Fact Check: ஒரே எண்ணில் 3 பேருந்துகள் இயக்கப்படுகிறதா? பரவி வரும் புகைப்படம்.. உண்மை என்ன?
சென்னை: TN74 N 1813 என்ற ஒரே எண்ணில் 3 பேருந்துகள் இயக்கப்படுவதாக சமூக வலைதளங்களில் ஒரு தகவல் பரவி வரும் நிலையில், அது வதந்தி என தமிழ்நாடு அரசின் உண்மை சரிபார்ப்புக் குழு தெரிவித்துள்ளது.
TN74 N 1813 என்ற ஒரே எண்ணில் 3 பேருந்துகள் இயக்கப்படுவதாக சமூக வலைதளங்களில் புகைப்படங்களுடன் ஒரு தகவல் வேகமாகப் பரவியது. குறிப்பாக பாஜக ஆதரவாளர்கள் பலரும் இந்த தகவலை பதிவிட்டு வந்தனர்.

இந்நிலையில், இந்த தகவல் வதந்தி என தமிழ்நாடு அரசின் உண்மை சரிபார்ப்புக் குழு தெரிவித்துள்ளது. "கன்னியாகுமரி போக்குவரத்து வணிக மேலாளர் TN 74 N 1813 என்ற இப்பேருந்து 08.02.2017 அன்று புதிய பேருந்தாகக் கூண்டு கட்டி 09.03.2017 அன்று முதல் புறநகர் பேருந்தாக நாகர்கோவிலில் இயக்கப்பட்டது.
திருவனந்தபுரம் தடத்தில் 3 ஆண்டுகள் கழித்து இந்தப் பேருந்துக்குப் பதில் புதிய பேருந்து இயக்கப்பட்டதால், 04.01.2020 அன்று முதல் இது நகரப் பேருந்தாக (Seat Alteration) செய்யப்பட்டு இயக்கப்பட்டது.

இப்பேருந்தின் வயது 6-ஐ கடந்த நிலையில் அரசாணைப்படி கடந்த 07.10.2023 அன்று இதன் கூண்டு புதுப்பிக்கப்பட்டு நகரப் பேருந்தாக நாகர்கோவில் - மேல் மிடாலம் தடத்தில் (தடம் எண் : 9A) இயக்கப்பட்டு வருகிறது" என்று கன்னியாகுமரி போக்குவரத்து வணிக மேலாளர் விளக்கம் அளித்துள்ளார்.

Fact Check
வெளியான செய்தி
TN74 N 1813 என்ற ஒரே எண்ணில் 3 பேருந்துகள் இயக்கப்படுவதாக சமூக வலைதளங்களில் ஒரு தகவல் பரவி வருகிறது.
முடிவு
ஒரே பேருந்து வெவ்வேறு காலகட்டங்களில் வெவ்வேறு வழித்தடங்களில் இயக்கப்பட்டுள்ளது. 3 பேருந்துகள் ஒரே எண்ணில் இயக்கப்படவில்லை.












Click it and Unblock the Notifications