சரியான இடத்தில் திருப்பரங்குன்றம் தீபம்.. முறியடிக்கப்பட்ட பாஜக கும்பலின் சதி! வன்னியரசு பாராட்டு!
விழுப்புரம்: திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றப்பட்ட இடம் தான் மரபு. கலவரத்தை தூண்டும் வகையில், வட மாநிலங்களில் சங் பரிவார் கும்பல் செயல்பட்டது போல இங்கும் முயற்சி செய்தார்கள். அது முறியடிக்கப்பட்டிருக்கிறது. தமிழ்நாடு அமைதியாக, மதச்சார்பின்மையோடு வாழும் மண் என்பது இன்று நிரூபிக்கப்பட்டிருக்கிறது என தமிழக சமூக நீதித்துறை அமைச்சர் வன்னியரசு கூறியுள்ளார்.
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கட்டப்பட்ட அரசு அலுவலகங்களை சமூக நீதித்துறை அமைச்சர் வன்னியரசு இன்று திறந்து வைத்தார். அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் கூறுகையில்," திருப்பரங்குன்றம் தூண் மேல் தீபம் ஏற்றப்படவில்லை. மக்களுடைய உணர்வை புரிந்து கொண்டு, பக்தர்களுடைய கோரிக்கையை ஏற்று தமிழ்நாடு அரசு இதை செயல்படுத்தியிருக்கிறது. இந்த மண் எப்போதுமே ஆன்மீக மண் என சொல்லிக்கொள்வார்கள் மத்தியில், இது ஒரு மதச்சார்பற்ற மண்.

வன்னியரசு
மதச்சார்பின்மை கொள்கையை நடைமுறைப்படுத்தி இருக்கின்ற அரசு, அதை நிலைநிறுத்தி இருக்கின்ற முதல்வருக்கு தமிழ்நாடு மக்கள் நன்றி சொல்லும் இடத்தில் இருக்கிறார்கள். வன்முறை, பதற்றம், கலவரத்தை உருவாக்க வேண்டும் என்பது தான் பாஜக, ஆர்எஸ்எஸ், சங் பரிவார் கும்பலின் முன்னெடுப்பு, அவர்களின் சதி. பக்தர்கள் காலம் காலமாக அந்த இடத்தில் தான் தீபம் ஏற்றுகிறார்கள். எந்த இடத்தில் தீபம் ஏற்ற வேண்டுமோ அந்த இடத்தில் தீபம் ஏற்றப்பட்டிருக்கிறது. இது தான் நடைமுறை.
திருப்பரங்குன்றம் தீபம்
கடந்த காலத்தில் இல்லாத முறையில் இந்த முறை அரசு, திராவிட அரசு மிக சிறப்பாக, மிக பொறுப்பாக, அரசியலமைப்பு சட்டத்தை உணர்ந்து மதச்சார்பின்மை கொள்கையை நிலைநிறுத்தியிருக்கிறது. முதல்வர் நேற்று பேசும்போது என்ன சொன்னாரோ அதுதான் இன்று நடந்திருக்கிறது. முதல்வருக்கு விடுதலை சிறுத்தைகள் சார்பில் நன்றி தெரிவிக்கப்பட்டது. ரிவியூ பெட்டிஷன், மேல்முறையீட்டை தாண்டி மறு சீராய்வு மனு போடப்பட்டுள்ளது.
உச்சநீதிமன்றம்
அந்த மறு சீராய்வு மனு இன்று கோர்ட் லீவ் என்பதால் உச்சநீதிமன்றத்தில் வழக்கு வந்த பிறகு தான் சொல்ல முடியும். அதற்கு இடையில் உயர்நீதிமன்றம் திடீரென வழக்கு எடுத்ததே உச்சநீதிமன்றத்துக்கு எதிராக தான் இருக்கிறது. உச்சநீதிமன்றத்தை மதிக்கக்கூடிய அரசு திராவிட அரசு. மக்கள் உணர்வுகளை மதிக்கக்கூடிய அரசு நம்முடைய அரசு. சீராய்வு மனு போடப்பட்டிருக்கிறது. அந்த மனு வந்த பிறகு தான் பேச முடியும். சீராய்வு மனு போடும்போதே நானே எடுப்பேன் என சொல்வது உச்சநீதிமன்றத்தை மதிக்கும் போக்காக இல்லை.
பாஜக கும்பல்
பெரும்பான்மை மக்களுடைய உணர்வு தான் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. பெரும்பான்மை மக்கள் நில அளவைக்கல்லில் ஏற்ற சொல்லவில்லை. நில அளவைக்கல்லில் ஏற்ற சொல்வது பாஜக, ஆர்எஸ்எஸ், சங் பரிவார் கும்பல் தான். தீபத்தூணில் ஏற்ற வேண்டும் என்பது 150 ஆண்டுகளுக்கு முன்னாடி இருந்தே தீபத்தூணில் தான் ஏற்றப்பட்டிருக்கு. தீபத்தூணில் ஏற்றப்படுவது மரபு, அதுதான் ஆகம விதி, அதுதான் திருப்பரங்குன்றம் கோயிலில் காலம் காலமாக நடைமுறையில் இருக்கும் பழக்கம்.
மதச்சார்பின்மை
கலவரத்தை தூண்டும் வகையில், வட மாநிலங்களில் சங் பரிவார் கும்பல் செயல்பட்டது போல இங்கும் முயற்சி செய்தார்கள். அது முறியடிக்கப்பட்டிருக்கிறது. தமிழ்நாடு அமைதியாக, மதச்சார்பின்மையோடு வாழும் மண் என்பது இன்று நிரூபிக்கப்பட்டிருக்கிறது. நட்ட கல்லை தெய்வம் என்று நாலு புஷ்பம் சாத்தியே சுற்றி வந்து முணுமுணென்று சொல்லும் மந்திரம் ஏதட என கேட்ட சிவவாக்கியரின் மண் இது.
திருப்பரங்குன்றம் மலை
சிக்கந்தர் மலை என யாரும் சொல்லவில்லை. திருப்பரங்குன்றம் மலை தான். திருப்பரங்குன்றம் மலையில் சிக்கந்தர் தர்கா இருக்கிறது என்பது தான் எல்லோருக்கும் தெரிந்தது. திருப்பரங்குன்றத்தை வைத்து திரிபுவாதம் செய்யும் கும்பல் திரிபுவாதம் செய்கிறதே தவிர இதில் உண்மை இல்லை. மக்களுக்காக நடத்தப்படும் அரசு தான் இன்று நீதியை, தர்மத்தை நிலைநாட்டியிருக்கிறது." என்றார்.




Click it and Unblock the Notifications
