படக்குனு 10 கிராம வங்குங்க.. தங்கம் என்னைக்கும் கைவிடாது! இப்போ ரேட் எகிறுது பாத்தீங்களா? நம்பலமா?
சென்னை: சமீப காலமாக தங்கம் மற்றும் வெள்ளி விலையில் திடீர் சரிவு ஏற்பட்டாலும், நீண்டகால பாதுகாப்பான முதலீடாக அவை தொடர்ந்து பார்க்கப்படுகின்றன என்று நிபுணர்கள் கூறுகின்றனர். கடந்த சில நாட்களாக தங்கம், வெள்ளி விலை கடுமையாகச் சரிந்த நிலையில், தற்போது மீண்டும் உச்சத்தை நோக்கி பாய்ந்து வருகிறது. எனவே தங்கத்தில் முதலீடு செய்தவர்கள் பயப்படத் தேவையில்லை என்கின்றனர் பொருளாதார நிபுணர்கள்.
சர்வதேச பொருளாதார சூழ்நிலைகள் மற்றும் உலக அரசியல் பதற்றங்கள் காரணமாக தங்கம் மற்றும் வெள்ளி விலை கடந்த சில மாதங்களாக அதிக ஏற்ற, இறக்கங்களை சந்தித்து வருகிறது. விலை தாறுமாறாக மாறுவதால் சிறு முதலீட்டாளர்களிடம் சந்தேகம் உருவாகியுள்ளது.
விலை இவ்வளவு மாறிக்கொண்டிருக்கும் போது, இவை பாதுகாப்பான முதலீடாக எப்படித் தொடரும் என்ற கேள்வி எழுந்துள்ளது. முதலீட்டு வட்டாரங்களில் தங்கம் மற்றும் வெள்ளி 'பாதுகாப்பு சொத்து' எனக் கருதப்படுகின்றன.

தங்கம் விலை
பங்கு சந்தைகள் சரிவை சந்திக்கும் நேரங்களில் அல்லது உலகளாவிய பதற்றம் அதிகரிக்கும் சூழலில் முதலீட்டாளர்கள் தங்கள் பணத்தை பாதுகாக்கும் நோக்கில் இவ்விரு உலோகங்களிலும் முதலீடு செய்கிறார்கள். பங்குகள் போல நிறுவனங்களின் செயல்பாடுகளுடன் இவை நேரடியாக தொடர்புடையதல்ல. உலகளாவிய தேவையுடன் கூடிய சொத்துகள் என்பதால், சந்தை அசாதாரணமாக இருக்கும் காலங்களில் மதிப்பை தக்க வைத்துக் கொள்ளும் தன்மை இவைகளுக்கு உள்ளது.
இந்தியாவில் தங்க விலை
சமீபத்திய நிலவரப்படி, இந்தியாவில் தங்கம் மற்றும் வெள்ளி விலை சமீப உச்சத்திலிருந்து குறைந்தாலும், மொத்த அளவில் இன்னும் உயர்ந்த நிலையில் தான் உள்ளது. 24 காரட் தங்கம் ஒரு கிராமுக்கு சுமார் ரூ.15,400 அளவில் வர்த்தகமாகிறது. 22 காரட் தங்கம் கிராமுக்கு ரூ.14,130 அருகில் உள்ளது. வெள்ளி ஒரு கிலோ சுமார் ரூ.2,54,900 அளவில் முக்கிய நகரங்களில் விற்பனை செய்யப்படுகிறது.
முதலீட்டு பாதுகாப்பு சொத்து
முதலீட்டு நிறுவனம் Enrich Money நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பொன்முடி ஆர் கூறுவதாவது, குறுகிய கால விலை சரிவை நீண்டகால பலவீனமாக பார்க்கக் கூடாது என்பதாகும். சமீபத்தில் உயர்ந்த விலையிலிருந்து தங்கம் குறைந்தாலும், குறைந்த விலையில் வாங்கும் ஆர்வம் தொடர்வது சந்தையில் அடிப்படை தேவை இன்னும் வலுவாக இருப்பதை காட்டுகிறது என அவர் விளக்குகிறார்.
வெள்ளி விலை
இந்திய பொருள் வர்த்தக சந்தையான MCX இல் தங்கம் சாதனை உச்சத்திலிருந்து குறைந்தபோதும், குறிப்பிட்ட விலை அளவில் வாங்கும் செயல்பாடு தொடர்கிறது. எதிர்கால விலை ஒப்பந்தங்கள் மூலம் பல முதலீட்டாளர்கள் தங்கள் அபாயத்தை கட்டுப்படுத்தும் முயற்சியில் உள்ளனர். அதேபோல், வெள்ளி விலையும் சமீபத்தில் அதிக ஏற்ற இறக்கங்களை சந்தித்தாலும், விலை குறையும் போதெல்லாம் வாங்கும் மனப்பாங்கு காணப்படுகிறது. பாதுகாப்பான முதலீடு என்றால் விலை ஒருபோதும் குறையாது என்பதல்ல.
நாணய மதிப்பு
பணவீக்கம் அதிகரிக்கும் காலங்களில் அல்லது நாணய மதிப்பு பலவீனமாகும் சூழலில், நீண்டகாலத்தில் மதிப்பை பாதுகாக்கும் தன்மை இருப்பதே அதன் முக்கிய காரணமாகும். முதலீட்டு தொகுப்பில் ஒரு பகுதியை பாதுகாப்பாக வைத்திருக்க தங்கம், வெள்ளி போன்ற உலோகங்கள் உதவுகின்றன. உலகளாவிய அரசியல் மற்றும் பொருளாதார நிலவரங்கள் இன்னும் முழுமையாக நிலைநிறுத்தப்படாத நிலையில், முதலீட்டாளர்கள் ஒரு பகுதி முதலீட்டை இவ்விரு உலோகங்களிலும் வைத்திருக்கத் தொடர்ந்து முனைந்துள்ளனர். விலை மாற்றங்கள் தொடர்ந்தாலும், பாதுகாப்பு நோக்கில் தங்கம் மற்றும் வெள்ளி மீது கவனம் குறையவில்லை என்கின்றனர் பொருளாதார நிபுணர்கள்.












Click it and Unblock the Notifications