"ஏய் புடிடா புடி"! தூங்கும் போது உயரத்தில் இருந்து விழுவது போல் தூக்கி வாரி போடுவது ஏன்?
சென்னை: நல்லா தூங்கிக் கொண்டிருக்கும் போது திடீரென உயரத்தில் இருந்து கீழே விழுவது போல் தூக்கி வாரி போடுவது ஏன் என்பதன் பின்னணியில் உள்ள அறிவியல் என்ன என்பதை தெரிந்து கொள்ளலாம்.
தூக்கத்தில் நமக்கு பல நிகழ்வுகள் நடந்திருக்கும். தூக்கத்தில் நடந்திருப்போம், கத்தியிருப்போம், பேசியிருப்போம், ஹி ஹி ஹி என சிரித்திருப்போம். சிலர் கையை தூக்கி போடும் போது பக்கத்தில் இருப்பவரை அடிப்பது போல் கையை தூக்கிப் போடுவர்.
இப்படி ஏராளமான செயல்கள் தூக்கத்தில் நடந்திருக்கும். அந்த வகையில் நாம் யோசித்து பார்த்தோமோயானால் தூக்கத்தில் இருக்கும் போது எங்கோ உயரமான இடத்தில் இருந்து நாம் கீழே விழுவது போல தூக்கி வாரி போட்டிருக்கும். அடிக்கடி இல்லாவிட்டாலும் எப்பயாவது ஒருமுறையாவது இந்த நிகழ்வு நடந்திருக்கும்.

ஹிப்னிக் ஜெர்க் என்றால் என்ன?
இதற்கு பெயர் ஹிப்னிக் ஜெர்க் என்பதாகும். உலக மக்களில் சுமார் 60 முதல் 70 சதவீதம் பேர் தங்கள் வாழ்நாளில் இதை நிச்சயம் அனுபவித்திருப்பார்கள். அது ஏன் என்பதை பார்க்கலாம். அதன் பின்னால் இருக்கும் அறிவியல் காரணத்தை தெரிந்து கொள்ளலாம்.
தூக்கி வாரி போடுவது!
இது போல் தூக்கி வாரி போடுவது இயல்பான ஒன்று என்கிறார்கள். மேலும் இதனால் நம் உடலுக்கு எந்த தீங்கும் ஏற்படாது என்றும் சொல்லப்படுகிறது. நாம் தூங்கத் தொடங்கும் நேரத்தில் நமது மூளைக்கும் தசைக்கும் இடையே ஏற்படும் ஒரு சிறிய தகவல் தொடர்புப் பிழைதான் முக்கிய காரணம் என்கிறார்கள்.
விழிப்பு நிலை
விழிப்பு நிலையில் இருந்து ஆழ்ந்த தூக்கத்திற்கு செல்லும் போது நமது இதயத் துடிப்பு குறையும். அதே நேரத்தில் நமது கை, கால் தசைகளும் தளர்வடையும். இவ்வாறு தசைகள் தளர்வடையும் போது மூளை மற்றும் நரம்பு மண்டலத்தின் செயல்பாடுகளில் மாற்றங்கள் ஏற்படுகின்றன.
மூளை அவசரமாக கணிக்கிறது
நாம் விழித்துக் கொண்டிருக்கும் போது திடீரென எங்கிருந்தோ கீழே விழுந்து கொண்டிருக்கிறோம் என மூளை அவசரமாக கணித்துவிடுகிறது. அதனால் ஆபத்தில் இருந்து நம்மைக் காப்பாற்ற உடனடியாக தசைகளுக்கு சிக்னல்களை அனுப்பி தூக்கி வாரி போட செய்கிறது. இதற்கு வரலாற்று ஆய்வாளர்கள் ஒரு காரணத்தை சொல்கிறார்கள்.
ஆதிகால மனிதர்கள்
அதாவது ஆதி கால மனிதர்கள் விலங்குகளிடம் இருந்து பாதுகாத்துக் கொள்ள மரக்கிளையில் அமர்ந்தபடியே தூங்கும் பழக்கத்தை கொண்டிருந்தார்கள். தூக்கத்தின் போது தசைகள் முழுமையாக தளர்ந்துவிட்டால் மரத்தில் இருந்து கீழே விழுந்துவிட வாய்ப்புள்ளது. அதை தடுக்கவே மூளை உருவாக்கிய இந்தத் தற்காப்பு எதிர்வினை, பரிணாம வளர்ச்சியின் காரணமாக தற்போதும் தொடர்கிறது என்றும் சொல்லலாம். ஆனால் இதற்கு உறுதியான ஆதாரம் ஏதும் இல்லை. உடலில் லேசான மின்சாரம் தாக்கியது போல் உணர்வு ஏற்படும் என்கிறார்கள்.
புகைப்பிடித்தால்...
படுக்கைக்கு செல்வதற்கு முன்பு கடுமையான மனஉளைச்சல் இருந்தால் மூளை ஓய்வெடுக்காமல் விழிப்புடன் தசை அதிர்வுகளை அதிகப்படுத்தும். அதே போல் இரவில் காபி, தேநீர் குடிப்பதும், புகைப்பிடிப்பதும் நரம்பு மண்டலத்தைத் தூண்டிவிடுவதால் மூளையால் ஆழ்ந்த தூக்கத்திற்குச் செல்ல முடியாது. எனவே தூங்குவதற்கு முன்பு கடுமையான உடற்பயிற்சிளை செய்தாலும் தசைகள் தளர்வடைந்து தூக்கி வாரிப்போடும்.
பயப்பட தேவையில்லை
எனவே தூங்குவதற்கு முன்பு மொபைல், மடிக்கணினி, tab ஆகியவற்றின் பயன்பாட்டை குறைக்க வேண்டும். ஆழ்ந்த மூச்சுப் பயிற்சி செய்வது அல்லது புத்தகங்களை படிக்கலாம். தூக்கி வாரி போடுவது சாதாரண விஷயம்தான். இதற்காக பயப்படத் தேவையில்லை என்கிறார்கள் மருத்துவர்கள்.
மருத்துவரை எப்போது அணுக வேண்டும்?
ஒரு வேளை இந்த நிகழ்வு அடிக்கடி நிகழ்ந்து உங்கள் தூக்கத்தை கெடுக்கிறது என்றால் நீங்கள் நிச்சயம் மருத்துவரை அணுகலாம். தூக்கத்தில் கீழே விழுவது போல் உங்களுக்கும் நிகழ்ந்துள்ளதா? என்பதை கமென்ட்டில் சொல்லுங்கள்.




Click it and Unblock the Notifications
