படுத்தேவிட்டது தங்கம்.. வரலாறு காணாத சரிவு.. இந்தளவுக்கு சரியும்னு யாருமே எதிர்பார்க்கல!
சென்னை: சர்வதேச சந்தையில் தங்கம் விலை வரலாறு காணாத அளவுக்கு சரிந்துள்ளது. கடந்த ஓராண்டில் இல்லாத அளவுக்கு தங்கம் விலை சரிந்துள்ள நிலையில், தங்கம் மட்டுமின்றி, வெள்ளி, பிளாட்டினம் உள்ளிட்ட உலோகங்களின் விலையும் கடுமையாக குறைந்துள்ளன. உங்களுக்கு தங்கம் வாங்கும் பிளான் இருந்தால் இன்று மறக்காமல் நகைக்கடைக்கு ஓடுங்கள்.
தங்கம் விலை கடந்த சில மாதங்களாகவே பெரியளவில் ஏறவில்லை. சொல்லப்போனால் அது சில வாரங்களாகவே தொடர்ந்து சீராக சரிந்தே வந்தது. அமெரிக்காவில் பணவீக்கம் குறித்த அச்சம், வட்டி விகிதம் உயர்த்தப்படுவது இதற்கு முக்கிய காரணங்களாக இருந்தன.

தங்கம் விலை
இதற்கிடையே நேற்றிரவு சர்வதேச சந்தையில் தங்கம் விலை வரலாறு காணாத அளவுக்கு சரிந்துள்ளது. கடந்த ஓராண்டில் இல்லாத அளவுக்கு தங்கம் விலை குறைந்துள்ளது. செயற்கை நுண்ணறிவு நிறுவனங்களின் பங்குகள் சரிந்ததும், முதலீட்டாளர்களின் நம்பிக்கை குறைந்ததும் இந்த வீழ்ச்சிக்கு முக்கிய காரணங்களாக பார்க்கப்படுகின்றன.
நேற்றிரவு சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை 3.5 சதவீதம் சரிந்து , சுமார் 3,877 டாலராக உள்ளது. கடந்த 2025 அக்டோபருக்கு பிறகு பதிவான மிக குறைந்த விலை இதுவாகும். டிசம்பர் மாத டெலிவரிக்கான கோல்ட் ஃபியூச்சர்ஸ் விலையும் 3,892 டாலர் என்ற அளவில் வர்த்தகமாகிறது. சரி தங்கம் தானே இப்படி வெள்ளி ஏறுமா என பார்த்தால்.. வெள்ளி அதை விட வேகமாக சரிந்துள்ளது. வெள்ளி விலை 6.5 சதவீதம் சரிந்து 49 டாலராக குறைந்தது. கடந்த 11 மாதங்களில் முதல்முறையாக சர்வதேச சந்தையில் ஒரு அவுன்ஸ் வெள்ளி 50 டாலருக்குக் கீழே சென்றுள்ளது.
என்ன காரணம்?
அமெரிக்கப் பங்குச்சந்தை, குறிப்பாக டெக் நிறுவனங்களின் பங்குகள் வெள்ளிக்கிழமை கடுமையாகச் சரிந்தன. ஏஐ துறையில் நிறுவனங்கள் அதிக அளவில் முதலீடு செய்தாலும், அதற்கேற்ற வருமானம் கிடைக்காமல் போகலாம் என்ற சந்தேகம் முதலீட்டாளர்களிடம் அதிகரித்துள்ளது. இதனால் பங்குச்சந்தையில் ஏற்பட்ட பாதிப்பு, தங்கம் போன்ற பாதுகாப்பான முதலீடுகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
பங்குச்சந்தையில் ஏற்பட்ட சரிவை ஈடுசெய்ய முதலீட்டாளர்கள் தங்களின் தங்கம் உட்பட மற்ற முதலீடுகளையும் விற்று பணமாக்கியிருக்கலாம். மேலும், மார்ஜின் தொகையை செலுத்த வேண்டிய கட்டாயத்தால் தங்கம் உள்ளிட்ட பாதுகாப்பான முதலீடுகளை விற்றிருக்கலாம் என வல்லுநர்கள் குறிப்பிடுகிறார்கள். அதேநேரம் தங்கம் விலை சீக்கிரமே சரிவின் பாதையில் இருந்து விலகி, மீண்டும் ஏறலாம் எனவும் அவர்கள் குறிப்பிடுகிறார்கள்.
வரலாற்று சரிவு
கடந்த ஜனவரி மாதம் தங்கம் ஒரு அவுன்ஸ் 5,595 டாலர் என்ற வரலாற்று உச்சத்தை தொட்டது. அங்கிருந்து பார்த்தோம் என்றால் இப்போது வரை தங்கம் விலை சுமார் 30 சதவீதம் சரிந்துள்ளது. அமெரிக்காவில் விலைவாசியை கட்டுப்படுத்த வட்டி விகிதங்களை உயர்த்த அமெரிக்க பெடரல் வங்கி முடிவெடுத்துள்ளது. நீண்ட காலத்திற்கு வட்டி விகிதம் அதிகமாகவே இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆசிய நாடுகளில் தங்கத்துக்கான தேவை குறைந்திருப்பதும் விலை சரிவுக்கு காரணமாக இருக்கிறது.
வெள்ளி ரிஸ்க்
அதேநேரம் தங்கம் விலை 4,000 டாலருக்கு கீழே செல்லும் போது உலக நாடுகளின் மத்தி வங்கிகள் அதிகளவில் வாங்கி குவிக்க வாய்ப்புள்ளன. அப்போது தங்கம் விலை சரிவது நிற்கும் எனவும் வல்லுநர்கள் கூறுகிறார்கள். உலக நாடுகள் தங்கத்தை வாங்குவதை போல மற்ற உலோகங்களை உலக நாடுகள் வாங்காது. அதிலும் குறிப்பாக தொழில்துறை தேவையை அதிகமாக சார்ந்துள்ள வெள்ளியின் விலை இன்னுமே கூட வேகமாக சரியும் என சொல்லப்படுகிறது.


Click it and Unblock the Notifications
