படக்குனு 10 கிராம் வாங்கிப் போடுங்க.. முதல்நாளிலேயே சரிந்த தங்கம்! இன்னும் குறையுமாமே! வாங்கலாமா?
சென்னை: அமெரிக்கா - ஈரான் இடையேயான போர் பதற்றம் மீண்டும் அதிகரித்துள்ள நிலையில், உலக சந்தையில் தங்கத்தின் விலை திடீரென சரிவை சந்தித்துள்ளது. அமெரிக்க டாலர் மதிப்பு திடீரென வலுப்பெற்றதும் தங்கத்தின் விலை குறைவதற்கான முக்கிய காரணமாகக் கூறப்படுகிறது. இந்த மாற்றங்கள் உலக பொருளாதாரத்திலும், இந்தியா போன்ற நாடுகளின் தங்க சந்தையிலும் தாக்கத்தை ஏற்படுத்தும் வாய்ப்பு இருப்பதாக நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
சமீபத்தில் ஹார்முஸ் நீரிணை மீண்டும் மூடப்பட்டதாக வெளியான தகவல்கள் உலக சந்தையில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளன. இந்த நீரிணை வழியாக தான் உலகின் பெரும்பாலான எண்ணெய் கப்பல்கள் செல்லும் நிலையில், அங்கு போக்குவரத்து பாதிக்கப்படுவது எண்ணெய் விலையை உயர்த்தியுள்ளது.

எண்ணெய் விலை அதிகரிப்பது, பணவீக்கம் மீண்டும் உயரும் என்ற அச்சத்தை சந்தையில் உருவாக்கியுள்ளது. இதனால், சர்வதேச சந்தையில் தங்கத்தின் ஸ்பாட் விலை சுமார் 0.7 சதவீதம் குறைந்து அவுன்ஸ் ஒன்றுக்கு 4,794 டாலர் அளவுக்கு சரிந்துள்ளது.
தங்கம் விலை சரிவு
இதேபோல், ஜூன் மாத டெலிவரிக்கான அமெரிக்க தங்க பியூச்சர்ஸ் விலையும் 1 சதவீதத்திற்கும் மேல் குறைந்துள்ளது. கடந்த வாரம் அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே ஏற்பட்டிருந்த தற்காலிக போர் நிறுத்தம் நீடிக்குமா என்ற சந்தேகம் உருவானதும் சந்தையில் புதிய அதிர்வுகளை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்கா ஒரு ஈரான் சரக்கு கப்பலை தடுத்து நிறுத்தியதாக கூறப்பட்ட தகவலும் பதற்றத்தை மேலும் அதிகரித்துள்ளது. இதற்கு பதிலடி கொடுக்கப்படும் என ஈரான் எச்சரித்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஈரான் அமெரிக்கா
இதனால், இரண்டு நாட்களுக்கு மட்டுமே அமல்படுத்தப்பட்டிருந்த போர் நிறுத்தம் கூட நீடிக்காமல் போகலாம் என்ற அச்சம் எழுந்துள்ளது. இதற்கிடையில், அமெரிக்க டாலரின் மதிப்பு வலுப்பெற்றுள்ளது. டாலர் வலுப்பெற்றால், பிற நாணயங்களை பயன்படுத்தும் நாடுகளுக்கு தங்கம் வாங்குவது அதிக செலவாகும். இதுவும் தங்கத்தின் தேவை குறைவதற்கான ஒரு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.
எண்ணெய் விலை
மேலும், அமெரிக்க அரசுப் பத்திரங்களின் வட்டி விகிதங்களும் உயர்ந்துள்ளதால், முதலீட்டாளர்கள் தங்கம் போன்ற வட்டி வருமானம் தராத சொத்துகளிலிருந்து விலகும் நிலை ஏற்பட்டுள்ளது. மற்றொரு பக்கம், எண்ணெய் விலை உயர்ந்ததால் பங்குச் சந்தைகளிலும் அதிர்வு ஏற்பட்டுள்ளது. மத்திய கிழக்கு பகுதியில் பதற்றம் நீடிப்பதால், பெர்சியன் வளைகுடா பகுதிகளில் கப்பல் போக்குவரத்து மிகவும் குறைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இது உலக வர்த்தகத்துக்கும் எதிர்மறை தாக்கத்தை ஏற்படுத்தும் வாய்ப்பு உள்ளது.
இந்தியா தங்கம்
இந்த சூழலில் இந்தியாவில் தங்கம் வாங்கும் முக்கியமான காலங்களில் கூட விற்பனை மந்தமாகவே இருந்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சர்வதேச சந்தையில் தங்க விலை அதிகமாக இருப்பதால், நகை வாங்கும் ஆர்வம் குறைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இருப்பினும், சில முதலீட்டாளர்கள் தங்கத்தை பாதுகாப்பான முதலீடாக கருதி வாங்கும் நிலை தொடர்கிறது.
தங்கம் வாங்கலாமா?
தங்கத்துடன் சேர்த்து மற்ற விலைமதிப்புள்ள உலோகங்களின் விலைகளும் சரிவை சந்தித்துள்ளன. வெள்ளி விலை சுமார் 1 சதவீதத்திற்கும் மேல் குறைந்துள்ளதுடன், பிளாட்டினம் மற்றும் பாலாடியம் விலைகளும் குறைந்துள்ளதாக சந்தை தகவல்கள் தெரிவிக்கின்றன. மத்திய கிழக்கு பகுதியில் நிலவும் பதற்றம், அமெரிக்க டாலர் மதிப்பு உயர்வு, எண்ணெய் விலை ஏற்றம் ஆகிய மூன்று காரணிகளும் இணைந்து உலக தங்க சந்தையில் அதிர்வை ஏற்படுத்தியுள்ளதாக நிபுணர்கள் கூறுகின்றனர். இந்த நிலை நீடித்தால், அடுத்த சில நாட்களிலும் தங்க விலையில் மேலும் மாற்றங்கள் ஏற்படும் வாய்ப்பு இருப்பதாக சந்தை வட்டாரங்கள் எச்சரித்து வருகின்றன.












Click it and Unblock the Notifications