கோவை மாநகராட்சியில் 5 வருடங்களில் ரூ.2,000 கோடி இழப்பு.. விஜய்யிடம் ரிப்போர்ட்.. அடுத்தது என்ன
கோவை: தவெக ஆட்சிக்கு வந்து 6 மாதங்கள் நிறைவடைந்துவிட்டன. திமுக ஆட்சியின் ஊழல்களை தூசி தட்டி வருகிறார்கள். 2021 முதல் 2026 வரையிலான திமுக ஆட்சியில், கோவை மாநகராட்சியில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றுள்ளது. கோவை மாநகராட்சியில் ரூ.2,300 கோடிக்கு இழப்பு ஏற்பட்டதை தணிக்கைத்துறை கண்டறிந்துள்ளது. இந்த ரிப்போர்டை அரசுக்கு சமர்ப்பித்துள்ள நிலையில், லஞ்ச ஒழிப்புத்துறை காவல்துறையினர் விசாரிக்க வேண்டும் என்று முதலமைச்சர் விஜயிடம் கோரிக்கை எழுந்துள்ளது.
திமுக ஆட்சியில் நடந்த 3 ஊழல் பைல்கள் என்னிடம் டேபிளில் உள்ளது. நாங்கள் கொள்ளையடிக்க மாட்டோம். கொள்ளையடித்தவர்களையும் விட மாட்டோம் என்று முதலமைச்சர் விஜய் கூறியிருந்தார். அன்பில் மகேஷ், செந்தில் பாலாஜி, கே.என் நேரு உள்ளிட்ட பல முன்னாள் அமைச்சர்களை குறி வைத்து தவெக அரசு ரெய்டு நடத்தி வருகிறது. இதன் தொடர்ச்சியாக பவ்வேறு துறைகளில் தணிக்கை செய்யப்பட்டு வருகிறது.

கோவை மாநகராட்சியில் தணிக்கை ஆய்வு
கடந்த திமுக ஆட்சியில் கோவை மாநகராட்சி,செந்தில் பாலாஜி மற்றும் கே.என் நேரு ஆகிய இருவரின் கட்டுப்பாட்டிலும் இருந்தது. இருவருக்குமிடையே அதிகார போட்டி உச்சத்தில் இருந்தது. இதனால் ஏராளமான முறைகேடுகளும் நடந்ததாக புகார் எழுந்தது. தவெக ஆட்சிக்கு வந்த பிறகு கடந்த ஜூன், ஜூலை மாதங்களில், கோவை மாநகராட்சியில் உள்ளாட்சி தணிக்கை ஆய்வு செய்யப்பட்டது. 2021 முதல் 2026 வரையிலான திமுக ஆட்சியில் செய்யப்பட்ட பணிகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது.
சொத்துவரி, திடக்கழிவு மேலாண்மை, பராமரிப்பு பணி உள்ளிட்ட பல பிரிவுகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது. இதில் ரூ.2,300 கோடிக்கு நிதி இழப்பு ஏற்படுத்தியதை தணிக்கை துறை கண்டறிந்துள்ளது. தணிக்கை ஆய்வில், "அரசாணைப்படி சொத்து வரியை முறைப்படுத்தாத காரணத்தால் ரூ.1,194 கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. வணிகம், தொழிற்சாலை, கல்வி நிறுவனங்களுக்கு குடியிருப்புக்கான சொத்து வரி விதித்ததில் ரூ.87.17 கோடி இழப்பாகியுள்ளது.
குப்பை கிடங்கிலும் இழப்பா
குடியிருப்புக்கு வழங்கும் குடிநீர் இணைப்பை, வணிக பயன்பாட்டுக்கு வழங்கியதால் ரூ.158 கோடி இழந்துள்ளது. அனுமதியில்லாத கட்டிடங்களுக்கு நடவடிக்கை எடுக்காதததில் ரூ.274 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. பல்வேறு ஆண்டுகளாக சொத்து வரி வசூல் செய்யாததில் ரூ.82 கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. நீண்ட காலம் காலியிட வரி வசூல் செய்யாததில் ரூ.136 கோடி இழந்துள்ளோம். சொத்து வரியில் மட்டுமே 5 வருடங்களில் ரூ.2,053 கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.
