உலகின் தங்க தலைநகரம் எது.. துபாயோ, இந்தியாவோ கிடையாது.. 1886ல் துவங்கிய வேட்டை!
ஒரு நகரம்.. அதன் மண்ணுக்கடியில் கிடந்த ஒரு உலோகம்.. அந்த உலோகம் உலக பொருளாதாரத்தின் போக்கையே மாற்றியது. இது தான் தங்கத்தின் உலகளாவிய தலைநகரகமாக விளங்குகிறது. பாலைவனத்தைப் போன்ற ஒரு பகுதியை உலக நிதி மையமாக மாற்றியது கதை தான் இது.
தங்கம் என்பது வெறும் ஆபரணம் அல்ல. பல நூற்றாண்டுகளாக அரசு சாம்ராஜ்ஜியங்கள், உலக நாடுகள், மக்களின் முக்கியமான செல்வமாக உள்ளது. பேரரசுகளின் எழுச்சி-வீழ்ச்சியையும் தீர்மானித்த சக்தியாக இருந்து வருகிறது. இப்படி தலைமுறைகள் கடந்தும் பாதுகாக்கப்படும் தங்கம், உலகின் ஒரு நகரத்தை அடிப்படையாக கொண்டு என்றால் உங்களால் நம்ப முடியுமா?

உலகின் தங்க தலைநகரம் எது?
உலகின் 'Gold Capital of the World' என்று அழைக்கப்படும் நகரம் தென்னாப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பர்க்.
இந்த நகரத்தின் கீழ் பரந்து விரிந்துள்ள Witwatersrand Basin என்ற பகுதி, பூமியில் இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட மிகப்பெரிய தங்க வளங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. உள்ளூர் மக்களால் 'eGoli' அல்லது 'தங்கத்தின் நகரம்' என்று அழைக்கப்படும் ஜோகன்னஸ்பர்க் என்ற பகுதி உலகின் முக்கிய வர்த்தக பகுதியாக உலக வரைபடத்தில் இடம்பிடித்தது.
1886-ல் நடந்த ஒரு விஷயம்
1886-ஆம் ஆண்டு ஜார்ஜ் ஹாரிசன் என்ற ஆய்வாளர், Langlaagte Farm பகுதியில் வளமான தங்கப் படுகையை கண்டுபிடித்தார். அந்த ஒரு கண்டுபிடிப்பே உலகின் மிகப்பெரிய தங்க வேட்டைக்கு வழிவகுத்தது.
இது வரை சாதாரண குடியிருப்பு பகுதியாக இருந்த இடம், திடீரென ஆயிரக்கணக்கான மக்களை ஈர்த்தது. உலகின் பல பகுதிகளில் இருந்து முதலீட்டாளர்கள், சுரங்கத் தொழிலாளர்கள் மற்றும் வணிகர்கள் அங்கு குவிந்தனர்.
10 ஆண்டுகளில் உருவான பொருளாதார அதிசயம்
இப்பகுதியில் தங்கம் கண்டுபிடிக்கப்பட்ட பத்து ஆண்டுகளுக்குள் ஜோகன்னஸ்பர்க், தென்னாப்பிரிக்காவின் மிகப்பெரிய நகரமாக வளர்ந்தது. வெறிச்சோடிய நிலப்பரப்பாக இருந்த பகுதி, சர்வதேச நிதி மற்றும் வர்த்தக மையமாக மாறியது.
1886-ஆம் ஆண்டிலிருந்து மனிதர்கள் இதுவரை தோண்டி எடுத்த ஒட்டுமொத்த தங்கத்தில் சுமார் 40 சதவீதம் ஜோகன்னஸ்பர்க் மற்றும் அதைச் சுற்றியுள்ள Witwatersrand பகுதியில் இருந்து வந்துள்ளது. குறிப்பாக 1970-களில் தென்னாப்பிரிக்கா மட்டும் ஒரே ஆண்டில் 1,000 டன்னுக்கும் அதிகமான தங்கத்தை உற்பத்தி செய்து உலகையே ஆச்சரியப்படுத்தியது.
காலப்போக்கில் சுரங்கத் தொழில்நுட்பம் மாறியுள்ளதுடன், சில தங்கச் சுரங்கங்களின் உற்பத்தியும் குறைந்துள்ளது. இருந்தாலும் ஜோகன்னஸ்பர்க் என்ற பெயருடன் தங்கத்தின் அடையாளம் இன்னும் பிரிக்க முடியாத வகையில் இணைந்தே உள்ளது.












Click it and Unblock the Notifications