மண்ணீரல் வீக்கம்.. இந்த அறிகுறி இருந்தால் கவனமாக இருக்கணும்.. தக்காளியை தொடாதீங்க, ஆப்பிளை விடாதீங்க
சென்னை: மண்ணீரல் வீக்கம் என்றால் என்ன? இந்த பிரச்சனை எதனால் வருகிறது? இதற்கான அறிகுறிகள் என்னென்ன தெரியுமா? இதோ சுருக்கமாக பார்க்கலாம்.
மண்ணீரல், அடிவயிற்றில் அமைந்துள்ளது.. அதாவது, இடது விலா எலும்புகளுக்கு பின்புறம் அமைந்துள்ளது.. மென்மையான இந்த உறுப்புதான், பல்வேறு தலையாய பணிகளை செய்கிறது. குறிப்பாக, ரத்தத்தை வடிகட்டி, சிவப்பு, வெள்ளை ரத்த அணுக்களை பராமரிக்கிறது மண்ணீரல்கள்.. மேலும், உடலை தாக்கும் நோய் கிருமிகளிடமிருந்து பாதுகாப்பினையும் வழங்குகிறது.

குறைபாடுகள்: அதேபோல, பழைய மற்றும் குறைபாடுள்ள ரத்த சிவப்பணுக்களை அழிக்கும் பிரதான பணியையும் இந்த மண்ணீரலில்தான் செய்கிறது.. அத்துடன், ரத்த சிவப்பணுக்களை சேமிக்கும் பணியும் இந்த மண்ணீரலுடையதுதான்.
மண்ணீரல் வீக்கம் என்பது எதனால் ஏற்படுகிறது தெரியுமா? கல்லீரல் நோய்கள் இருந்தால் அல்லது, வைரஸ் நோய்கள் உடலை தாக்கினால் மண்ணீரல் வீக்கம் ஏற்படலாம்.. மலேரியா போன்ற ஒட்டுண்ணிகளால் ஏற்படும் தொற்றுகள் காரணமாகவும் மண்ணீரல் வீக்கம் ஏற்படலாம்.. ரத்த சிவப்பணுக்களை அழிக்கக்கூடிய ரத்த சோகையினாலும் இந்த வீக்கம் வரலாம்.
உடல் எடை: உடல் எடை குறைவது, மஞ்சள் காமாலை, மூக்கு அல்லது வாயிலிருந்து ரத்தக்கசிவு, மலம் கழிக்கும் போது கடுமையான வயிற்று வலி, வலது பக்க அடிவயிற்றின் மேல் பகுதியில் வலி, மூச்சு விடுவதில் சிரமம் போன்றவையெல்லாம் மண்ணீரல் வீக்கத்துக்கான அறிகுறியாகும். சிலசமயம், இடது தோள்பட்டையிலும் வலி ஏற்படலாம்.
இந்த அறிகுறிகள் இருந்தாலோ, அல்லது இடது மேல் வயிற்றில் வலி அதிகமாக இருந்தாலோ, மூச்சுவிடும்போது வலி அதிகமானாலோ உடனடியாக டாக்டரை சந்திக்க வேண்டும். இவைகளை அலட்சியப்படுத்தினால், ரத்த சோகை தீவிரமாகிவிடும்.. தொற்றுகளால் நிறைய ஆபத்துகள் ஏற்பட்டுவிடும்.. எனவே, ஆரம்பத்திலேயே மருத்துவர்களின் ஆலோசனையை பெறுவது நல்லது.
குளிர்ச்சி உணவு: அதேசமயம், உணவு விஷயத்திலும் சற்று கவனம் செலுத்த வேண்டும். ஒழுங்கற்ற உணவுப்பொருட்களை கைவிட வேண்டும்.. சுருக்கமாக சொல்ல வேண்டுமானால், கணையத்தை அதிக வேலை செய்ய தூண்டும் உணவுகளை தவிர்க்க வேண்டும்..
அதிக குளிர்ச்சியான உணவுகளையும், அதிக தித்திப்பு உணவுகளையும் தவிர்க்க வேண்டும்.. செரிமானத்துக்கு தொந்தரவு தரும் இறைச்சியையும் தவிர்க்கலாம்.. சூடான உணவுகளையும் தவிர்க்கலாம். தக்காளியையும் தவிர்க்கலாம்.. காரணம், தக்காளி விதை, மண்ணீரல் வீக்கத்தை அதிகமாக்கிவிடுமாம்.
நார்ச்சத்து: அதற்கு பதிலாக, நார்ச்சத்து நிறைந்த தானியங்கள், பீட்ரூட், கேரட், கீரை வகைகளை நிறைய சேர்த்து கொள்ள வேண்டும். குறிப்பாக, குடைமிளகாயில் வைட்டமின் C உள்ளதால், மண்ணீரல் வீக்கத்துக்கு மிகவும் நல்லது.
இரவில் படுக்கும்முன்பு, ஆப்பிள் சிடர் வினிகரில் பப்பாளி காயை ஊற வைத்து, மறுநாளை காலையில் அதை சிறுசிறு துண்டுகளாக்கி, லேசாக உப்பை தூவி சாப்பிட்டால், வீங்கிய மண்ணீரலுக்கு மிகவும் நல்லது. பப்பாளியை வெறும் வயிற்றில் சாப்பிட்டாலும், மண்ணீரல் வீக்கம் குறையுமும், மண்ணீரல் வலியும் குறையும். மண்ணீரல் ரத்த செல்களிலுள்ள பாக்டீரியாக்களும் வெளியேறிவிடும். மண்ணீரல் வீக்கத்துக்கு நாவல் பழமும் சிறந்த உணவாகும்..
நிணநீர் மண்டலம்: தினமும் அரை டம்ளர் ஆப்பிள் ஜூஸ் குடிப்பதால் நிணநீர் மண்டலம் சுத்தமாவதோடு, மண்ணீரலின் வீக்கமும் குறைய ஆரம்பிக்கும். முக்கால் லிட்டர் தண்ணீரில் 3 ஸ்பூன் சோம்பு, அரை ஸ்பூன் ஓமம் சேர்த்து குடித்து வரலாம்..
பீட்ரூட் ஜூஸில் சிறிது இஞ்சி சாறு கலந்து குடிக்கலாம். இதெல்லாம் வீக்கத்தை அதிகப்படுத்தாமல் இருக்கும் உணவுமுறைகள்தானே தவிர, சிகிச்சை இல்லை. எனவே, உங்கள் டாக்டரை சந்திப்பதே சரியான ஆரோக்கியம்.












Click it and Unblock the Notifications