அனலைக் கக்கும் அக்னி நட்சத்திரம்..நீர் சத்து குறைபாடு..இந்த விசயங்களை செய்ய மறக்காதீங்க
சென்னை: அக்னி நட்சத்திர வெயில் அனலை கக்கி வருகிறது. பல ஊர்களில் 100 டிகிரி பாரன்ட்ஹீட்டை தாண்டி பதிவாகி வருகிறது. வெளியே தலைகாட்டவே முடியலயே வெப்ப மயக்கமாக இருக்கே என்று பலரும் உணர்கின்றனர். வெயில் காலத்தில் பலரையும் பாதிக்கும் நீர்சத்து குறைபாடு பற்றியும் அதிலிருந்து தப்பிக்க என்ன செய்யலாம் என்ன செய்யக்கூடாது என்றும் மருத்துவர்கள் கூறியுள்ள ஆலோசனையை பார்க்கலாம்.
தமிழ்நாட்டில் கடந்த 4 ஆம் தேதி அக்னி நட்சத்திரம் எனப்படும் கத்திரி வெயில் தொடங்கிய நிலையில், மோக்கா புயல் காரணமாக பரவலாக மழை பெய்தது. இதனால் சில இடங்களில் கோடை வெயிலின் தாக்கம் சற்று குறைவாக இருந்தது.

இந்நிலையில், தமிழ்நாடு, புதுச்சேரியில் நேற்று 18 பகுதிகளில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டைத் தாண்டி அதிகபட்ச வெப்பநிலை பதிவானது. கிருஷ்ணகிரி, வேலூர் பகுதிகளில் உச்சபட்சமாக, 108 டிகிரி அளவுக்கு வெப்பம் பதிவானது. இதன் காரணமாக, கிருஷ்ணகிரி நகரில் பகல் நேரத்தில் மக்கள் நடமாட்டம் குறைந்து காணப்பட்டது. திருத்தணியில் 106 டிகிரி ஃபாரன்ஹீட்டும், சென்னை மீனம்பாக்கம், நுங்கம்பாக்கம், கரூர் பரமத்தி பகுதிகளில் 105 டிகிரியும், பரங்கிப்பேட்டையில் 104 டிகிரியும் வெப்பநிலை பதிவானது.
இந்நிலையில் தமிழ்நாட்டில் இன்று அதிகபட்ச வெப்பநிலை இயல்பைவிட இரண்டு முதல் மூன்று டிகிரி செல்சியஸ் வரை அதிகரித்து காணப்படும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அக்னி நட்சத்திரத்தின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், அன்றாட பணிகளுக்கு செல்வதே கடும் சிரமமாக மாறி உள்ளதாக பொதுமக்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.
வெயில் கடுமையாக வாட்டி வதைக்கும் நிலையில், வெளியில் எங்கும் செல்ல முடியவில்லை என்றும் அன்றாட பணிகள் எதும் செய்ய முடியவில்லை என்றும் வெப்பத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்கள் தெரிவிக்கின்றனர். வெப்பத்தின் தாக்கம் அதிகரித்துள்ளதால் நீர் சத்து குறைபாடு ஏற்படும் என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

நீர் சத்து குறைபாடு ஏற்பட்டுள்ளது என்பதற்கான அறிகுறிகளாக அதிக தாகமும் தொண்டையும் வறண்டு போகும்.
தலை வலி, சிறுநீர் மஞ்சளாக போவது, சிறுநீர் கழிப்பதில் குறைபாடு, சரும வறட்சி ஏற்படும் இதனால் வெடிப்புகள் ஏற்படும். நீர்சத்து குறைபாடு ஏற்பட்டால் அதிகமாக மூச்சு வாங்கும், சிலருக்கு மயக்கமும் வரலாம். சிலருக்கு எரிச்சல் ஏற்படும்.
உடலில் இருந்து நீர் வெளிவருவது சாதாரணமான விஷயம் தான். நம் உடலில் இருந்து வியர்வை, சிறுநீர் கழிப்பது, எச்சில் துப்புவது, கண்களில் இருந்து கண்ணீர், இவ்வகையில் நீர் வெளியேறுகிறது. சிலர் நீர் குறைபாட்டை சமப்படுத்த அடிக்கடி நீர் அருந்துவது, நீர் அதிகம் உள்ள உணவை சாப்பிடுவது, எனர்ஜி ட்ரிங்க் குடிப்பது போன்ற பழக்கத்தை செய்வார்கள். இப்படி உடலில் நீர் வறட்சி ஏற்பட்டு அதற்கேற்ப நீங்க தண்ணீர் அல்லது உணவு எடுத்துக்கொள்ள வில்லை என்றால் உடலில் நீர் வறட்சி அதிகமாக ஏற்பட்டு விடும்.
வயதானவர்களுக்கும், குழந்தைகளுக்கும் நீர்சத்து குறைபாடு பாதிப்பை ஏற்படுத்தும். அக்னி நட்சத்திர காலமான இந்த காலத்தில்
அவர்களை கவனித்து சரியான உணவுகளை தர வேண்டும். அடிக்கடி தண்ணீர் குடிப்பது. தண்ணீர், இளநீர், குளிர் பானம், போன்ற தண்ணீர் நிறைந்துள்ள உணவுகளையும் பழரசங்களையும் அடிக்கடி எடுத்துக்கொளவது அவசியம். இதன் மூலம் உடலில் நீர் தன்மையை சமப்படுத்திக்கொண்டே இருக்கும். மேலும் டீஹைடிரேஷன் ஏற்பட்டுள்ளதாக உணருபவர்கள் டி, காபி, சோடா அருந்துவதை தவிர்க்க வேண்டும்.

உச்சி வெயில் எனப்படும் காலை 11 மணி முதல் மாலை 4 மணி வரை வெயிலில் குழந்தைகள், முதியோர்கள் செல்வதை தவிர்க்க வேண்டும் என்றும் மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். அடிக்கடி தண்ணீர் குடிக்கலாம் , நீர் சத்து அதிகம் உள்ள உணவு எடுத்துக்கொள்வது, தர்பூசணி, வெள்ளரிக்காய், போன்றவை நல்லதாகும். மேலும் வெயிலில் அதிகம் வேலை செய்யும் போது கவனமாக இருக்க வேண்டும். முதியவர்களும், குழந்தைகளும் மிக ஜாக்கிரதையா இருக்க வேண்டும், மேலும் அவர்களுக்கு சரியான அளவு நீர் உள்ளதா என்று பார்த்து பெற்றோர்கள் கவனமாக பார்த்து சரியான உணவுகளை தர வேண்டும் எனவும் மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.


Click it and Unblock the Notifications
