும்!
முன்பெல்லாம், கீழமை நீதிமன்றம் தண்டனை வழங்கினால், மேல்முறையீடு செய்வதற்காக எம்.எல்.ஏ-க்களுக்கு 3 மாதங்கள் அவகாசம் வழங்கப்பட்டது. ஆனால், 2013-ஆம் ஆண்டு லிலி தாமஸ் வழக்கில் உச்சநீதிமன்றம் அந்தச் சலுகையை ரத்து செய்துவிட்டது.
எனவே, விசாரணை நீதிமன்றம் 2 ஆண்டுகள் அல்லது அதற்கு மேற்பட்ட சிறைத் தண்டனையை அறிவித்த அடுத்த நொடியே, அருள் விக்னேஷின் கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ பதவி தானாகவே காலியானதாக அறிவிக்கப்படும்.
மேல்முறையீடு செய்தால் பதவியைத் திரும்பப் பெற முடியுமா?
தண்டனை பெற்ற பிறகு, உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வதாலோ அல்லது ஜாமீன் பெறுவதாலோ பறிபோன எம்.எல்.ஏ பதவி மீண்டும் கிடைக்காது. மேல்முறையீட்டு நீதிமன்றம் அவரது தண்டனைத் தீர்ப்புக்கே இடைக்காலத் தடை விதித்தால் மட்டுமே.. அதுவும் மிக அரிதான சூழல்களில் மட்டுமே வழங்கப்படும்.. அவர் மீண்டும் எம்.எல்.ஏ-வாகத் தொடர முடியும்.
இந்த வழக்கின் விசாரணையில் வலுவான ஆதாரங்கள் சமர்ப்பிக்கப்பட்டு, நீதிமன்றம் அவருக்கு 2 ஆண்டுகள் அல்லது அதற்கு மேல் சிறைத் தண்டனை விதித்தால், தவெக எம்.எல்.ஏ அருள் விக்னேஷின் பதவி பறிபோவது சட்டப்படி உறுதியாகும்.


Click it and Unblock the Notifications
