விடாமல்.. 24 மாதங்களாக டன் கணக்கில் தங்கம் வாங்கும் சீனா.. அமெரிக்காவிற்கு ஆப்பு வைக்க முடிவு?

Subscribe to Oneindia Tamil

பெய்ஜிங்: சர்வதேச சந்தையில் தங்கம் விலை திடீரென வீழ்ச்சி அடைந்து வரும் நிலையிலும், சீனா எதைப் பற்றியும் கவலைப்படாமல் தொடர்ந்து டன் கணக்கில் தங்கத்தை அள்ளி குவித்து வருகிறது. அக்டோபர் மாதத்தில் மட்டும் சீனாவின் மத்திய வங்கி சுமார் 25.8 டன் தங்கத்தை புதிதாக வாங்கித் தன் கருவூலத்தில் சேர்த்துள்ளது. இதன் மூலம் சீனா தொடர்ந்து 24 மாதங்களாக, அதாவது கடந்த இரண்டு ஆண்டுகளாகத் தொடர்ந்து ஒவ்வொரு மாதமும் தங்கம் வாங்கி புதிய சாதனையை படைத்துள்ளது.

தங்கம் விலை குறையும் போது மற்ற முதலீட்டாளர்கள் பயந்து விற்கும் வேளையில், சீனா மட்டும் ஏன் இவ்வளவு தீவிரமாகத் தங்கத்தை வாங்குகிறது? இதற்குப் பின்னால் உள்ள சர்வதேச அரசியல் மற்றும் பொருளாதாரக் காரணங்களை மிக எளிமையாக இங்கே பார்ப்போம்.

அக்டோபரில் என்ன நடந்தது?

கடந்த அக்டோபர் மாதத்தில் சர்வதேச சந்தையில் தங்கம் விலை சுமார் 7 சதவீதம் வரை சரிந்தது. ஒரு அவுன்ஸ் தங்கம் விலை 4,000 டாலருக்குக் கீழ் சரிந்தது. உலக அளவில் 2008-ஆம் ஆண்டுக்குப் பிறகு அக்டோபர் மாதத்தில் ஏற்பட்ட மிகப் பெரிய சரிவாக இது பார்க்கப்படுகிறது.

Gold Prices Crash But China Adds 25 8 Tonnes in October Is Beijing Moving Away From US Dollar

ஆனால், இந்த விலை வீழ்ச்சியைத் தனக்குக் கிடைத்த மிகச் சிறந்த வாய்ப்பாக சீனா பயன்படுத்திக் கொண்டது. அக்டோபரில் மட்டும் சுமார் 25.8 டன் தங்கத்தை சீனா வாங்கியுள்ளது. இந்த 2026-ஆம் ஆண்டில் மட்டும் ஜனவரி முதல் அக்டோபர் வரை சீனா வாங்கி சேர்த்துள்ள தங்கத்தின் மொத்த அளவு சுமார் 129 டன்களாக உயர்ந்துள்ளது. தற்போது சீனாவின் வசம் உள்ள மொத்த தங்கத்தின் இருப்பு 2,435 டன்களை எட்டியுள்ளது.

சீனா ஏன் தங்கத்தை குவிக்கிறது?

சீனா தொடர்ந்து தங்கம் வாங்குவதற்கு மிக முக்கியமான மூன்று காரணங்கள் உள்ளன

அமெரிக்க டாலர் மீதான பயம்: சீனா தனது வெளிநாட்டுச் சொத்துக்களைப் பெரும்பாலும் அமெரிக்க அரசுப் பத்திரங்களாகவும், அமெரிக்க டாலர்களிலுமே வைத்திருந்தது. ஆனால், உக்ரைன் போருக்குப் பிறகு ரஷ்யா வைத்திருந்த பல லட்சம் கோடி மதிப்பிலான டாலர் மற்றும் வெளிநாட்டுச் சொத்துக்களை அமெரிக்காவும் மேற்கத்திய நாடுகளும் முடக்கின. எதிர்காலத்தில் தைவான் விவகாரத்திலோ அல்லது வேறு ஏதேனும் பிரச்னையிலோ தங்களுக்கும் இதே நிலை வந்துவிடக் கூடாது என்பதில் சீனா எச்சரிக்கையாக இருக்கிறது. தங்கத்தை எந்த ஒரு நாடும் முடக்கவோ அல்லது தடுத்து நிறுத்தவோ முடியாது.

டாலர் பங்கைக் குறைத்தல்: சீனா அமெரிக்காவின் கடன் பத்திரங்களை வேகமாக விற்று வருகிறது. பத்தாண்டுகளுக்கு முன்பு 1.1 டிரில்லியன் டாலராக இருந்த அமெரிக்கப் பத்திரங்களின் மதிப்பு, தற்போது சுமார் 618 பில்லியன் டாலராகக் குறைந்துள்ளது. அந்தப் பணத்தை எல்லாம் எடுத்து சீனா நேரடியாகத் தங்கமாக மாற்றி வருகிறது.

சீனாவின் பாதுகாப்பு: சீனாவின் மொத்த வெளிநாட்டுச் செலாவணி கையிருப்பு 3.4 டிரில்லியன் டாலருக்கும் மேல் உள்ளது. அதில் தங்கத்தின் பங்கு வெறும் 9 சதவீதம் மட்டுமே. அமெரிக்கா, ஜெர்மனி போன்ற மேற்கத்திய நாடுகள் தங்கள் கையிருப்பில் 60 முதல் 70 சதவீதத்திற்கு மேல் தங்கம் வைத்துள்ளன. எனவே, சீனா தனது கையிருப்பை இன்னும் பல ஆண்டுகளுக்குத் தொடர்ந்து அதிகப்படுத்திக் கொண்டே இருக்கும் என்கிறார்கள் பொருளாதார வல்லுநர்கள்.

தங்கத்தின் விலை மீண்டும் உயருமா?

சாதாரண மக்கள் விலை சரியும்போது விற்க நினைப்பார்கள்.. ஆனால் பெரிய நாடுகள் விலை குறையும் போதெல்லாம் அதிக அளவில் வாங்கிச் சேமிக்கும். சீனா போன்ற உலகின் மிகப்பெரிய பொருளாதார நாடு தொடர்ந்து தங்கம் வாங்குவது, சர்வதேச சந்தையில் தங்கம் விலை அளவுக்கு அதிகமாகச் சரிந்துவிடாமல் தாங்கிப் பிடிக்கும் ஒரு முக்கிய சப்போர்ட் சிஸ்டமாக மாறும்.

அமெரிக்க டாலரின் ஆதிக்கத்தைக் குறைத்து, தனது நாட்டின் பொருளாதாரத்தைப் பாதுகாக்க சீனா எடுத்து வைக்கும் இந்த மிகப்பெரிய நடவடிக்கை, நீண்ட கால அடிப்படையில் உலக தங்கச் சந்தைக்கு மிகப்பெரிய பலமாகவே இருக்கும்.. அதோடு டாலரின் வீழ்ச்சியாகவும் இருக்கும் என்று சந்தை நிபுணர்கள் கருதுகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+