சர்க்கஸ் மாதிரி வித்தை காட்டுதே.. சக்சஸ் கொடுக்குமா தங்கம்? அடுத்த நாட்களில் விலை எப்படி இருக்கும்?
சென்னை: தங்கத்தின் விலை கடந்த சில தினங்களாக சரிந்து வந்த நிலையில் திடீரென இன்று விலை அதிகரித்திருக்கிறது. கடந்த 6 நாட்களாக சவரனுக்கு 4500 வரை தங்கத்தின் விலை குறைந்த நிலையில் இன்று திடீரென சவரனுக்கு 800 ரூபாய் அதிகரித்துள்ளது. இந்த நிலையில் வரும் நாட்களில் தங்கத்தின் விலை எப்படி இருக்கும் என முதலீட்டாளர்கள் குழப்பம் அடைந்துள்ள நிலையில், நிபுணர்கள் சில கணிப்புகளை வெளியிட்டுள்ளனர்.
இந்த ஆண்டு தங்கத்தின் விலை எட்ட முடியாத உயரத்துக்கு சென்றது. ஜனவரி மாதம் 57 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனையான தங்கத்தின் விலை, கடந்த அக்டோபர் மாதம் ஒரு சவரனுக்கு 97 ஆயிரம் என்ற விலையைத் தொட்டது.
விரைவில் ஒரு லட்சம் ரூபாயை ஒரு சவரன் தங்கத்தின் விலை எட்டும் என கணிக்கப்பட்ட நிலையில் திடீரென தங்கத்தின் விலை கணிசமாக குறைய தொடங்கியது. குறிப்பாக கடந்த ஒரு வாரத்தில் மட்டும் ஏறக்குறைய 5000 ரூபாய் தங்கத்தின் விலை சரிந்தது.

தங்கம் விலை
இதுவரை இல்லாத விலை சரிவாகும் இதனால் தங்கத்தை தொடர்ந்து வாங்கலாம் என மக்கள் திட்டமிட்டு இருந்தனர். மேலும், தங்கத்தின் விலை இன்னும் குறையும் என எதிர்பார்த்தவர்களுக்கு அதிர்ச்சி தரும் விதமாக தங்கத்தின் விலை திடீரென அதிகரித்துள்ளது. நேற்று வரை சென்னையில் ஒரு கிராம் தங்கத்தின் 11,400 க்கு விற்கப்பட்ட நிலையில் இன்று ஒரு கிராமுக்கு 100 ரூபாய் அதிகரித்து 11,500 க்கு விற்பனையாகிறது. இதேபோல ஒரு சவரனுக்கு 800 அதிகரித்து 92 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனையாகிறது. இந்த நிலையில் வரும் நாட்களில் தங்கத்தின் விலை நிலவரம் எப்படி இருக்கும் என்பது குறித்து நிபுணர்கள் கூறியுள்ளனர்.
தங்க முதலீடு
உலக சந்தையில் தொடர்ந்து ஏற்படும் பிரச்சினைகள் அமெரிக்க பொருளாதார தரவுகள், சீனா-ஜப்பான் பதட்டம் போன்ற காரணிகள் தங்கத்தின் விலையை நாள்தோறும் ஏற்றத்தாழ்வு காணச் செய்து வருகிறது. கடந்த சில வாரங்களாக தங்கம் பெரிய அளவில் சரிவையும் பின்னர் மீள்வையும் சந்தித்துள்ளது. இதனால், அடுத்த நாட்களில் தங்கம் என்னவாக இருக்கும் என்ற கேள்வி முதலீட்டாளர்களிடையே அதிகமாக எழுந்துள்ளது.
தங்கம் விலை நிலவரம்
இதுதொடர்பாக மார்க்கெட் அனலிஸ்ட் பிரவீன் சிங் கூறும் போது," தங்கம் தற்போது ஒரு குறிப்பிட்ட வரம்புக்குள் தான் நகரும். எனவே "சரிவுகளில் வாங்குவது" (Buy on Dips) நல்ல ஸ்ட்ராட்டஜி ஆகும்" என்று கூறுகிறார். அமெரிக்க மத்திய வங்கி வட்டி விகித முடிவுகள் பற்றிய குழப்பம் இன்னும் நீடித்து வருவதால், தங்கம் மிகப் பெரிய ஏற்றத்தை நோக்கி நகராமல், சற்று ஏற்ற இறக்கத்துடன் அதாவது 1 லட்சத்துக்குள்ளேயே இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.
பணவீக்கம்
கடந்த வாரம் ஸ்பாட் தங்கத்தின் விலை கடைசி இரண்டு நாட்களில 2.6% சரிந்தபோதும், வார இறுதியில் 2% லாபத்துடன் $4,084-க்கு முடிந்தது. நவம்பர் 13 அன்று பணவீக்கம் மீண்டும் அதிகரிக்கும் என்ற அச்சத்தில் தங்கம் $4,245 வரை சென்று, பின்னர் ஃபெட் வட்டி குறைப்பு பற்றிய சந்தேகத்தால் விற்பனை சற்று சரிவைச் சந்தித்தது. இந்நிலையில், சீனாவின் பொருளாதார தரவுகள் பலவீனமாக வந்துள்ளன. குறிப்பாக ரியல் எஸ்டேட் துறை தொடர்ந்து சரிவைக் காட்டுவதால் உலகளாவிய முதலீட்டாளர்களுக்கு பதட்டம் அதிகரித்துள்ளது. இதுவும் தங்கத்தின் விலைக்கு சாதகமாகவே பார்க்கப்படுகிறது.
சீனா-ஜப்பான்
இதே சமயம், சீனா-ஜப்பான் இடையேயான அரசியல் பதட்டமும் தங்கத்தின் விலையை அதிகரிக்கலாம் என கணிக்கப்படுகிறது. அமெரிக்க டாலர் குறியீடு இப்போது 99.45-க்கு அருகில் உள்ளது. டாலர் வலுவாக இருப்பது தங்கத்துக்கு சற்றே அழுத்தம் கொடுத்தாலும், வட்டி குறைப்பு நிகழலாம் என்ற நம்பிக்கை இன்னும் சந்தையில் உள்ளது. எனவே, தங்கத்தின் விலை அனைவரையும் பதட்டத்திலேயே வைத்திருக்கும் என்கின்றனர் பொருளாதார நிபுணர்கள்.












Click it and Unblock the Notifications