Gold rate Today: மீண்டும் ஜெட் வேகமெடுக்கும் தங்கம் விலை.. கிடுகிடுவென உயர்வு.. இன்றைய ரேட் என்ன?
சென்னை: தங்கம் விலை வரலாற்றில் இதுவரை இல்லாத அளவாக ஒரு சவரன் ரூ.66,480 ஐ தொட்டது. இதனால் கவலையடைந்த நகைப்பிரியர்களுக்கு ஆறுதல் தரும் வகையில் 4 நாட்களாக தங்கம் விலை குறைந்து வந்தது. இந்நிலையில் நேற்று மீண்டும் தங்கம் விலை எகிறியது. இதனால் இன்றாவது விலை குறையுமா என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இன்றும் தங்கம் விலை அதிகரித்துள்ளது. இன்று மட்டும் சவரனுக்கு ரூ.320 உயர்ந்துள்ளது.
தங்கம் விலையை பொறுத்தவரை சர்வதேச சந்தை நிலவரம் உள்ளிட்ட பல்வேறு காரணிகளின் அடிப்படையில் நிர்ணயிக்கப்படுகிறது. நம் நாட்டை பொறுத்தவரை தங்கத்தை முதலீடாக மட்டும் இன்றி ஆபரணங்கள் செய்யவும் மக்கள் அதிக அளவு வாங்குகிறார்கள். இதனால், ஏழை பணக்காரர்கள் பாகுபாடு இன்றி தங்கம் வாங்குவதை பார்க்க முடிகிறது.

எகிறும் தங்கம் விலை
தங்கம் என்பது இந்திய மக்கள் பயன்படுத்தும் ஒரு உலோகமாக இருக்கிறது. இதனால் தங்கம் விலை உயர்வு என்பது மக்களை நேரடியாக பாதிக்க கூடிய ஒன்றாக உள்ளது. தங்கம் விலை இந்த ஆண்டு துவக்கத்தில் இருந்தே அதிரடியாக உயர்ந்து வருகிறது. இதனால் சாமானிய மக்கள் தங்கம் வாங்குவது இனி கனவில் தான் முடியுமோ என நினைக்கும் அளவுக்கு விண்ணை முட்டும் அளவுக்கு விலை உயர்ந்து வருகிறது.
அதிலும் மார்ச் மாத துவக்கத்தில் தங்கம் விலை ஜெட் வேகத்தில் ஏறி சென்றது. இடையிடையே விலை சற்று குறைந்தாலும் கூட பெரும்பாலான நாட்களில் விலை அதிகரித்தே வந்தது. இதனால் தங்கம் விலை வரலாறு காணாத புதிய உச்சத்தை தொட்டது. அதாவது ஒரு சவரன் தங்கம் விலை ரூ.66,480 ஐ தொட்டது. இதற்கிடையே கடந் த 21 ஆம் தேதியில் இருந்து தங்கம் விலை சற்று குறைந்தது.
இன்றைய விலை என்ன?
தொடர்ந்து தங்கம் விலை குறைந்து வந்ததால் நகைப் பிரியர்கள் உற்சாகம் அடைந்தனர். ஆனால் நேற்று தங்கம் விலை கிராமுக்கு 10 ரூபாய் உயர்ந்தது. சவரனுகு ரூ.80 அதிகரித்து ஒரு கிராம் தங்கம் விலை ரூ.8,195 ஆகவும், ஒரு சவரன் ரூ.65,560 ஆகவும் உயர்ந்தது. இந்த நிலையில், தான் இன்று தங்கம் விலை உயருமா? அல்லது முந்தைய நாட்களை போல இறங்குமுகத்தில் செல்லுமா? என்ற எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இன்றும் அதிகரித்துள்ளது.
நேற்று ஒரு கிராம் தங்கம் ரூ.8,195க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், இன்று ரூபாய் 40 உயர்ந்து ரூ.8,235க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதேபோன்று நேற்று ஒரு சவரன் தங்கம் ரூ.65,560க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில் இன்று சவரனுக்கு ரூ.320 உயர்ந்து ரூ.65,880க்கு விற்பனை செய்யப்படுகிறது. 4 நாட்களாக தொடர்ந்து விலை குறைந்து வந்த நிலையில், தற்போது இரண்டு நாட்களாக மீண்டும் தங்கம் விலை ஏறத்தொடங்கியிருப்பதால் நகை பிரியர்கள் கலக்கம் அடைந்துள்ளனர்.
டிரம்பின் பரஸ்பர வரி விதிப்பு
தங்கம் விலை வரும் ஏப்ரல் 2 ஆம் தேதிக்கு பிறகு தாறுமாறாக உயரக்கூடும் என்று முதலீட்டாளர்கள் மற்றும் பொருளாதார வல்லுனர்கள் சொல்லும் கருத்தாக உள்ளது. அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், பல்வேறு நாடுகள் மீதான பரஸ்பர வரி விதிப்பை வரும் ஏப்ரல் 2 ஆம் தேதி முதல் அமல்படுத்த திட்டமிட்டு இருக்கிறார். இந்த வரி விதிப்பு காரணமாக சர்வதேச அளவில் நிச்சயமற்றதன்மை அதிகரிக்கும் என்றும் இதனால் தங்கம் மீதான முதலீடு அதிகரிக்கும் என்பதால் விலை உயர வாய்ப்பு இருப்பதாக சந்தை வல்லுனர்கள் கூறுகிறார்கள்
கடந்த சில நாட்களின் தங்க விலை நிலவரம்:
27.03.2025(இன்று): ஒரு சவரன் ரூ.65,880
26.03.2025: ஒரு சவரன் ரூ. 65,560
25.03.2025: ஒரு சவரன் ரூ.65,480
24.03.2025: ஒரு சவரன் ரூ.65,720
23.03.2025: ஒரு சவரன் ரூ.65,840
22.03.2025: ஒரு சவரன் ரூ.65,840
21.03.2025: ஒரு சவரன் ரூ.66,160
20.03.2025: ஒரு சவரன் ரூ.66,480
19.03.2025: ஒரு சவரன் ரூ.66,320
18.03.2025: ஒரு சவரன் ரூ.66,000
17.03.2025: ஒரு சவரன் ரூ.65,680
16.03.2025: ஒரு சவரன் ரூ.65,760
15.03.2025: ஒரு சவரன் ரூ.65,760.












Click it and Unblock the Notifications