Fact Check: இது பண்ருட்டி - விழுப்புரம் சாலையா? பொய்யான தகவலை பகிர்ந்த எச்.ராஜா.. ட்வீட் நீக்கம்!
சென்னை: குண்டும் குழியுமாக உள்ள சாலை ஒன்றின் வீடியோவை வெளியிட்டு, பண்ருட்டி - விழுப்புரம் சாலை எனக் குறிப்பிட்டு பாஜக தலைவர் எச்.ராஜா பகிர்ந்திருந்த நிலையில், அது பொய்யான தகவல் என தெரியவந்துள்ளது.
பாஜக மூத்த தலைவரும், முன்னாள் எம்.எல்.ஏவுமான எச்.ராஜா தனது எக்ஸ் சமூக வலைதள பக்கத்தில் விடியா அரசு என்ற கேப்ஷன் உடன் 'பண்ருட்டி - விழுப்புரம் சாலை’ என்று ஒரு வீடியோ மற்றும் இரு புகைப்படங்கள் அடங்கிய ஒரு பதிவை வெளியிட்டிருந்தார்.

அந்த வீடியோவில், குண்டும் குழியுமாக உள்ள சாலையில், வாகனங்கள் தடுமாறும் காட்சிகள் இடம்பெற்றிருந்தன. திமுக ஆட்சியில் பண்ருட்டி - விழுப்புரம் சாலை மோசமான நிலையில் உள்ளது என்ற தொனியில் அந்தப் பதிவை வெளியிட்டிருந்தார் எச்.ராஜா.
எச்.ராஜாவின் இந்த பதிவை ஏராளமானோர் சமூக வலைதளங்களில் பகிர்ந்தனர். குறிப்பாக, பாஜக, அதிமுக ஆதரவாளர்கள் பலர், திமுக ஆட்சியில் சாலை மிக மோசமாக அபாயகரமான நிலையில் இருப்பதாக விமர்சித்து இந்த வீடியோவை பகிர்ந்தனர்.
இந்நிலையில் எச்.ராஜா தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்ட வீடியோ பண்ருட்டி - விழுப்புரம் சாலையில் எடுக்கப்பட்டது அல்ல எனத் தெரியவந்துள்ளது. 2020ல் சீனாவில் எடுக்கப்பட்ட வீடியோவையும், வெவ்வேறு இடங்களில் எடுக்கப்பட்ட பழைய புகைப்படங்களையும் வைத்து அந்த காணொளி உருவாக்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.

இது குறித்து தமிழ்நாடு அரசின் உண்மை சரிபார்க்கும் குழு விளக்கம் அளித்துள்ளது. அதில், “பண்ருட்டி - விழுப்புரம் சாலை எனக் கூறி 2 புகைப்படங்கள் மற்றும் ஒரு காணொளி அடங்கிய பதிவு ஒன்று சமூக வலைதளங்களில் பரப்பப்படுகிறது.
இவை முற்றிலும் பொய்யான தகவல். முதலில் உள்ள புகைப்படம் 2018 ஆம் ஆண்டு ஒடிசாவின் புவனேஷ்வர் பகுதியில் எடுக்கப்பட்டது. இரண்டாவதாக உள்ள காணொளி 2020 ஆம் ஆண்டே சீனாவில் எடுக்கப்பட்டது.
மூன்றாவதாக உள்ள புகைப்படம் 2023 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் திருநெல்வேலி மாவட்டம் களக்காடு பகுதியில் மழையின்போது எடுக்கப்பட்ட புகைப்படம். வதந்திகளைப் பரப்புவது சட்டப்படி குற்றமாகும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 3 காட்சிகள் தொடர்பான பழைய ஆதாரங்களையும் வெளியிட்டுள்ளது உண்மை சரிபார்ப்புக் குழு.
தமிழ்நாடு அரசின் உண்மை சரிபார்க்கும் குழு, எச்.ராஜா பகிர்ந்த பதிவு பொய்யானது என விளக்கம் அளித்த நிலையில், எச்.ராஜா தனது பதிவை நீக்கியுள்ளார். எனினும், அவர் பதிவிட்ட வீடியோ பல தளங்களிலும் பரவி வருகிறது.

Fact Check
வெளியான செய்தி
தமிழ்நாட்டில் பண்ருட்டி - விழுப்புரம் சாலை குண்டும் குழியுமாக மிக மோசமாக இருப்பதாக பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா எக்ஸ் பக்கத்தில் வீடியோ பதிவிட்டார்.
முடிவு
சீனாவில் எடுக்கப்பட்ட வீடியோவையும், வெவ்வேறு இடங்களில் எடுக்கப்பட்ட பழைய புகைப்படங்களையும் வைத்து அந்த காணொளி உருவாக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications