6 6 6 ரூல்ஸ்.. பயனுள்ள வாக்கிங் விதிகள்.. வாரம் 60 நிமிடம் நடைபயிற்சி போதுமே.. ஆரோக்கியம் நீளும்
சென்னை: சிறப்பு பயிற்சியாளர்கள் இல்லாமல், கட்டணமும் இல்லாமல், பக்கவிளைவுகளும் இல்லாமல், எச்சரிக்கைக் குறிப்புகளும் இல்லாமல், ஆரோக்கியமாக இருப்பது எப்படி தெரியுமா? அதுதான் நீண்ட காலம் வாழ்வை தரக்கூடிய "நடைபயிற்சி"யாகும்.
மிக எளிமையான நடைபயிற்சியை யார் வேண்டுமானாலும் செய்யலாம். உடல்பாதிப்பு உள்ளவர்கள், ஆபரேஷன் செய்தவர்கள், வயதானவர்கள், என யார் வேண்டுமானாலும் நடக்கலாம். இதற்கென பிரத்யேகமான இடங்கள் தேவையில்லை.. சாலைகளில், தெருக்களில், மொட்டை மாடிகளில் என எங்குவேண்டுமானாலும், கை கால்களை வீசி நாம் நடக்கலாம்.

தினந்தோறும் வாக்கிங் செய்வதால், உடலில் இலகு தன்மை கிடைக்கிறது.. சமீபத்தில் போலந்தில் உள்ள லாட்ஸ் மருத்துவ பல்கலைக்கழகம் சுமார் 2,27,000 பேரின் தரவுகளை வைத்து ஆய்வு ஒன்றை நடத்தியிருந்தது.
ஆய்வு அறிக்கை: ஒருவர் ஒரு நாளைக்கு குறைந்தபட்ச 2,337 அடிகள் நடந்தால், இதய நோய் சம்பந்தமான எந்த பிரச்சனையும் வராது என்று அந்த ஆய்வில் சொல்லப்பட்டிருந்தது. அதுமட்டுமல்ல, இதய ஆரோக்கியம், மனச்சோர்வு, சோர்வை நீக்குதல், மனநிலையை மேம்படுத்துதல், மூட்டுகளில் குறைந்த அழுத்தத்தை உருவாக்குதல், எடை அதிகரித்தலை தடுத்தல், புற்றுநோய் ஆபத்தை குறைத்தல் இப்படி பல நன்மைகளை நடைபயிற்சி தருகிறதாம்..
ஒரு நாளைக்கு கிட்டத்தட்ட 6,000 முதல் 10,000 அடிகள் நடந்தாலே உடல் ஆரோக்கியத்துடன் இருக்கலாம் என்றும், தினமும் 4,000 அடிகள் நடப்பவர்கள் மரணம் முதல் இதய நோய் பாதிப்பு வரை தள்ளி போடலாமாம் என்றும் அந்த ஆய்வின் முடிவுகள் வெளியாகியிருந்தன.
ஆய்வு முடிவுகள்: அதாவது, இதய நோய் பாதிப்பில் இருந்து பாதுகாக்க தினமும் 2,337 அடிகள், அதாவது 25 நிமிடங்கள் நடைபயிற்சி மேற்கொள்ள வேண்டுமாம். இளம் வயதில் ஏற்படும் மரணத்தைத் தடுக்க தினமும் 3,967 அடிகள் அதாவது 40 நிமிடங்கள் நடக்க வேண்டுமாம். ஒவ்வொரு 1,000 அடிகள் அதிகரிப்பிற்கும் 15 சதவீதம் அளவுக்கு அபாயம் குறைகிறதாம்.
60 வயதுக்கு மேற்பட்டவர்கள் 6,000 முதல் 10,000 அடிகள் நடக்கும்போது, அதே வயதுடைய நடைபயிற்சி மேற்கொள்ளாதவர்களுடன் ஒப்பிடுகையில் 42 சதவீதம் அபாயம் குறைவாக உள்ளதாக அந்த ஆய்வு முடிவுகள் வெளிப்படுத்தியிருக்கின்றன.
பிரபல விதி: இப்போதுகூட, நடைபயிற்சியில் "6-6-6 விதி" மிகவும் பிரபலமாகி வருகிறது... அதாவது, காலை 6 மணிக்கும், சாயங்காலம் 6 மணிக்கு 60 நிமிட நடைபயிற்சி செய்ய வேண்டுமாம்.. இதில் 6 நிமிட வார்ம்-அப் மற்றும் 6 நிமிட கூல்-டவுன் அடங்கும்... இதற்குதான் 6-6-6 ரூல் என்றகிறார்கள்.. இந்த புதிய விதியானது, உடற்தகுதியை பராமரிப்பதுடன், நீண்ட காலத்திற்கு நடைபயிற்சி மேற்கொள்ளவும் உதவுகிறதாம்.
எந்த நேரத்திலும் நடைப்பயிற்சி செய்யலாம் என்றாலும், காலையில் 6 மணிக்கு வாக்கிங் செய்யும்போது, அன்றைய நாள் முழுவதும் ஆற்றலுடனும், புத்துணர்வுடனும் இருக்கச்செய்கிறது. மாலையில் 6 மணிக்கு வாக்கிங் செய்வது, அன்றைய தினம் ஏற்பட்ட வேலை அழுத்தத்தை தணித்து, உடலை இலகுவாக மாற்றுகிறது. இறுதியாக, 6 நிமிட வார்ம்-அப் மற்றும் கூல்-டவுன் செய்வது, உடலை காயத்திலிருந்து பாதுகாத்து மீட்க உதவுகிறதாம்.
பலன்கள்: இப்படி 60 நிமிடம் வாக்கிங் செல்வதனால், உடலில் கொழுப்பு கரைகிறது.. அதிலும் நன்றாக சுவாசித்து வாக்கிங் சென்றால், நுரையீரல் வலுப்பெறும். அதே போல வாரத்திற்கு 60 நிமிடம் நடைபயிற்சி சென்றால் தசைகள் வலுப்பெறும்.. எனவே, நடைபயிற்சி மட்டுமே செய்வதாக இருந்தால் வாரத்திற்கு 5 முறை 60 நிமிடம் நடைபயிற்சி செய்தால் போதும்.. இதனால் உங்கள் எடையும் கணிசமாக குறைவதாக ஆய்வுகள் கூறுகின்றன.












Click it and Unblock the Notifications