தவிக்க வைக்குதே தங்கம்.. ஒரு லட்சம் இல்லாம நகைக்கடைல கால் வைக்க முடியாது! நம்பலைனாலும் அதான் நெசம்!
சென்னை: இந்த ஆண்டு முழுவதுமே தங்கத்தின் விலை ஏற்றத்தை கண்டு வருகிறது. இதுவரை இல்லாத வகையில் இன்று 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை புதிய உச்சத்தை தொட்டுள்ளது. தற்போதைய சூழலில் ஒரு கிராம் 11 ஆயிரத்தை கடந்து சந்தையில் விற்பனையாகிறது. சவரனுக்கு 880 உயர்ந்து 88,480 ரூபாய்க்கு விற்பனையாகிறது. அதே நேரத்தில் நகை கடைகளில் தங்கத்தின் விலை நிலவரம் எப்படி இருக்கிறது என்று பார்க்கலாம்.. காரணம் தங்கம் நகைகளாக விற்கப்படும் போது செய்கூலி, சேதாரம், ஜிஎஸ்டி ஆகியவை சேர்த்து விற்கப்படுவது குறிப்பிடத்தக்கது.
தங்கத்தின் விலை உலக பொருளாதார சூழல் மற்றும் நாணய நிலவரத்தின் அடிப்படையில் நிர்ணயிக்கப்படுகிறது. அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு, அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு விதிக்கப்பட்ட வரி, மற்றும் உக்ரைன்-ரஷ்யா போரின் தாக்கம் போன்ற காரணிகள் தங்க விலையை பாதிக்கின்றன.
தற்போதைய சூழலில், அமெரிக்க மத்திய வங்கியின் வட்டி விகித நடவடிக்கைகள், உலக சந்தைகளில் தங்கத்தின் தேவை மற்றும் பன்னாட்டு நிலவரங்கள் ஆகியவை தங்கத்தின் விலையில் நேரடி தாக்கத்தை ஏற்படுத்துகின்றன.

தங்கம் விலை இன்று
இதனால், இந்த ஆண்டு முழுவதுமே தங்கத்தின் விலை ஏற்றத்தை கண்டு வருகிறது. வழக்கம் போல் இன்றும் தங்கத்தின் விலை புதிய உச்சத்தை தொட்டுள்ளது. 22 காரட் தங்க விலை கிராமுக்கு ரூ.110 குறைந்தாலும், ஒரு கிராமுக்கு ரூ.11,060 ஆக விற்பனை நடைபெறுகிறது. சவரனுக்கு 880 உயர்ந்து 88,480 ரூபாய்க்கு விற்பனையாகிறது. இதனுடன், வெள்ளி விலை இன்று கிராம் ஒன்றுக்கு ரூ.1 உயர்ந்து, ஒரு கிராம் வெள்ளி ரூ.166க்கு விற்பனை ஆகிறது. கட்டி வெள்ளி கிலோவுக்கு ரூ.1,000 குறைந்து ரூ.1,66,000க்கு விற்பனை செய்யப்படுகிறது.2025 ஜனவரி மாதத்தில் ஒரு சவரன் தங்கம் சுமார் ரூ.52,000 - ரூ.57,000 வரை இருந்தது.
1 சவரன் தங்கம் விலை
ஆனால் கடந்த 9 மாதங்களில் சர்வதேச சந்தையில் தங்கத்திற்கு ஏற்பட்ட டிமாண்ட், அமெரிக்க பொருளாதார மந்தநிலை, டாலர் மதிப்பில் ஏற்பட்ட குறைவு போன்ற காரணங்களால் தங்க விலை பல மடங்கு அதிகரித்தது. தற்போது (செப்டம்பர் 2025) ஒரு சவரன் தங்கம் சுமார் ரூ.88,000 - ரூ.89,000 வரை விற்கப்படுகிறது. இது கடந்த 10 ஆண்டுகளில் மிக அதிகமான விலை உயர்வு என்பது குறிப்பிடத்தக்கது. சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை தொடர்ந்து இவ்விதமாக உயர்ந்தால், நிபுணர்களின் கணிப்பின் படி 2026 நடுப்பகுதி அல்லது 2027 ஆரம்பத்தில் ஒரு சவரன் தங்கம் ரூ.1 லட்சம் என்ற மைல்கல்லை எட்டும் வாய்ப்பு அதிகம் உள்ளது.
8 கிராம் தங்க விலை
அதே நேரத்தில் தற்போது தங்க கட்டிகள் ஆகவோ அல்லது நாணயங்களாக வாங்கினால் மட்டும்தான் 8 கிராம் தங்கத்தை 88,480 ரூபாய்க்கு வாங்க முடியும். அதே நேரத்தில் நகை கடைகளில் நகைகள் வாங்கினால் அதன் விலை ஒரு லட்சத்தை தாண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. காரணம் தங்க நகைகள் வாங்கும் போது செய்கூலி, சேதாரம், ஜிஎஸ்டி ஆகியவை வசூலிக்கப்படுகிறது. உதாரணத்திற்கு ஆடம்பர நகைகள் வாங்கினால் 10 முதல் 20 சதவீத சேதாரமும், மோதிரம், தங்க சங்கிலி உள்ளிட்ட சாதாரண நகைகள் வாங்கினால் ஐந்து முதல் 10 சதவீதம் சேதாரம் விதிக்கப்படும்.
தங்க நகைகள்
எனவே சராசரியாக 10% சேதாரம் வசூலிக்கப்படுகிறது என்றால் தங்கத்தின் விலை ஒரு சவரனுக்கு சேதாரத்தோடு சேர்த்து 96 ஆயிரத்து 800 ரூபாய்க்கு மேல் வரும். இதனுடன் ஐயாயிரம் ரூபாய் செய்கூலி, 3 சதவீத ஜிஎஸ்டி ஆகியவற்றை சேர்க்கும்போது ஒரு லட்சத்தை தாண்டி விற்பனையாகும் என்பது குறிப்பிடத்தக்கது. நகைகளுக்கு ஏற்ப செய்கூலி, சேதாரம் மாறுபடும் என்பதால் குறைந்தபட்சம் ஒரு லட்சத்தை தாண்டினால் தான் ஒரு சவரன் தங்க நகைகளை வாங்க முடியும் என்கின்றனர் வியாபாரிகள்.












Click it and Unblock the Notifications