சரியும் தங்கம்.. அதிரும் கச்சா எண்ணெய்.. மொத்த மார்க்கெட்டையும் ஒரே ஆளாக கதறவிட்ட டிரம்ப்.. எப்படி?
சென்னை: தங்க மார்க்கெட்.. கச்சா எண்ணெய் மார்க்கெட் என்று இரண்டையும் ஒரு சேர கதறவிட்டுள்ளார் அமெரிக்க அதிபர் டிரம்ப். ஒரே ஒரு அறிவிப்பில் இரண்டு பிரிவும் ஆடிப்போய் உள்ளது.. அப்படி என்ன சொன்னார் டிரம்ப்?
மத்திய கிழக்கில் நிலவும் போர் மேகங்கள் உலகப் பொருளாதாரத்தை ஒரு உலுக்கு உலுக்கியுள்ளன. அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையேயான மோதல் முற்றியுள்ள நிலையில், திங்களன்று உலகச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை ராக்கெட் வேகத்தில் உயர்ந்தது. அதேநேரம், வழக்கத்திற்கு மாறாகத் தங்கத்தின் விலை சரிவைக் கண்டு முதலீட்டாளர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

இந்த உலகளாவிய மல்லுக்கட்டலால் சாமானிய மக்களின் பாக்கெட்டில் என்ன மாற்றம் நிகழும்? ஒரு அலசல்...
கச்சா எண்ணெய்: விஸ்வரூபம் எடுக்கும் விலை!
திங்கள் காலை வர்த்தகத்தில் கச்சா எண்ணெய் விலை 2% க்கும் அதிகமாக எகிறியது. போர் காரணமாக எண்ணெய் விநியோகம் அடியோடு முடங்கும் என்கிற அச்சமே இதற்கு முக்கியக் காரணம்.
விலை நிலவரம்: பிரெண்ட் கச்சா எண்ணெய் (Brent crude) பேரல் ஒன்றுக்கு 111.43 டாலராகவும், அமெரிக்காவின் (WTI) கச்சா எண்ணெய் 114.57 டாலராகவும் உயர்ந்தது.
பயம் ஏன்?: உலகின் பெரும்பாலான எண்ணெய் போக்குவரத்து நடக்கும் 'ஹார்முஸ் ஜலசந்தி' (Strait of Hormuz) பகுதி போரினால் முடக்கப்பட்டால், உலக நாடுகளுக்கு எண்ணெய் கிடைப்பதே குதிரைக்கொம்பாகிவிடும்.
டிரம்ப் எச்சரிக்கை: ஈரான் தொடர்ந்து இப்பாதையைத் தடுத்தால், அந்நாட்டின் மின் உற்பத்தி நிலையங்கள் மற்றும் பாலங்கள் போன்ற கட்டமைப்புகளை அமெரிக்கா குறிவைக்கும் என அதிபர் டொனால்ட் டிரம்ப் எச்சரித்துள்ளார். இதனால் எண்ணெய் தட்டுப்பாடு ஏற்படும் என்ற பீதியில் சந்தை தத்தளிக்கிறது.
தங்கம்: ஏன் ஜொலிக்கவில்லை?
பொதுவாகப் போர் அல்லது நெருக்கடி காலங்களில் முதலீட்டாளர்கள் தங்கத்தை ஒரு பாதுகாப்பான புகலிடமாகக் கருதுவார்கள். ஆனால், இந்த முறை தங்கம் சுமார் 1% சரிந்து அவுன்ஸ் ஒன்றுக்கு 4,630 டாலர் என்ற நிலைக்கு வந்துள்ளது. இது ஏன்?
பணவீக்கப் பேய்: எண்ணெய் விலை உயர்ந்தால் போக்குவரத்து முதல் உற்பத்தி வரை அனைத்தும் விலை ஏறும். இது பணவீக்கத்தைக் குறைக்கும் முயற்சியில் இருக்கும் அரசுகளுக்குப் பின்னடைவை ஏற்படுத்தும். இதனால் வட்டி விகிதங்கள் குறைய வாய்ப்பில்லை என்பதால், தங்கம் மீதான ஈர்ப்பு குறைந்துள்ளது.
எண்ணெய் விலை தாறுமாறாக உயருகிறது
வலுவான டாலர்: சர்வதேச சந்தையில் அமெரிக்க டாலர் வலுவடைந்து வருவதால், மற்ற நாட்டுப் பணத்தில் தங்கம் வாங்குவோருக்கு அதன் விலை அதிகமாகத் தெரிகிறது. இதனால் தேவை குறைந்து விலை சரிகிறது.
பணத் தேவை: பங்குச்சந்தையில் நஷ்டத்தைச் சந்திக்கும் முதலீட்டாளர்கள், அதைச் சமாளிக்கத் கையில் இருக்கும் தங்கத்தை விற்றுப் பணமாக்கி வருகின்றனர்.
சுருக்கமாகச் சொன்னால், உலகப் பொருளாதாரம் ஒரு 'இரட்டைத் தாக்குதலை' எதிர்கொள்கிறது. ஒருபுறம் எரிசக்தி தட்டுப்பாடு, மறுபுறம் விண்ணைத் தொடும் விலைவாசி. கச்சா எண்ணெய் நிறுவனங்கள் லாபம் ஈட்டினாலும், சாமானிய மக்களுக்கு இது வாழ்க்கைச் செலவு அதிகரிப்பதையே குறிக்கிறது. மத்திய கிழக்கு நாடுகளின் இந்த மோதல் போக்கு விரைவில் தணியாவிட்டால், நடுத்தர வர்க்கத்தின் பட்ஜெட் நிலைகுலைவது உறுதி!












Click it and Unblock the Notifications