வாக்கு பெட்டிகளை ரகசியமாக திறந்த பாஜக? திரிணாமுல் வெளியிட்ட சிசிடிவி வீடியோ! தேர்தல் ஆணையம் விளக்கம்
கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் நாளை மறுநாள் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் நிலையில், ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் தேர்தல் ஆணையம் மாறி மாறி குற்றஞ்சாட்டி வருகிறது. ஸ்ட்ராங் ரூமில் பாஜகவுடன் இணைந்து தேர்தல் ஆணையம் வாக்கு பெட்டிகளைத் திறப்பதாக திரிணாமுல் வீடியோ வெளியிட்டுக் குற்றஞ்சாட்டியது பெரும் பரபரப்பைக் கிளப்பிய நிலையில், இது தொடர்பைத் தேர்தல் ஆணையம் தற்போது முக்கியமான விளக்கத்தைக் கொடுத்துள்ளது..
மேற்கு வங்கத்தில் இரு கட்டங்களாகச் சட்டசபைத் தேர்தல் நடைபெற்றது. இதில் முதலாம் கட்ட தேர்தலில் எந்தவொரு குழப்பமும் ஏற்படவில்லை. சுமுகமாகவே வாக்குப்பதிவு நடந்து முடிந்தது. கடந்த புதன்கிழமை இரண்டாம் கட்ட தேர்தல் நடந்த நிலையில், அதில் மேற்கு வங்கத்தில் ஆங்காங்கே வன்முறைச் சம்பவங்கள் ஏற்பட்டது. இருப்பினும், ஒட்டுமொத்தமாக அமைதியாகவே தேர்தல் நடந்து முடிந்தது.

பரபர புகார்
இப்போது வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனைத்தும் ஸ்ட்ராங் ரூமில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே வாக்கு எண்ணிக்கை மையங்களில் சிசிடிவி கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு குறித்த திரிணாமுல் சில பகீர் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளது.. அதாவது நேதாஜி உள்விளையாட்டு அரங்கில் தேர்தல் ஆணையத்தின் துணையோடு பாஜகவினர் சீல் வைக்கப்பட்ட வாக்குப் பெட்டிகளைத் திறப்பதாகத் திரிணாமுல் காங்கிரஸ் ஒரு வீடியோவை வெளியிட்டுப் பரபரப்பைக் கிளப்பியது.
உண்மை என்ன
இருப்பினும், இந்த குற்றச்சாட்டுகளை மறுத்துள்ள தேர்தல் ஆணையம், அங்கு உண்மையில் என்ன நடந்தது என்பது குறித்து விளக்கங்களை அளித்துள்ளது.. இது தொடர்பாகத் தேர்தல் ஆணையம் கூறுகையில், "குற்றச்சாட்டு எழுந்துள்ளது குதிராம் அனுஷிலன் கேந்திராவிற்குள் மொத்தம் 7 ஸ்ட்ராங் ரூம்கள் உள்ளன. கொல்கத்தா வடக்கு மாவட்டத்திற்கான 7 வாக்கு எண்ணிக்கை மையங்களும் வேட்பாளர்கள், தேர்தல் முகவர்கள் மற்றும் பொதுப் பார்வையாளர்கள் முன்னிலையில் சீல் வைக்கப்பட்டன.
#FactCheck @ECISVEEP @SpokespersonECI @PIBKolkata @airnews_kolkata pic.twitter.com/OGzKCsWhIa
— CEO West Bengal (@CEOWestBengal) April 30, 2026
வாக்குப்பதிவு செய்யப்பட்ட EVM இயந்திரங்கள் உள்ள 7 அறைகளும் மத்தியப் பாதுகாப்புப் படையினரின் (CAPF) முழுமையான பாதுகாப்பில் உள்ளன. அதே வளாகத்தில் தபால் வாக்குகள் மற்றும் மின்னணு தபால் வாக்குகளை வைப்பதற்காகத் தனியாக ஒரு அறை ஒதுக்கப்பட்டுள்ளது. தபால் வாக்குகளைத் தொகுதி வாரியாகப் பிரிக்கும் பணி குறித்து ஏப்ரல் 30 மாலை 4:00 மணிக்கே பார்வையாளர்கள் மற்றும் தேர்தல் நடத்தும் அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. இது குறித்த விபரங்கள் அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் மின்னஞ்சல் மூலமாகவும் முறைப்படி தெரிவிக்கப்பட்டது.
தேர்தல் ஆணையம் விளக்கம்
அதன்படியே மாலை 4 மணி முதல் தபால் வாக்குகளைப் பிரிக்கும் பணி நடைபெற்றது. பிரதான ஸ்ட்ராங் ரூம்கள் அனைத்தும் பத்திரமாகப் பூட்டப்பட்டுச் சீல் வைக்கப்பட்டுள்ளன. இந்த நடைமுறைகள் அனைத்தும் திரிணாமுல் காங்கிரஸின் குணால் கோஷ், பாஞ்சா மற்றும் பாஜகவின் காளி ஆகியோருக்கு முன்கூட்டியே தெரிவிக்கப்பட்டு, அவர்கள் முன்னிலையிலேயே நடந்தது" என்றார்.
எனவே, தேர்தல் விதிகள் மற்றும் ஏற்கனவே பகிரப்பட்ட தகவல்களைச் சரிபார்க்காமல், தவறான செய்திகளையும் வதந்திகளையும் பரப்ப வேண்டாம் என வேட்பாளர்களைத் தேர்தல் ஆணையம் கேட்டுக் கொண்டுள்ளது. முன்னதாக, முதல்வர் மம்தா பானர்ஜியும் ஸ்ட்ராங் ரூம் பகுதிக்கு நேரில் சென்று ஆய்வு நடத்தி, "வாக்கு இயந்திரங்களைத் தொட முயன்றால் அது வாழ்வா சாவா போராட்டமாக மாறும்" என எச்சரித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Fact Check
வெளியான செய்தி
மேற்கு வங்கத்தில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் உள்ள ஸ்ட்ராங் ரூமில் பாஜகவினர் நுழைந்துள்ளதாக திரிணாமுல் குற்றச்சாட்டுகிறது!
முடிவு
தபால் வாக்குகளைப் பிரிக்கும் செயல்முறையே நடந்துள்ளது. அனைத்து கட்சிகளுக்கும் இது தொடர்பாக முன்கூட்டியே தெரிவிக்கப்பட்டுவிட்டது.













Click it and Unblock the Notifications