வெள்ளலூரில் திடக்கழிவு மேலாண்மை எடைமேடைகள் அமைத்ததில், அதிக மதிப்பில் விலை பட்டியல் தயாரித்ததில் ரூ.53 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. டெண்டர் விதிகளை மீறி காலநீட்டிப்பு செய்து ஒப்பந்த தொகையைவிட ரூ.55 கோடி கூடுதல் செலவு ஏற்படுத்தியுள்ளனர். மாநகராட்சி மாமன்றத்தில ஒப்புதல் வழங்கிய தொகையை விட, குறைவான தொகை நிர்ணயம் செய்ததில் ரூ.8.30 கோடி வருவாய் இழப்பாகியுள்ளது. திடக்கழிவு மேலாண்மையில் மட்டுமே ரூ.150 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது.
வட்டியால் ஏற்பட்ட பாதிப்பு
2024 ஆம் ஆண்டு வெள்ளலூர் குப்பை கிடங்கு தீ விபத்திற்கு 11 நாட்களுக்கு பணியாளர்களுக்கு உணவு, டீ, காபி, ஸ்நேக்ஸ், குளிர்பானங்கள், நீர் வாங்கியதற்கு ரூ.27.51 லட்சம் செலவு செய்தது சர்ச்சையை கிளப்பியது. இந்த செலவுக்காக சமர்பிக்கப்பட்ட ஆவணங்கள் பெரும்பாலும் கையெழுத்து ரசீதாக உள்ளது. அதில் அளவு, பொருள் விலை, ஜிஎஸ்டி எண் உள்ளிட்ட எந்த விபரமும் இல்லை. உண்மையில் அவ்வளவு நபர்களுக்கு உணவு கொடுக்கப்பட்டதா என்பதை உறுதி செய்ய முடியவில்லை.
60 வார்டுகளில் 24 மணி நேரம் குடிநீர் விநியாகம் செய்ய சூயஸ் நிறுவனத்திற்கு ஒப்பந்தம் வழங்கப்பட்டது. மாநகராட்சி சார்பில் அந்த நிறுவனத்துக்கு பல்வேறு காலகட்டங்களில் முன்பணம் வழங்கியது. விதிகள்படி, பணிக்கு வழங்கிய முன்பணத்தை சம்பந்தப்பட்ட ஒப்பந்ததாரரிடம் வட்டியுடன் வசூலிக்க வேண்டும். அந்த வகையில் சூயஸிடம் வட்டி வசூலிக்காததால் ரூ.47.92 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது.
வாகனங்களிலும் முறைகேடு
ஒப்பந்தப்புள்ளியில் உள்ள தெருவிளக்கை விட, கூடுதல் எண்ணிக்கைக்கு பட்டியல் தயாரித்து எல்இடி விளக்கு கொள்முதல் ஆகியுள்ளத. இதில் ரூ.2.5 கோடியும், ஒப்பந்த நிறுவனத்திற்கு தெரு விளக்கு மற்றும் மின் உபகரணங்கள் கொள்முதல் செய்யாமலே வழங்கியதில் ரூ.9.25 கோடி இழப்பும் ஏற்படுத்தியுள்ளனர். தூய்மை பணிக்கு ஜேசிபி, டிப்பர், லாரி, டிராக்டர் உள்ளிட்ட வாகனங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளது. அதன் பதிவு எண்களை பரிவஹன் தளத்தில் சோதித்தபோது அவை இருசக்கர வாகனம் என தெரியவந்தது.
இந்த இழப்புக்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தான் பொறுப்பு. அவர்களின் சம்பளத்தில் இருந்தோ, ஒப்பந்ததாரர்களிடம் இருந்தோ அதை ஈடுசெய்ய வேண்டும்" என்று தணிக்கை ரிப்போர்டில் கூறியுள்ளனர். இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. லஞ்ச ஒழிப்புத்துறை காவல்துறை விசாரணை நடத்த வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.


Click it and Unblock the Notifications
