Gold : தங்கத்துக்கு டைம் சரியில்ல..விஸ்வரூபமெடுத்த அமெரிக்கா! கன் மாதிரி நிற்கும் டாலர்! இனி சரியும் போலயே!
நியூயார்க்: கடந்த வார தொடக்கத்திலிருந்து அதிகரித்து வந்த தங்கத்தின் விலை இன்று ஒரே நாளில் சவரனுக்கு 1520 குறைந்து விற்பனை செய்யப்படுகிறது. தங்கத்தின் விலையில் இதே போல் தொடர்ந்து சரிவு ஏற்பட வாய்ப்பு இருப்பதாகவே சொல்கின்றனர் உலகப் பொருளாதார நிபுணர்கள். குறிப்பாக அமெரிக்காவில் வெளியான வேலைவாய்ப்பு தரவுகள் டாலருக்கு ஆதரவாக அமைந்ததால் தங்கத்தின் விலை சரிவை சந்தித்ததாகவும் இதே நிலை நீடிக்க வாய்ப்பு இருப்பதாகவும் சொல்கின்றன.
அமெரிக்காவில் வெளியான வலுவான வேலைவாய்ப்பு தரவுகள் காரணமாக, அமெரிக்க பெடரல் வங்கி (Fed) விரைவில் வட்டி விகிதக் குறைப்பை மேற்கொள்ளும் என்ற எதிர்பார்ப்பு குறைந்ததால், உலக சந்தையில் தங்கத்தின் விலை வியாழக்கிழமை லேசாக சரிவைக் கண்டது.
ஜனவரி மாதத்திற்கான வேலைவாய்ப்பு எண்ணிக்கைகள் எதிர்பார்த்ததை விட அதிகமாக உயர்ந்தது. டிசம்பரில் 48,000 ஆக திருத்தப்பட்ட வேலைவாய்ப்பு உயர்வுக்கு பின், ஜனவரியில் 1,30,000 வேலைகள் அதிகரித்துள்ளன. வேலைஇல்லா விகிதமும் 4.3% ஆக குறைந்துள்ளது.

தங்கம் விலை சரிவு
ராய்ட்டர்ஸ் கணிப்பில் 70,000 வேலைகள் மட்டுமே உருவாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இதை விட அதிகமான வளர்ச்சி பதிவானது. இந்த தரவுகள் வெளியானதன் பின்னர், தங்கத்தின் ஸ்பாட் விலை அவுன்ஸுக்கு 0.3% குறைந்து 5,064.29 டாலராக இருந்தது. ஏப்ரல் மாத அமெரிக்க தங்க ஃபியூச்சர்ஸ் விலை 0.2% சரிந்து 5,086.50 டாலராக காணப்பட்டது. வெள்ளி விலையும் 0.7% குறைந்து 83.47 டாலராக இருந்தது. முன்னதாக புதன்கிழமை 4% உயர்வு கண்டிருந்தது.
வேலைவாய்ப்பு தரவுகள்
வலுவான வேலைவாய்ப்பு தரவுகள் டாலருக்கு ஆதரவாக அமைந்ததால், தங்கத்தில் லாபப்பெறுதல் (profit booking) ஏற்பட்டதாக சந்தை ஆய்வாளர்கள் கூறுகின்றனர். பணவீக்கம் குறித்த அமெரிக்க நுகர்வோர் விலை எண் (CPI) அறிக்கை வெளியாகவுள்ள நிலையில், அடுத்தடுத்த தரவுகள் Fed வட்டி கொள்கைக்கு திசையை நிர்ணயிக்கும் என்று முதலீட்டாளர்கள் கவனித்து வருகின்றனர். பொதுவாக வட்டி விகிதங்கள் குறைந்தால், வருமானம் தராத தங்கத்தை வைத்திருக்கும் செலவு குறைவதால் தங்க விலை உயர்வு பெறும்.
தங்கத்தின் விலை
ஆனால் வட்டி குறைப்பு தாமதமானால், தங்கத்தின் விலையில், முன்னேற்றம் கட்டுப்படும். உலக சந்தை ஏற்றத்தால் கடந்த சில மாதங்களாக சென்னையிலும் தங்க விலை வேகமாக உயர்ந்து வருகிறது. சமீபத்தில் சவரன் ரூ.1,15,000 ஐ தாண்டி வரலாற்று உச்சத்தை தொட்டது. சனிக்கிழமை சவரனுக்கு ரூ.1,360 உயர்ந்து ரூ.1,15,360 ஆக விற்றது. தொடர்ந்து திங்கள்கிழமை கிராமுக்கு ரூ.230 உயர்ந்து ரூ.14,650 ஆகவும், சவரனுக்கு ரூ.1,840 உயர்ந்து ரூ.1,17,200 ஆகவும் இருந்தது.
வலுவான டாலர்
செவ்வாய்க்கிழமை ரூ.1,16,640 மற்றும் புதன்கிழமை ரூ.1,18,320 வரை உயர்ந்தது. இந்த உயர்வுக்கு பின் வியாழக்கிழமை காலை சென்னையில் ஆபரணத் தங்கம் சவரனுக்கு ரூ.1,520 குறைந்து ரூ.1,16,800 ஆக விற்பனையாகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ.14,600 ஆக உள்ளது. அதே நேரத்தில் வெள்ளி விலை தொடர்ந்து நான்காவது நாளாக மாற்றமின்றி, ஒரு கிராம் ரூ.300 மற்றும் ஒரு கிலோ ரூ.3,00,000 என்ற நிலையில் உள்ளது. உலக சந்தை நகர்வுகள், அமெரிக்க பொருளாதார தரவுகள் மற்றும் Fed வட்டி கொள்கை ஆகியவை அடுத்த சில நாட்களில் தங்கம், வெள்ளி விலைகளில் மேலும் மாற்றங்களை ஏற்படுத்தக்கூடும் என சந்தை நிபுணர்கள் கருதுகின்றனர்.












Click it and Unblock the Notifications