திருப்பரங்குன்றம் தீபம் விவகாரம்.. தமிழக அரசு எதிர்கொள்ள இருக்கும் பெரிய நெருக்கடி!
மதுரை: திருப்பரங்குன்றத்தில் இந்து அமைப்புகள் கோரிய தூணில் தீபம் ஏற்ற உச்சநீதிமன்றம் கொடுத்த உத்தரவை தமிழக அரசு அமல்படுத்தவில்லை. இப்படி இருக்கையில் தமிழக அரசு பெரிய நெருக்கடியை எதிர்கொள்ள இருக்கிறது என வலதுசாரி அமைப்புகள் எச்சரித்துள்ளன.
150 ஆண்டுகளுக்கும் மேல் வழக்கமாக கார்த்திகை தீபம் ஏற்றப்படும் தூணில்தான் நேற்றும் தீபம் ஏற்றப்பட்டிருக்கிறது. ஆனால், இந்து அமைப்புகள் கோரிய தூணில் தீபம் ஏற்றப்பட வேண்டும் என்பது உச்சநீதிமன்றத்தின் இடைக்கால உத்தரவாகும்.

இந்த உத்தரவை தமிழக அரசு வெளிப்படையாக மீறியிருக்கிறது. இந்நிலையில், கடந்த 21ம் தேதி தமிழக அரசு தாக்கல் செய்த சீராய்வு மனு இன்று விசாரணைக்கு வர வாய்ப்பு இருக்கிறது. இந்த விசாரணையை உச்சநீதிமன்றம் ஏற்குமா? என்பதே கேள்விக்குறிதான். மட்டுமல்லாது, உத்தரவை அமல்படுத்தாததால் அரசு பெரிய நெருக்கடியை எதிர்கொள்ள இருக்கிறது.
உச்சநீதிமன்ற உத்தரவின்படி ஒருங்கிணைப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்ட மதுரை ஆட்சியர், காவல் ஆணையர் மற்றும் இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் மீது தனிப்பட்ட முறையில் நீதிமன்ற குற்றச்சாட்டுகள் சுமத்தப்படலாம். ஏற்கெனவே உயர்நீதிமன்ற உத்தரவை மீறியது தொடர்பான அவமதிப்பு வழக்கும் நிலுவையில் உள்ளது. இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவெனில்.. தமிழக அரசு தாக்கல் செய்திருக்கும் சீராய்வு மனுவை காரணம் காட்டி, உச்சநீதிமன்ற உத்தரவை அமல்படுத்தாமல் இருக்க முடியாது என்று என்று நேற்று உயர்நீதிமன்றம் தெளிவுப்படுத்தியிருந்தது என்பதுதான்.
உயர்நீதிமன்றம் இப்படி தெளிவுப்படுத்தியும், உச்சநீதிமன்றம் சொன்ன இடத்தில் தீபம் ஏற்றப்படவில்லை. உச்சநீதிமன்றத்தின் உத்தரவுகளுக்கு நாட்டின் அனைத்து சிவில் மற்றும் நீதித்துறை அதிகாரிகளும் கட்டுப்பட்டு உதவ வேண்டும் என்ற, அரசியலமைப்பு சட்டப்பிரிவு 144-ஐ அரசு நிர்வாகம் மீறியதாக கடுமையான விமர்சனங்களை நீதிமன்றத்தில் எதிர்கொள்ள நேரிடும். ஆட்சியர், காவல் ஆணையர் மற்றும் இந்துசமய அறநிலையத்துறை அதிகாரிகள் நேரில் ஆஜராகி விளக்க கொடுக்க வேண்டி வரும்.
ஒருவேளை உத்தரவு வேண்டும் என்றே மீறப்பட்டிருக்கிறது என்று தெரிந்தால்.. அவர்களுக்கு சிறைதண்டனை மற்றும் அபராதம் விதிக்கப்படும். சட்டம்-ஒழுங்கை காரணம் காட்டி உச்சநீதிமன்ற உத்தரவையே அமல்படுத்த முதயாத சூழல் நிலவுவதாக கூறி, தமிழக ஆளுநர் மத்திய அரசுக்கு அறிக்கை அனுப்பும் சூழல் உருவாகலாம். இப்படி நடந்தால்.. மாநிலத்தில் அரசியலமைப்பு சட்டத்தின்படியான ஆட்சி நடைபெறவில்லை என ஆளுநர் பரிந்துரைத்தால் பிரிவு 356-ஐ பயன்படுத்துவது குறித்த அரசியல் அழுத்தங்கள் எழலாம்.
அதேபோல மாநில காவல்துறையால் சட்டம்-ஒழுங்கை கட்டுப்படுத்த முடியவில்லை என்ற நிலை உருவானால், சட்டம்-ஒழுங்கை கட்டுப்படுத்த.. நீதிமன்ற உத்தரவுகளை செயல்படுத்தவும் மத்திய ஆயுத காவல் படைகளை அனுப்புவது குறித்து மத்திய அரசு பரிசீலிக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications
