Gold Rate Today: இடியை இறக்கிய தங்கம் விலை.. சவரனுக்கு ரூ.2720 உயர்வு! இனி கோல்ட் வாங்குவதே கனவு ஆகிடும் போல
சென்னை: அமெரிக்கா ஈரான் போர் தொடங்கியது முதலே தங்கம் விலை பெரியளவில் ஏறாமல் இருந்தது. சொல்லப்போனால் கடந்த மாதம் தங்கம் விலை கணிசமாகக் குறைந்தும் இருந்தது. இதற்கிடையே இன்று காலை போர் முடிவுக்கு வந்த சூழலில், உடனடியாக தங்கம் விலை உயர ஆரம்பித்துவிட்டது. இன்று அதிர்ச்சி தரும் வகையில் ஆபரண தங்கம் விலை சவரனுக்கு ரூ.2720 உயர்ந்துள்ளது. இன்னும் சில நாட்களுக்குத் தங்கம் விலை ஏற்றம் தொடரும் என்றே தெரிகிறது.
தங்கம் விலை கடந்தாண்டு முதலே உயர்ந்து வந்தது. ஒவ்வொரு நாளும் மாரடைப்பே வரும் அளவுக்குத் தங்கம் விலை எக்குத்தப்பாக உயர்ந்தது. இதனால் ஏழை மற்றும் நடுத்தர வர்க்கத்தினருக்குத் தங்கம் என்பது கிட்டத்தட்டக் கனவு போலவே ஆகிவிட்டது எனச் சொல்லலாம். அந்தளவுக்குத் தங்கம் விலை உயர்ந்தது. ஒரு கட்டத்தில் ஆபரணத் தங்கம் கிராமுக்கு ரூ.15,000 கூடப் போனது.

ஈரான் மோதல்
இந்தச் சூழலில் தான் அமெரிக்கா ஈரான் இணைந்து இஸ்ரேல் மீது போரை ஆரம்பித்தது. இந்த மோதல் ஆரம்பித்தவுடனேயே தங்கம் விலை தொடர்ந்து சரிந்தது. இதற்கு முக்கிய காரணமே ஹார்முஸ் ஜலசந்தி முடக்கப்பட்டது தான். ஹார்முஸ் முடக்கப்பட்டதால் கச்சா எண்ணெய் வர்த்தகம் பாதிக்கப்பட்டது. கச்சா எண்ணெய் எப்போதும் டாலரிலேயே வர்த்தகம் செய்யப்படும். இதனால் டாலர் மதிப்பு உயர்ந்தது. இது தங்கம் விலை சரிவுக்குக் காரணமாக அமைந்தது. நீண்ட நாட்களுக்குப் பிறகு ஆபரணத் தங்கம் கிராமுக்கு ரூ.13000க்கு கீழ் போனது.
போர் நிறுத்தம்
தங்கம் விலை தொடர்ந்து குறைந்து வந்ததால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். ஆனால், இந்த சரிவு முடிவுக்கு வந்துவிட்டதாகவே தெரிகிறது. அதாவது ஈரான் மீதான தாக்குதலை இரு வாரங்கள் நிறுத்தி வைப்பதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்தார். மேலும், ஈரானின் கண்டிஷன்கள் நல்ல தொடக்கம் எனவும் குறிப்பிட்டார். இரு நாடுகளுக்கும் இடையே பேச்சுவார்த்தை ஆரம்பிக்கவுள்ள சூழலில், கச்சா எண்ணெய் விலை தடாலடியாகச் சரிந்தது.
போர் நிறுத்த அறிவிப்பு வந்தவுடனேயே கச்சா எண்ணெய் விலை 15% வரை சரிந்தது. 100 டாலருக்கு கீழ் போனது. இதனால் டாலர் மதிப்பு சரிந்த நிலையில், சர்வதேச சந்தையில் தங்கம் விலை ஒரேயடியாக உயர்ந்தது. போர் நிறுத்த அறிவிப்பு வந்தவுடனேயே சர்வதேச மார்கெட்டில் தங்கம் விலை 2%க்கு மேல் அதிகரித்து, 4800 டாலரை தொட்டது. இந்தியாவிலும் அதுவே எதிரொலித்துள்ளது.
இன்றைய தங்கம் விலை
இன்றைய தினம் தங்கம் விலை மிகப் பெரிய அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது. சென்னையில் இன்று தங்கம் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது. ஆபரண தங்கம் விலை சவரனுக்கு ரூ.2720 உயர்ந்து, ரூ.1,13,600க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆபரண தங்கம் விலை கிராமுக்கு ரூ.340 உயர்ந்து, ரூ.14,200க்கு விற்பனையாகிறது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.10 உயர்ந்து, ரூ.295க்கு விற்பனையாகிறது.
தங்கம் விலை நிலவரம்
08.04.2026 - ஒரு சவரன் ரூ.1,13,600 (இன்று)
07.04.2026 - ஒரு சவரன் ரூ.1,10,880 (நேற்று)
06.04.2026 - ஒரு சவரன் ரூ.1,11,920 (பிற்பகல்)
06.04.2026 - ஒரு சவரன் ரூ.1,10,480 (காலை)
05.04.2026 - ஒரு சவரன் ரூ.1,11,600 (நேற்று)
04.04.2026 - ஒரு சவரன் ரூ.1,11,600
03.04.2026 - ஒரு சவரன் ரூ.1,10,800
02.04.2026 - ஒரு சவரன் ரூ.1,10,000 (மாலை)
02.04.2026 - ஒரு சவரன் ரூ.1,11,600 (காலை)
01.04.2026 - ஒரு சவரன் ரூ.1,12,400 (நேற்று)












Click it and Unblock the Notifications