Gold Rate Today in Chennai: புதிய உச்சத்தில் தங்கம் விலை.. முதல் முறையாக ரூ.8,000யை கடந்து ஒரு கிராம் விற்பனை
சென்னை: சென்னையில் நேற்று ஒரு சவரன் தங்க நகை ரூ.63,840க்கு விற்பனையானது. தைப்பூச தினமான இன்று தங்கம் விலை குறையும் என்று மக்கள் எதிர்பார்த்தனர். ஆனால் தங்கம் விலை சவரனுக்கு இன்று ரூ.640 வரை அதிகரித்ததோடு, ஒரு கிராம் தங்கம் முதல் முறையாக ரூ.8 ஆயிரத்தை கடந்து விற்பனையாகி வருகிறது.
மக்கள் அதிகம் வாங்கி குவிக்கும் ஆபரணங்களில் தங்கம் தான் முதன்மையாக உள்ளது. மக்கள் அதிகளவில் தங்கத்தை நாடுவது, சர்வதேச சந்தையில் தங்கத்தின் மீதான ஏற்றம், இறக்கம் உள்ளிட்டவற்றை பொறுத்து தினமும் தங்கத்தின் விலை என்பது மாறிமாறி வருகிறது.

சில நாட்கள் தங்கத்தின் விலை கூடுவதோடு, சில நாட்கள் தங்கத்தின் விலை இறங்குகிறது. ஆனால் தற்போது நம்நாட்டில் வரலாறு காணாத வகையில் தங்கத்தின் விலை என்பது உச்சம் தொட்டுள்ளது.
இதற்கு முக்கிய காரணம் அமெரிக்காவின் அதிபராக டிரம்ப் பதவியேற்றது, உலகில் பல்வேறு இடங்களில் நடக்கும் போர் மற்றும் பல நாடுகள் இடையேயான மோதல் பதற்றம் உள்ளிட்டவை தங்கத்தின் விலையை உச்சத்துக்கு கொண்டு சென்றுள்ளன. தற்போது ஒரு சவரன் தங்கம் 60 ஆயிரத்தை தாண்டி இன்னும் உயர்ந்து கொண்டே செல்கிறது.
கடந்த பிப்ரவரி 1ம் தேதி ஒரு சவரன் தங்கம் ரூ.62 ஆயிரத்தை தாண்டியது. அதன்பிறகும் தங்கம் விலை கிடுகிடுவென அதிகரித்து கொண்டே செல்கிறது. சென்னையில் நேற்றும் தங்கத்தின் விலை உயர்ந்தது. ஒரு சவரனுக்கு ரூ.280 வரை உயர்ந்து ரூ.63,840க்கு விற்பனையானது. 1 கிராம் தங்கம் ரூ.7,980-க்கும் விற்பனையானது. இன்று சவரனுக்கு ரூ.160 உயர்ந்தால் தங்கத்தின் விலை என்பது ரூ.64,000-த்தை தொட்டுவிடும் என்பதால் நகை பிரியர்கள் ஷாக்காகி உள்ளனர்.
இந்நிலையில் தான் இன்றும் தங்கம் விலை கிடுகிடுவென அதிகரித்து புதிய உச்சத்தை தொட்டது. அதன்படி இன்று சென்னையில் ஒரு சவரன் ஆபரண தங்கம் ரூ.640 வரை உயர்ந்து ரூ.64,480க்கு விற்பனையானது. இதன்மூலம் முதல் முதலாக ஒரு சவரன் தங்கத்தின் விலை என்பது ரூ.64 ஆயிரத்தை கடந்துள்ளது. அதேபோல் இன்று ஒரு கிராம் ஆபரண தங்கத்தின் விலை ரூ.80 அதிகரித்தது. இதன்மூலம் நேற்று ரூ.7,980க்கு விற்பனையான ஒரு கிராம் ஆபரண தங்கம் இன்று 8,060க்கு விற்பனையாகி வருகிறது. ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.8 ஆயிரத்தை கடந்து இருப்பது இதுதான் முதல் முறையாகும்.
மேலும் இன்று முருகனுக்கு உகந்த தைப்பூச திருநாளாகும். பக்தர்கள் கோவில்களுக்கு படையெடுத்து செல்கின்றனர். மேலும் இந்த நாளில் நல்ல பத்திரப்பதிவுகளை பொதுமக்கள் அதிகம் செய்ய விரும்புகின்றனர். இதனால் அரசு விடுமுறை என்றால் கூட பத்திரப்பதிவு அலுவலங்கள் வழக்கம்போல் திறந்துள்ளது. அதேபோல் இன்று பலரும் தங்கம் வாங்க விரும்புகின்றனர். இதனால் இன்று தங்கத்தின் விலை குறையும்? என்று பலரும் எதிர்பார்த்தனர். ஆனால் வழக்கம்போல் தங்கத்தின் விலை உயர்ந்து உச்சம் தொட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த பிப். 1 ஆம் தேதி முதல் தங்கத்தின் விலையை பார்க்கலாம்.
10.02.2025- ஒரு சவரன் ரூ.63,840
09.02.2025- ஒரு சவரன் ரூ.63,560
08.02.2025- ஒரு சவரன் ரூ.63,560
07.02.2025- ஒரு சவரன் ரூ.63,440
06.02.2025- ஒரு சவரன் ரூ.63,440
05.02.2025- ஒரு சவரன் ரூ.63,240
04.02.2025- ஒரு சவரன் ரூ.62,480
03.02.2025- ஒரு சவரன் ரூ.61,640
02.02.2025- ஒரு சவரன் ரூ.62,320
01.02.2025- ஒரு சவரன் ரூ.62,320 (பட்ஜெட்டுக்கு பின்)
01.02.2025- ஒரு சவரன் ரூ.61,960 (பட்ஜெட்டுக்கு முன்)












Click it and Unblock the Notifications