Dubai Gold: துபாயில் தங்கம் விலை ஏன் குறைவு? இந்தியாவுக்கு எத்தனை கிராம் கொண்டு வரலாம்?
டெல்லி: துபாயில் தங்கத்தின் விலை நம் இந்தியாவை காட்டிலும் குறைவாக உள்ளது. இதனால் தங்கம் வாங்கும் விலையில் 20 சதவீதம் வரை நமக்கு பணம் மிச்சமாகும். எல்லாம் சரி, துபாயில் இருந்து எவ்வளவு தங்கத்தை கொண்டு வரலாம் என்பதை தெரிந்து கொள்ளலாம்.

பொதுவாக வெளிநாடுகளுக்குச் சென்றுவிட்டு இந்தியா வருவோர் அதிகபடியான சாக்லேட்டுகள், வாசனை திரவியம், ஃபாரீன் மது உள்ளிட்டவைகளை கொண்டு வருவது வழக்கம்.
அதிலும் துபாய்க்குச் சென்றவர் என்றால் அவர் தனது குடும்பத்தினருக்கு தங்கத்தை வாங்கி வருவார். ஏனென்றால் இந்தியாவை காட்டிலும் துபாயில் தங்கம் விலை குறைவான விலைக்கு விற்கப்படுகிறது.
இந்தியாவில் 24 காரட் தங்கம் விலை ஒரு கிராம் ரூ 12,569-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆனால் அதே 24 காரட் தங்கம் துபாயில் ஒரு கிராம் ரூ 11,800-க்கு விற்கப்படுகிறது.
துபாயில் தங்கம் விலை உலக விலைக்கு மிக அருகில் இருக்கும். இதனால் பொதுவாக இந்தியாவைவிட சுமார் 10 சதவீதம் வரை குறைவான விலைக்கு தங்கம் விலை கிடைக்கிறது.
மேலும் துபாயில் தங்க நகை செய்வதற்கான மேக்கிங் சார்ஜ் மிகவும் குறையும். இந்தியாவில் 8 சதவீதம் முதல் 25 சதவீதம் வரை மேக்கிங் சார்ஜ் என்றால் துபாயில் 2 சதவீதம் முதல் 8 சதவீதம் வரை மேக்கிங் சார்ஜ், அதாவது செய்கூலி வசூலிக்கப்படுகிறது.
இதனால் தங்கத்தின் விலையில் 20 சதவீதம் வரை சேமிக்க வாய்ப்பிருக்கிறது. துபாயில் சுத்தமான தங்கம் கிடைக்கும். துபாயில் இருந்து ஆண்கள் 20 கிராம் தங்கம் வரை வரி இல்லாமல் கொண்டு வரலாம். அது போல் பெண்கள், 15 வயதுக்குள்பட்ட குழந்தைகள் 40 கிராம் தங்கம் வரை கொண்டு வரலாம்.
இதை மீறி கொண்டு வந்தால் சுங்க வரி செலுத்த வேண்டும். ஒருவர் துபாயில் குறைந்தது 6 மாதங்கள் வரை தங்கியிருந்தால் அதிகபட்சம் 1 கிலோ வரை தங்கத்தை இந்தியாவுக்கு கொண்டு வரலாம். ஆனால் இதற்காக வரி செலுத்த வேண்டியது கட்டாயம்.
இந்தியா- ஐக்கிய அரபு எமிரேட்ஸ் இடையே தங்க இறக்குமதி விதிமுறைகள் மேலும் கடுமையாக்கப்பட்டன. துபாயில் இருந்து கொண்டு வரும் தங்கத்திற்கு ரசீது வைத்திருப்பது கட்டாயம். தங்க நாணயம் அல்லது தங்கக் கட்டிகளை வாங்கிக் கொண்டு வருவதை தவிர்க்கலாம் என்கிறார்கள்.
அதற்கு பதிலாக நகையாக வாங்கி கொடுக்கலாம். ஒரு வேளை நிர்ணயித்த தங்கத்தின் அளவை விட அதிகம் கொண்டு வந்தால் இந்திய விமான நிலையத்தில் உள்ள சுங்கத் துறையினரிடம் தெரிவிக்க வேண்டியது கட்டாயம் ஆகும்.












Click it and Unblock the Notifications